புகை மூட்ட நெருக்கடியால் மூவாரிலும் மலாக்காவிலும் ஊரடங்கை விதிக்கும் போது தொழிலாளர்களையும் அதில் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் சேர்த்துக் கொள்ள வேண்டும் என தேசிய வங்கி ஊழியர் சங்கம் கூறுகிறது.
காற்றுத் தூய்மைக் கேட்டுக் குறியீடு ‘மிகவும் அபாயகரமான’ அளவை எட்டிய பகுதிகளில் பள்ளிக் கூடங்களை மூடுவது மட்டும் போதாது என அதன் செயலாளர் ஜே சாலமன் சொன்னார்.
“பெற்றோர்கள் வேலைக்குச் செல்லும் போது பிள்ளைகள் அபாயகரமான காற்று மண்டலச் சூழ்நிலையை எதிர்நோக்க வேண்டியிருக்கும். அது வீட்டில் இருக்கும் பிள்ளைகளுக்கு நல்லதல்ல,” என்றார் அவர்.
மலேசியா கடந்த ஆண்டு அனைத்துலக தொழிலாளர் நிறுவனத்தின் வேலையிடப் பாதுகாப்பு, சுகாதார மாநாட்டு ஒப்பந்தத்தை அங்கீகரித்திருப்பதால் தொழிலாளர்களை நோயிலிருந்து பாதுகாக்க வேண்டிய தார்மீகப் பொறுப்பு அதற்கு உள்ளது என்றும் சாலமன் விடுத்த அறிக்கை தெரிவித்தது.