ஆடிட்டர் ஜெனரலின் அறிக்கை எங்கே?

பட்ஜெட் 2012 நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படுவதற்கு இரண்டு வாரங்களுக்கு முன்பே தேசிய கணக்காய்வர் (ஆடிட்டர் ஜெனரல்) அறிக்கை தயாரிவிட்டது. அரசாங்கம் அவ்வறிக்கையை வெளியிடாமல் வைத்திருப்பதின் நோக்கம் குறித்து பக்கத்தான் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இன்று கேள்வி எழுப்பினர்.

நேற்று ஆடிட்டர் ஜெனரலின் அலுவலகத்தை அழைத்து அவ்வறிக்கை குறித்து விசாரித்தாகவும், அது சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் அளிக்கப்பட்டு விட்டதாக தம்மிடம் கூறப்பட்டதாக ஜொஹாரி அப்துல் (பிகேஆர்-சுங்கை பட்டாணி) இன்று செய்தியாளர்களிடம் கூறினார்.

“கடந்த ஆண்டைவிட இவ்வாண்டு அந்த அறிக்கை முன்னதாகவே தயாரிக்கப்பட்டு விட்டதாக அந்த அலுவலகம் கூறியது. நன்கு செய்து முடிக்கப்பட்ட வேலைக்காக அவர்கள் பெருமைப் பட்டனர்…ஆனால் அவற்றின் பிரதிகள் இங்கு நாடாளுமன்றத்தில் இல்லை”, என்று ஜொஹாரி கூறினார்.

“நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அந்த அறிக்கை கிடைக்கவில்லை என்று நான் கூறியபோது அவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்…அப்படியானால், அந்த அறிக்கை எங்கே?”, என்று அவர் கேட்டார்.

“கடந்த ஆண்டுக்கான ஒதுக்கீடுகள் எவ்வாறு செலவிடப்பட்டன என்பது எங்களுக்குத் தெரியாமல் இருக்கும்போது நாங்கள் எப்படி பட்ஜெட் குறித்து மேற்கொண்டு விவாதிக்க முடியும்?”

சில மாநிலங்கள் அந்த அறிக்கையின் பிரதிகளைப் பெற்றுள்ளன, ஆனால் நாடாளுமன்றத்திற்கு கிடைக்கவில்லை என்று பொக்கோக் செனா பாஸ் நாடாளுமன்ற உறுப்பினர் மாபுஸ் ஒமார் கூறினார்.

ஆடிட்டர் ஜெனரலின் அறிக்கை நாட்டின் செலவினங்கள், கடன் மற்றும் ஒப்புமையின்மை ஆகியவற்றோடு நாட்டின் நிதி நிலைமை பற்றிய விபரங்களை பட்டியலிடுகிறது.

நாடாளுமன்ற பொதுக் கணக்கு குழுவின் உறுப்பினரான கமாருடின் ஜப்பார் (பாஸ்-தும்பாட்) பட்ஜெட் குறித்த விவாதத்திற்கு நாடாளுமன்ற உறுப்பினர்கள் தங்களைத் தயார் செய்துகொள்வதற்கு வசதியாக ஆடிட்டர் ஜெனரலின் அறிக்கை உடனடியாக வெளியிடப்பட வேண்டும் என்றார்.

பிரதமர்துறை அமைச்சர் நஸ்ரி அப்துல் அசிஸ் அமைச்சரவை அவ்வறிக்கையை வெள்ளிக்கிழமை பார்த்த பின்னர் இரண்டு வாரத்திற்குள் வெளியிடப்படும் என்று முன்னதாக கூறியிருந்தார்.

அரசாங்கம் அந்த அறிக்கையை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்வதற்கு சட்டப்பூர்வமாக கடமைப்பட்டிருக்கிறது என்று பிகேஆர் பாலிக் புலாவ் நாடாளுமன்ற உறுப்பினர் யுஸ்மாடி யுசுப் கூறினார்.

அந்த அறிக்கையை நாடாளுமன்றத்தில் வெளியிடுமாறு அரசாங்கத்தை கட்டாயப்படுத்தும் மனு ஒன்றை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்வது பற்றி ஆலோசித்து வருவதாக நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூறினர்.