கோலாலம்பூர் பாடாங் மெர்போக் திடலில் தங்கள் முகாம்களிலிருந்து அகற்றப்பட்ட 50க்கும் மேற்பட்ட போராளிகள் தங்கள் போராட்டத்தை ஜாலான் பார்லிமெண்டுக்கு இன்று தொடர்ந்தனர்.
அவர்களில் மாணவர் போராளி அடாம் அட்லி அப்துல் ஹலிமும் ஒருவர் ஆவார். நாடாளுமன்றக் கட்டிடத்தை நோக்கிச் செல்லும் முக்கியச் சாலையில் காலை பத்து மணி தொடக்கம் அவர்கள் சாய்ந்து கிடந்தனர்.
நாடாளுமன்ற நுழைவாயிலிலிருந்து 800 மீட்டர் தொலைவில் அமைக்கப்பட்டிருந்த போலீஸ் தடுப்பை அவர்கள் மீற முயன்ற போது பதற்ற நிலை ஏற்பட்டது.
ஆனால் அந்தப் போராளிகள் தடுப்பை மீறிச் செல்ல முடியவில்லை. காரணம் அங்கு 300க்கும் மேற்பட்டவர்கள் காவலுக்கு நிறுத்தப்பட்டிருந்தனர்.
முற்பகல் மணி 11.10 வாக்கில் நிகழ்ந்த அந்தச் சம்பவத்தில் முகமட் சாப்வான் அனாங் என்ற மாணவர் போராளி ஒருவர் உட்பட 26 பேர் தடுத்து வைக்கப்பட்டனர்.
அவர்களில் எட்டுப் பேர் போலீசாரிடம் தாங்களாகவே சரணடைந்தனர்.