13வது பொதுத் தேர்தலில் நிகழ்ந்துள்ளதாகக் கூறப்படும் மோசடிகளுக்கு ஆட்சேபம் தெரிவிக்கும் வகையில் பாடாங் மெர்போக்கில் எதிர்ப்பாளர்கள் அமைத்திருந்த கூடாரங்களை அதிகாரிகள் இன்று காலை மணி 4.30 வாக்கில் அகற்றினர்.
அந்தத் திடலிலிருந்து கூடாரங்களை அகற்றும் நடவடிக்கையில் கோலாலம்பூர் மாநகராட்சி மன்ற (DBKL) அமலாக்க அதிகாரிகளும் ஆயுதமேந்திய போலீஸ்காரர்களும் ஈடுபட்டதாக Solidariti Anak Muda Malaysia (Samm) அமைப்பின் தலைவர் பத்ருல் ஹிஷாம் ஷாஹாரின் கூறினார்.
“காலை எட்டு மணிக்குள் பாடாங் மெர்போக்கைக் காலி செய்து விடுவதாக நாங்கள் பின்னிரவு ஒரு மணிக்கு DBKL அதிகாரிகளுக்கு வாக்குறுதி கொடுத்தோம். ஆனால் அவர்கள் அதிகாலை மணி 4.30 வாக்கில் அந்தத் திடலுக்கு ஆயுதமேந்திய போலீசாருடன் வந்து கூடாரங்களைக் கைப்பற்றினர். வன்முறையைப் பயன்படுத்தி உறங்கிக் கொண்டிருந்தவர்களை உதைத்தனர்,” என அவர் இன்று காலை டிவிட்டரில் செய்தி அனுப்பினார்.”
சனிக்கிழமை மாலை நிகழ்ந்த ‘505 கறுப்பு தின’ பேரணிக்குப் பின்னர் 100
எதிர்ப்பாளர்கள் பாடாங் மெர்போக்கில் முகாம்களை அமைத்துக் கொண்டு அங்கு தங்கியிருந்தனர்.