பாஸ் கட்சி கூறிக்கொள்வதுபோல் அந்நியர்கள் குடியுரிமை பெறுவதற்காக பாங்கி ஓய்வுத்தலத்துக்குச் செல்லவில்லை. அவர்கள் “தொழில்முனைவர் பயிற்சி” ஒன்றில் கலந்துகொள்ளவே அங்கு சென்றனர்.செப்பாங் ஓசிபிடியை மேற்கோள்காட்டி சினார் ஹரியான் இவ்வாறு தெரிவித்துள்ளது.
“எங்களுக்குக் கிடைத்த தகவலின்படி அன்று டேசா பெங்கிரான் புத்ராவில் இருந்த அந்நியர்கள் அனைவரும் தொழில்முனைவர் பயிற்சியில் கலந்துகொள்ளச் சென்றவர்கள் என்பது தெரிய வருகிறது”, என்று சுப்பிரெண்டெண்ட் இம்ரான் அப்துல் ரஹ்மான் கூறினார்.
மலாய் மெய்ல் செய்தி ஒன்று, சுமார் 240 அந்நியர்கள் குடியுரிமை வழங்கப்படுவதற்காக தேசிய பதிவுத்துறை (என்ஆர்டி)க்கு அழைத்துவரப்பட்டிருப்பதாக போலீஸ் புகார் செய்யப்பட்டிருப்பதை இம்ரான் உறுதிப்படுத்தினார் என்று கூறியது.
ஆனால், விசாரிக்கப்பட்டதில் அதில் உண்மை இல்லை என்பது தெரிய வந்ததாகவும் அது குறிப்பிட்டது.
“சம்பந்தப்பட்டவர்கள் கூறிக்கொள்வதுபோல், அவர்கள் என்ஆர்டி-க்கு அழைத்து வரப்படவில்லை”, என்று இம்ரான் கூறினார்.
என்ஆர்டியும் அந்தக் கூற்றுகளை மறுத்தது. கடந்த சில நாள்களில் அப்படிப்பட்ட நிகழ்வு எதையும் தான் நடத்தவில்லை என்றது கூறியது.
புதன்கிழமை பாஸ் ஆதரவாளர்கள், பாங்கி ஓய்வுத்தலைத்தில் சுமார் 240 அந்நியர்களுக்கு குடியுரிமைகள் வழங்கப்படுவதாகக் கூறிக்கொண்டு அதைக் கண்காணித்து வந்தார்கள்.
அங்கிருந்த அந்நியர்களை ஏற்றிசெல்ல ஆறு பேருந்துகள் வந்தன.சில மணி நேரம் காத்திருந்துவிட்டு பாஸ் ஆதரவாளர்களும் கலைந்து சென்றனர்.