நாடு முழுவதும் வாக்குச் சாவடிகளாக பயன்படுத்தப்படுவதற்குத் தேர்வு செய்யப்பட்டுள்ள பள்ளிக்கூடங்களுக்கு அவை அமைந்துள்ள தொகுதிகளின் தேர்தல் அதிகாரிகள் அதிகாரப்பூர்வமாக தகவல் தெரிவித்துள்ளனர். அதனால் திடீர் தேர்தல்கள் எந்த நேரத்திலும் நடக்கலாம் என்னும் ஊகங்கள் வலுவடைந்துள்ளன.
அதற்கான கடிதங்கள் இந்த மாதத் தொடக்கத்தில் அனுப்பப்பட்டுள்ளன. வாக்களிப்பு மைய தலைவர்களாகவும் தேர்தல் குமாஸ்தாக்களாகவும் தங்களை பதிந்து கொள்ளுமாறும் ஆசிரியர்களுக்கும் மற்ற பள்ளிக்கூட ஊழியர்களுக்கும் அந்தக் கடிதங்களில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
“நான், 12வது மக்களவையின் தவணைக் காலம் முடிவதற்கு முன்னதாக எந்த நேரத்திலும் நடத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படும் 13வது பொதுத் தேர்தலை ஒட்டி இந்த நாடாளுமன்றத் தொகுதியின் தேர்தல் அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளேன்.”
“உங்கள் பள்ளிக்கூடம் அடுத்த பொதுத் தேர்தலில் வாக்குச்சாவடியாக பயன்படுத்தப்படுவதற்கு தெரிவு செய்யப்பட்டுள்ளது என உங்களுக்கு தகவல் தெரிவிக்கிறேன்.”
தேர்தல் குமாஸ்தாக்களாக பணிபுரிவதற்கு விருப்பம் உள்ளவர்களுடைய பட்டியலை பள்ளிக்கூடங்கள் வழங்குவதற்கு இன்று கடைசி நாளாகும் என்று அடையாளம் தெரிவிக்க விரும்பாத சில ஆசிரியர்கள் கூறினர்.
தேர்தல் குமாஸ்தாக்கள் மீது முடிவு செய்வதற்காக சில பள்ளிக் கூடங்கள் இந்த வாரம் கூட்டங்களையும் நடத்தியுள்ளதாகவும் தெரிகிறது. தேர்தல் குமாஸ்தாக்களுக்கு 500 ரிங்கிட் வரையில் அலவன்ஸ்கள் கிடைக்கும்.
தேர்தல் குமாஸ்தாக்களுக்குப் பயிற்சி அளிப்பதை தான் ஏற்கனவே தொடங்கி விட்டதை தேர்தல் ஆணையச் செயலாளர் கமாருதின் முகமட் பாரியா மலேசியாகினி தொடர்பு கொண்ட போது உறுதிப்படுத்தினார்.
சிலாங்கூரில் பயிற்சிகள் இன்று தொடங்கின. மற்ற மாநிலங்களில் அடுத்தடுத்து நடைபெறும்,” என்றார் அவர்.
பள்ளிக்கூட மண்டபங்கள் பற்றி எந்த உத்தரவும் இல்லை
இவ்வாண்டு இறுதி வரை தங்கள் மண்டபங்களை வாடகைக்கு விட வேண்டாம் என பள்ளிக்கூடங்களுக்கு உத்தரவு அனுப்பப்பட்டுள்ளதாகக் கூறப்படுவது பற்றி வினவப்பட்ட போது அத்தகைய உத்தரவு ஏதும் அனுப்பப்படவில்லை எனக் கமாருதின் சொன்னார்.
“நாங்கள் எந்த உத்தரவையும் வெளியிடவில்லை. தேர்தல் எப்போது நடத்தப்படும் என்பது கூட எங்களுக்குத் தெரியாது”, என்றார் அவர்.
“பெரும்பாலான இடங்களில் வகுப்பறைகள் மட்டுமே வாக்களிப்பு மையங்களாக பயன்படுத்தப்படுகின்றன. மேசைகளையும் நாற்காலிகளையும் மட்டுமே தேர்தல் ஆணையம் ஏற்பாடு செய்கிறது.”
வாக்களிப்பு தினத்தன்று காலையில் தான் வாக்குச் சீட்டுக்களும் வாக்குப் பெட்டிகளும் வாக்களிப்பு மய்யங்களுக்கு அனுப்பப்படுகின்றன,” என்றார் அவர்.