‘நாகரீகமானதைச் செய்யுங்கள்’ என அம்பிகா இசி உயர் அதிகாரிகளைக் கேட்டுக் கொள்கிறார்

ambigaதேர்தல் ஆணைய (இசி) உயர் அதிகாரிகள் 13வது பொதுத் தேர்தல் நடத்தப்பட்ட  முறையில் தாங்கள் எந்தத் தவறும் செய்யவில்லை என நம்புவதால் பதவி  விலகுமாறு விடுக்கப்படும் வேண்டுகோட்களுக்கு செவிசாய்க்க மறுத்து  வருகின்றனர்.

அவர்கள் தொடர்ந்து பிடிவாதமாக இருப்பதைத் தொடர்ந்து பெர்சே இணைத்  தலைவர் அம்பிகா ஸ்ரீனிவாசன், இசி உயர் அதிகாரிகள் குறைந்த பட்சம்  பின்னோக்கிப் பார்த்து தங்கள் தவறுகளை கௌரவமாக ஒப்புக் கொள்ள வேண்டும்  என வலியுறுத்தியுள்ளார்.

“பொது மக்கள் அவர்கள் மீது நம்பிக்கை வைத்துள்ளனரா என்பதை அவர்கள்  தீவிரமாக சிந்திக்க வேண்டும்,” என மலேசியாகினி தொடர்பு கொண்ட போது  அவர் சொன்னார்.

கூட்டரசு அரசமைப்பின் கீழ் அகோங்-கால் நியமிக்கப்பட்ட இசி ஆணையாளர்கள்  பொது மக்களுடைய நம்பிக்கையைப் பெற்றிருப்பது அவசியமாகும்.

தேர்தல் ஆணையாளர்கள் பதவி துறக்க மாட்டார்கள் என்றும் தங்களைக் குறை  கூறுகின்றவர்கள் தேர்தல் மனுக்களைத் தாக்கல் செய்து இசி தவறு  செய்துள்ளதை  நீதிமன்றத்தில் நிரூபிக்க வேண்டும் என இசி தலைவர் அப்துல் அஜிஸ் முகமட்  யூசோப் கூறியுள்ளார்.

“நாங்கள் அதனை மெய்பிக்க வேண்டியதில்லை. அழியா மை பிரச்னை
எல்லோருக்கும் தெரியும். அந்த மையை வாக்களித்த பின்னர் எளிதாக அழிக்க  முடிந்துள்ளது,” என அம்பிகா சொன்னார்.

அந்தத் தவறுக்கு இசி சுகாதார அமைச்சு மீது பழி போட்டுள்ளது. அந்த மை  அழிக்கப்படாமல் இருப்பதற்கு உதவும் சில்வர் நைட்டிரேட்டை புற்று நோய்  ஆபத்து காரணமாக ஒரு விழுக்காட்டுக்கு மேல் அதனை மையில் கலக்கக் கூடாது என அந்த  அமைச்சு அறிவுரை சொன்னதாக இசி தெரிவித்துள்ளது.

ஆனால் அந்த மையை தான் ஆய்வு செய்ததாகச் சொல்லப்படுவதை சுகாதார  அமைச்சு மறுத்துள்ளது.

 

TAGS: