மலாய்மொழி பைபில் குறித்து போலீசில் புகார்

சிலாங்கூரில் செயல்படும் அரசுசாரா அமைப்பு (என்ஜிஓ) ஒன்று புழக்கத்தில் உள்ள மலாய் மொழி பைபில் முஸ்லிம்களின் சமய நம்பிக்கைக்கு ஊறு செய்யும் என்று போலீஸில் புகார் செய்திருக்கிறது என உத்துசான் மலேசியா அறிவித்துள்ளது.

நேற்று  ஷா ஆலம் மாவட்ட போலீஸ் தலைமையகத்தில் செய்த புகாரில், பைபிலில் இறைவன் என்பதற்கு “அல்லாஹ்” என்ற சொல்லே பயன்படுத்தப்பட்டிருப்பதாக சிலாங்கூர் தன்னார்வலர் அமைப்புகளின் கூட்டுமன்றம் கூறியுள்ளது.

“இதில் மேலும் கவலைதரும் விசயம் என்னவென்றால், ஒரு மலாய் முஸ்லிம் இளைஞனிடமிருந்துதான் அந்த பைபில் எங்களுக்குக் கிடைக்கப்பெற்றது. அவன் கிள்ளான் பள்ளி மாணவன். அங்கு இந்த பைபில் இலவசமாக விநியோகிக்கப்பட்டிருக்கிறது”, என அந்த என்ஜிஓ-வின் துணைத் தலைவர் இப்ராகிம் ஜாப்பார் தெரிவித்ததாக உத்துசான் கூறியது.

அண்மையில் சிலாங்கூர் சுல்தான் வெளியிட்ட அறிக்கையொன்றைச் சுட்டிக்காட்டிய அந்த என்ஜிஓ அதற்கேற்கிணங்க முஸ்லிம்களை மதமாற்றம் செய்யும் முயற்சிகளுக்கு எதிராக போலீஸ் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியது.

மலாய்மொழி பைபில், அதுவும் முஸ்லிம்-அல்லாதார் “அல்லாஹ்” என்னும் சொல்லைப் பயன்படுத்துவது நாட்டில் எப்போதுமே சர்ச்சைக்குரியதாக இருந்து வந்துள்ளது. அச்சொல் “குழப்பத்தை” உண்டுபண்ணலாம் என்று வலச்சாரி முஸ்லிம் தரப்புகள் கடும் எதிர்ப்புத் தெரிவித்து வந்துள்ளனர்.

அசீஸ் பாரி, மலேசியாகினிமீதும் போலீஸ் புகார்

“அல்லாஹ்”  என்ற சொல்லுக்கு உள்துறை அமைச்சு தடைவிதித்தது சட்டவிரோதமானது என உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்புக்கு எதிராக வாதங்களும் எதிர்வாதங்களும் நிறைய நிகழ்ந்தன. அதன் விளைவாக சில தேவாலயங்கள்மீது தீக்குண்டுகளும் வீசி எறியப்பட்டன.

அதே செய்தி அறிக்கையில், இன்னொரு போலீஸ் புகார் செய்யப்பட்டிருப்பதாகவும் உத்துசான் கூறியது.  சிலாங்கூர் சுல்தானின் அறிக்கையை விமர்சனம் செய்த சட்ட விரிவுரையாளர் அப்துல் அசீஸ் அப்துல் பாரிக்கும் மலேசியாகினி செய்தித்தளத்துக்கும் எதிராக புகார் செய்யப்பட்டிருப்பதாக அந்த என்ஜிஓ-வின் செயலாளர் முகம்மட் ஜோஹாரி ஜைன் குறிப்பிட்டதாக அது கூறியது.

டமன்சாரா உத்தாமா மெதடிஸ்ட் தேவாலயத்தில் ,மதமாற்றம் நடப்பதாக சந்தேகித்து சிலாங்கூர் இஸ்லாமிய விவகாரத் துறை(ஜயிஸ்) அதிரடிச் சோதனை நடத்திய விவகாரத்தில் சுல்தான் தலையிட்டது “வழக்கத்துக்குமாறானது” என்று அப்துல் அசீஸ் தெரிவித்த கருத்துகளால் அத்தரப்பினர் ஆத்திரமடைந்துள்ளனர். 

ஆனால், அசீஸ் தம் கருத்தில் உறுதியாக இருக்கிறார். ஆட்சியாளர்கள் விமர்சனத்துக்கு அப்பால் பட்டவர்கள் அல்லர் என்பதும் ஆட்சியாளர் அமைப்பு கூடாது என்று வாதிப்பதுதான் தப்பு என்பதும் அவருடைய கருத்தாகும்.