13வது நாடாளுமன்றத்தின் முதல் கூட்டத் தொடர் இன்று காலை தொடங்கியது.
மக்களவை சபாநாயகர் தேர்வு, உறுப்பினர்கள் பதவி உறுதிமொழி எடுத்துக் கொள்வது ஆகியவை இன்றைய முக்கிய நிகழ்வுகளாகும்.
நாடாளுமன்றக் கட்டிடத்துக்கு செல்லும் சாலையில் சீருடையணிந்த 50க்கும் மேற்பட்ட போலீஸ்காரர்கள் நிறுத்தப்பட்டிருந்தனர்.
அருகிலுள்ள பாடாங் மெர்போக்கில் இரண்டு ஆர்ப்பாட்டங்கள் நிகழ்வதால் போலீஸ் பாதுகாப்பு அங்கு வலுவாக இருப்பதாகக் கருதப்படுகின்றது.
சனிக்கிழமை “505 கறுப்புத் தின” பேரணியில் பங்கு கொண்ட சிலர் பாடாங் மெர்போக்கில் முகாம்களை அமைத்துக் கொண்டிருந்தனர். அவர்களை இன்று அதிகாலை மணி 4.30 வாக்கில் கோலாலம்பூர் மாநகராட்சி மன்ற அதிகாரிகள் போலீஸ் துணையுடன் அகற்றினர்.
நியாட் எனப்படும் தேசிய இந்தியர் உரிமை நடவடிக்கைக் குழுவைச்
சேர்ந்தவர்களும் பாடாங் மெர்போக்கிலிருந்து ஊர்வலமாக நாடாளுமன்றக் கட்டிடத்தை நோக்கிச் சென்றனர். அவர்கள் சர்ச்சைக்குரிய ‘இண்டர்லாக்’ நாவல் பிரதிகள் அழிக்கப்பட வேண்டும் என்றும் நாடாளுமன்றம் IPCMC என்ற போலீஸ் புகார்கள், தவறான நடத்தை மீதான சுயேச்சை ஆணையத்தை அமைக்க
வேண்டும் என்றும் கோருகின்றனர்.