பாங்கியில் நேற்று அந்நியர்களுக்கு குடியுரிமை வழங்கப்படுவதாக கூறப்பட்ட நடவடிக்கையில் தான் சம்பந்தப்பட்டுள்ளதாக பாஸ் கூறுவதை தேசியப் பதிவுத் துறை மறுத்துள்ளது.
“கடந்த இரண்டு அல்லது மூன்று நாட்களில் எந்த நடவடிக்கை குறித்த தகவலும் இது வரையில் இல்லை,” என அந்தத் துறையின் பொது உறவு அதிகாரி ஜாய்னிஷா முகமட் நோர் கூறினார்.
பாங்கியில் உள்ள ஒய்வுத் தலத்துக்குச் செல்லும் முன்னர் புத்ராஜெயா பள்ளிவாசலில் ஆறு பஸ்களில் வந்த அந்நியர்களை தேசியப் பதிவுத் துறை அதிகாரிகள் சந்தித்ததாக சொல்லப்படுவதையும் அவர் நிராகரித்தார்.
“எங்கள் அதிகாரிகள் அந்நியர்களைச் சந்தித்தாக சொல்லப்படுவது…. அத்தகைய தகவல் ஏதுமில்லை… அப்படி ஒன்றும் நடக்கவில்லை.”
அந்நியர்களுக்கு நீல நிற மை கார்டுகளை வழங்குவதில் கும்பல் ஒன்று ஈடுபட்டுள்ளதாக கூறப்படுவதையும் அவர் மறுத்தார்.
“நாங்கள் சம்பந்தப்படவில்லை. காரணம் நாட்டின் சட்டங்களுக்கு இணங்க நீங்கள் எளிதாக குடியுரிமையை வழங்க முடியாது,” என ஜாய்னிஷா சொன்னார்.
நேற்று 240 அந்நியர்களுக்கு குடியுரிமைத் தகுதி வழங்கப்படுவதாக கூறிய பாஸ் ஆதரவாளர்கள் பாங்கி ஒய்வுத் தலம் ஒன்றுக்கு வெளியில் கண்காணிப்புப் பணியை மேற்கொண்டனர்.
பாஸ் ஆதரவாளர்கள் புறப்பட்ட சில மணி நேரத்தில் போலீஸ் கண்காணிப்புடன் அந்தப் பஸ்கள் அந்நியர்களை வெளியே கொண்டு சென்றன.