அரசமைப்புச் சட்ட நிபுணர் அப்துல் அசிஸ் பாரி மற்றும் மலேசியாகினிக்கு எதிராக செனட்டர் எஸாம் முகமட் நூர் இன்று (13/10) போலீஸ் புகார் செய்தார்.
செக்சன் 6, ஷா அலாம் போலீஸ் நிலையத்தில் செய்யப்பட்ட அப்புகாரில் மலேசியாகினியில் வெளியிடப்பட்ட அப்துல் அசிஸ்சின் விமர்சனம் தேசநிந்தனையானது மற்றும் அமைதிக்கும் ஒழுங்குக்கும் மிரட்டலானது என்று கூறப்பட்டுள்ளது.
“அசிஸ் பாரி அவமரியாதையாக நடந்து கொண்டதோடு மலாய் அரச அமைப்புக்கு துரோகம் இழைத்துள்ளார். மலேசியாகினியில் வெளியிடப்பட்ட அவரது அறிக்கைகளில் அரச அமைப்புகளை வெறுக்குமாறு அப்துல் அசிஸ் மக்களை தூண்டியுள்ளார்”, என்று அப்புகாரில் கூறப்பட்டுள்ளது.
டாமன்சாரா உத்தாமா மெதடிஸ்ட் தேவாலயத்தில் சிலாங்கூர் இஸ்லாமிய விவகார இலாகா நடத்திய சோதனை குறித்து சிலாங்கூர் சுல்தான் விடுத்த ஆணை குறித்த பேராசிரியரின் அறிக்கை “சிலாங்கூர் இஸ்லாமியர்களுக்கிடையில் சினத்தை” மூட்டியுள்ளது என்று அந்தப் புகார் மேலும் கூறியது.
“(அந்த அறிக்கை) இணக்கம் இன்மைக்கு இட்டுச் சென்றுள்ளதோடு இந்நாட்டின் அமைதியைப் பாதிக்கிறது. அதற்காக, அசிஸ் பாரியும் மலேசியாகினியும் தேசநிந்தனைச் சட்டத்தின் கீழ் விசாரிக்கப்பட வேண்டும் என்று நான் வலியுறுத்துகிறேன்”, என்கிறது அப்புகார்.
அப்பேராசிரியர் சுல்தானை சிலாங்கூர் இஸ்லாமிய விவகாத்திற்கான தலைவர் என்ற முறையில் அவமதித்துள்ளார் என்றும் அப்புகார் கூறுகிறது.
இதே போன்ற தனிப்பட்ட வேறு புகார்களை பக்கத்தான் ரக்யாட் சிலாங்கூர் அரசாங்க எதிர்ப்பு என்ஜிஒ மற்றும் கேப்ஸ் என்ற என்ஜிஒவும் செய்துள்ளன.
“அசிஸ் யுஐஎயில் இருக்கக்கூடாது”
அந்த பேராசிரியருக்கு எதிராக அனைத்துலக இஸ்லாம் பல்கலைக்கழகத்தின் (யுஐஎ) செனட் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று போலீஸ் புகார் செய்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய எஸாம் வலியுறுத்தினார்.
மூத்த பேராசிரியரான அப்துல் அசிஸ் அக்கழகத்திற்கு அவமதிப்பை உண்டாக்கியுள்ளதால் அவர் “அங்கு இருக்கக்கூடாது” என்றாரவர்.
முன்பு பிகேஆர் இளைஞர் பிரிவு தலைவரான எஸாம், அப்துல் அசிஸ்சின் அறிக்கை வெளியிடப்பட்டது “திட்டமிடப்பட்ட ஒரு தீய திட்டத்தின்” ஒரு பாகமாகும் என்று மேலும் கூறினார்.
“அரச மற்றும் சமய அமைப்புகளுக்குச் சவால் விடும் செய்திகளை மலேசியாகினி வெளியிட்டது இது முதல் தடவை அல்ல.
“தேசிய அமைப்புகளைப் பலவீனப்படுத்தும் செய்திகளை வெளியிடுவதற்கு (அந்த இணையதளம்) ஒவ்வொரு நிமிடத்தையும், ஒவ்வொரு வினாடியையும் செலவிடுகிறது என்று நான் நம்புகிறேன்”, என்றார் எஸாம்.