தண்டா புத்ரா, இண்டர்லாக் ஆகியவற்றை நியாட் ஆட்சேபிக்கும்

niatநியாட் எனப்படும் தேசிய இந்தியர் உரிமை நடவடிக்கைக் குழு, சர்ச்சைக்குரிய  தண்டா புத்ரா திரைப்படம், சர்ச்சைக்குரிய இண்டர்லாக் நாவல் ஆகியவற்றுக்கு  எதிராக அடுத்த திங்கட்கிழமை நாடாளுமன்றக் கட்டிடத்துக்கு முன்பு கூடி  ஆட்சேபிக்க ஏற்பாடு செய்து வருகின்றது.

அன்றைய தினம் 13வது நாடாளுமன்றம் முதன் முறையாக கூடுகின்றது.

மூன்று கோரிக்கைகளுடன் அந்த ஆர்ப்பாட்டம் நடத்தப்படுவதாக நியாட் தலைவர்  தஸ்லீம் முகமட் கூறினார். IPCMC என்ற போலீஸ் புகார்கள், தவறான நடத்தை  மீதான சுயேச்சை ஆணையத்தை அமைக்க வேண்டும் என்பது மூன்றாவது  கோரிக்கை ஆகும்.

1969 இனக் கலவரங்களை அடிப்படையாகக் கொண்ட தண்டா புத்ரா
திரையிடப்படுவது ரத்துச் செய்யப்பட வேண்டும் என்றும் இண்டர்லாக் பிரதிகள்  அழிக்கப்பட வேண்டும் என்றும் நியாட் விரும்புவதாக தஸ்லீம் சொன்னார்.

நாடாளுமன்றக் கட்டிடத்துக்கு முன்பு கூடுவதற்கு இரண்டு நாட்களுக்கு முன்பு  அனுப்பப்பட்ட விண்ணப்பத்துக்கு கோலாலம்பூர் மேயர் அகமட் பெசால்  தாலிப்பின் பதிலுக்காக நியாட் காத்திருக்கிறது.

தஸ்லீம் இன்று கோலாலம்பூர் சிலாங்கூர் சீனர் அசெம்பிளி மண்டபத்தில்  நிருபர்களிடம் பேசினார்.

போக்குவரத்து நெரிசல் ஏற்படாமல் இருக்கும் பொருட்டு அந்த ஆட்சேபத்தில்  200 பேர் மட்டுமே கலந்து கொள்வர் என்றும் அவர் தெரிவித்தார்.