குழந்தைகள் மதம் மாற்றம் மீதான இஸ்லாமிய சட்ட நிர்வாகத்திற்கு (கூட்டரசுப் பிரதேசம்) முன்மொழியப்பட்டுள்ள திருத்தங்கள் “கூட்டரசு அரசமைப்பில் பொறிக்கப்பட்டுள்ள மனிதர்கள் சமமானவர்கள்” என்ற கூற்றை அப்பட்டமாக மீறுவதாகும் என்று கத்தோலிக்க ஆயர் டாக்டர் பால் தான் சீ இங் வருணித்துள்ளார்.
‘parents’ (பெற்றோர்கள்) என்ற சொல்லுக்குப் பதில் ‘parent’ (பெற்றோர்) என்ற சொல்லை பயன்படுத்துவதற்கு வகை செய்யும் அந்தத் திருத்தங்கள் இந்த வாரத் தொடக்கத்தில் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டன. அந்தத் திருத்தங்கள்
மூலம் 18 வயதுக்கு உட்பட்ட பிள்ளைகளை தந்தை அல்லது தாய் அல்லது பாதுகாவலர் தேர்வு செய்யும் ஒரு மதத்திற்கு மாற்ற முடியும்.
‘parent’ என்னும் சொல் கூட்டுப் பெயர்ச் சொல் என்பது அந்தத் திருத்தங்களைத் தயாரித்தவர்களுக்கு நன்கு தெரிந்திருக்கும் வேளையில் அதற்கான அர்த்தம் என வரும் போது தந்தை அல்லது தாய் அல்லது பாதுகாவலர் எனக் கட்டுப்படுத்துவது அவர்களுக்கு தீய நோக்கம் உள்ளதா எனச் சந்தேகிக்க வைக்கிறது என்றும் ஆயர் பால் தான் சொன்னார்.
“பெற்றோர்களில் ஒருவர் மட்டும் குழந்தைகளை மதம் மாற்றம் செய்ய முடியாது என 2009 ஏப்ரல் 23ல் அமைச்சரவை அறிவித்த முடிவுக்கு மாறாகவும் அந்தத் திருத்தங்கள் அமைந்துள்ளன,” என்றார் அவர்.
தீய நோக்கம் உள்ளது என்பதே இந்தத் திருத்தங்கள் மூலம் மெய்ப்பிக்கப் படுகின்றது. ஏப்ரில் 23, 2009 – ல் அமைச்சரவை அறிவித்த முடிவை இப்போது அவர்களே மீறுகிறார்கள்.
இது அரசியல் அமைப்பில் வழங்கப்பட்டுள்ள சமய உரிமையை பறிக்கும் செயல். இது இதற்கு முன் நாட்டளுமன்றத்தில் எடுக்கப்பட்ட முடிவிற்கு நேர்மாறானது. புதிய நாடாளுமன்றத்தின் முதல் கூட்டத்திலேயே இப்படிபட்ட பாதகமான சட்ட திருத்தத்தைக் கொண்டு வர முனைவதன் நோக்கம் என்ன? மலேசிய மக்கள் ஞாபக மறதிக்காரர்கள், அடுத்த தேர்தலுக்குள் இதை மறந்து விடுவார்கள் என்று அரசாங்கம் நினைக்கிறதா? தங்கள் நாடாளு மன்ற உறுப்பினர் இந்த சட்ட திருத்தத்தை எதிர்க்க வேண்டும் என ஒவ்வொரு தொகுதியிலும் உள்ள வாக்காளர்கள் வலியுறுத்த வேண்டும்.