மலேசியாவில் தமிழுக்கு உழைத்தவர்களின் வரலாறு எழுதப்பட வேண்டும்: வழக்கறிஞர் சி.பசுபதி

அண்மையில் (03.10.2011) கோலாலும்பூர் சீன அசெம்பெளி அரங்கில் ‘லிம் லியன் கியோக்: தாய்மொழி கல்வியின் தந்தை’ எனும் மொழிபெயர்ப்பு நூல் வெளியிடப்பட்டது.

தாய்மொழி போராட்ட இயக்கமான தமிழ் அறவாரியமும் லிம் லியன் கியோக் கலாச்சார பண்பாட்டு மையமும் இணைந்து இந்நூலை வெளியிட்டன. ஆங்கிலத்தில் முனைவர் குவா கியா சூங் தொகுத்திருந்த இந்நூலை தமிழில் சு.யுவராஜன் மொழியாக்கம் செய்திருந்தார்.

இரவு 8 மணிக்கு சரியாகத் தொடங்கிய நிகழ்வு இரு பகுதிகளாக நடந்தது. முதல் பகுதிக்கு திரு. கா. ஆறுமுகம் தலைமை தாங்கி வழிநடத்தினார். இதில் திரு.லிம்மை பற்றி முனைவர் தோ கின் வூனும், திரு. கோ. சாரங்கபாணி பற்றி டான்ஶ்ரீ க.குமரனும் உரையாற்றினர்.

முனைவர் தோ தன்னுரையில் லிம் அவர்களின் தாய்மொழி போராட்டத்தைப் பற்றி சுருக்கமாகப் பேசினார். நாட்டின் விடுதலைக்கு முன் சீன அமைப்புகளுக்கு லிம் லியன் கியோக் தலைமை தாங்கி துங்குவிடம் பேச்சைவார்த்தை நடத்திய ‘ மலாக்கா சந்திப்பு’ பற்றியும் அதில் எவ்வாறு தாய்மொழி கல்விக்கான முயற்சியை துங்கு எப்படி தட்டிக் கழித்தார் என்பதையும் சொன்னார்.

இதன் பிறகு விடுதலைக்குப் பின்பான லிம்மின் போராட்டத்தின் உக்கிரம் தாங்காமல் 1961-ல் அவரின் ஆசிரியர் உரிமத்தையும் குடியுரிமையையும் அரசு பறித்தது. இருப்பினும் மனம் தளராமல் 1985-ல் அவர் இறக்கும் வரை தாய்மொழிக்கல்விகாகப் போராடிக் கொண்டே இருந்தார்.

அவரை தொடர்ந்து திரு. கோ. சாரங்கபாணியின் தமிழ்ப் பணிகளை டான்ஶ்ரீ குமரன் பேசினார். உரையின் தொடக்கத்தில் கொஞ்சம் கொஞ்சமாகத் தமிழ்ப்பள்ளிகளின் மூடுவிழாவிற்குத் தன் தலைமுறையின் மொழி மீதான் அலட்சியத்தை காரணமாகச் சொல்லி வருத்தம் தெரிவித்தார்.

விடுதலைக்கு எளிய மக்களால் தொடங்கப்பட்ட பள்ளிகளை விடுதலைக்குப் பின்பான தலைமுறை தொடர்ந்து காக்கக் தவறி விட்டதையும் ஒப்புக் கொண்டார். இருப்பினும் தற்போது தமிழ்ப்பள்ளி வளர்ச்சி குறித்து தமிழ் அறவாரியம் உள்ளிட்ட அமைப்புகள் போராடி வருவதையும் பாராட்டினார். கோ. சாரங்கபாணியைப் பற்றி சொல்லும்போது ‘தமிழ் எங்கள் உயிர்’ நிதியின் மூலம் மலாயாப் பல்கலைகழகத்தில் தமிழ் இடம்பெறுவதை உறுதி செய்ததை நினைவுக் கூர்ந்தார். அதோடு தமிழ் கட்டாயப்பாடமாக இல்லாவிட்டால் தொடர்ந்து இந்நாட்டில் நிலைபெறாதென அச்சம் தெரிவித்து ஈப்போ மாநாட்டில் கோ.சாரங்கபாணி ஆற்றிய உரையைப் படித்து தன் பேச்சை நிறைவு செய்தார்.

நிகழ்வின் இரண்டாவது அங்கமாக நூல் வெளியீடு தொடங்கியது. முதல் அங்கமாக தமிழ் அறவாரியத்தின் தலைவர் சி.பசுபதி சிறப்புரையாற்றி தொடங்கி வைத்தார். தற்போதைய சூழலில் தாய்மொழி கல்வியின் அவசியத்தை முன்னெடுக்க வேண்டிய அவசியத்தை தமிழ் அறவாரியம் தெளிவாக உணர்ந்திருப்பதைச் சொன்னார்.

நம் இனத்தின் போராட்டத்தை இன்னும் செழுமைப்படுத்தும் நோக்கமாக மற்ற இனத்தின் தாய்மொழிக்காகப் போராடியவர்களின் அனுபவங்களைத் தெரிந்து கொள்வதும் முக்கியமாகும். அதன் தொடர்ச்சியாகவே இந்நூல் வெளியிடப்படுகிறது என்றார். இந்நாட்டில் தாய்மொழி கல்விக்காக மற்ற இனத்தாரோடு இணைந்து பணிப்புரிய தமிழ் அறவாரியம் தயாராக உள்ளதையும் தெளிவுப்படுத்தினார்.

நூலை வெளியிடுவதற்கு முன் தலைமை தாங்கி உரையாற்றினார் உமா பதிப்பகம் டத்தோ சோதிநாதன். கோ. சாரங்கபாணியைத் தவிர்த்து தாய்மொழி கல்விக்காக போராடிய முருகு சுப்பிரமணியத்தையும் நாம் மறக்கக் கூடாதென அறிவுறுத்தினார். தற்போது தாய்மொழி கல்விக்கான போராட்டங்களில் முன்னணியில் நிற்கும் தமிழ் அறவாரியத்தின் பணியைப் பாராட்டினார். தொடர்ந்து இத்தகைய நூல்களை மொழிபெயர்க்கும் பணிகளை இளைஞர்களை ஆட்படுத்துவது நல்ல அணுகுமுறை எனச் சொல்லி மொழிபெயர்த்த சு.யுவராஜனுக்கும் பாராட்டு தெரிவித்தார்.

பிறகு முதல் நூலை டத்தோ ஹாஜி தஸ்லீம் டத்தோ சோதிநாதனிடமிருந்து பெற்றுக் கொண்டார். கூட்டத்திற்கு திரளாக வந்தவர்களும் நூல்களை டத்தோ சோதிநாதனிடமிருந்து பெற்றுக் கொண்டனர். நிகழ்வு இரவு 10 மணி அளவில் முடிவடைந்தது. நன்றி தெரிவித்து நிகழ்வை முடிவுக்குக் கொண்டு வந்தார் நிகழ்வை ஒருங்கிணைத்த பூங்குழலி வீரன்.