‘தடுப்புக் காவல் மரணங்களை தடுக்க இன்னும் நிறைய செய்ய வேண்டும்’

policeமலேசியாவில் கடந்த ஆண்டு நிகழ்ந்துள்ள 9 போலீஸ் தடுப்புக் காவல்  மரணங்களுடன் ஒப்பிடுகையில் இவ்வாண்டு இது வரை அத்தகைய 12 மரணங்கள்  நிகழ்ந்துள்ளன.

அதனால் அத்தகைய மரணங்களை தடுப்பதற்கு மலேசிய அதிகாரிகள் தங்கள்  வளங்களைப் பயன்படுத்த வேண்டும் என அனைத்துலக மன்னிப்பு அமைப்பும்  சுவாராமும் கேட்டுக் கொண்டுள்ளன.

உள்துறை அமைச்சர் அகமட் ஸாஹிட் ஹமிடிக்கு அனுப்பியுள்ள திறந்த மடலில்  அவை அவ்வாறு கேட்டுக் கொண்டன.

தடுப்புக் காவல் மரணங்கள் கூடுவது பற்றி அவை கவலை தெரிவித்ததுடன் அது  ‘அதிர்ச்சி’ அளிப்பதாகவும் வருணித்தன.

“அத்தகைய மரணங்களைத் தடுக்கவும் கண்காணிக்கவுன் போதுமான
நடைமுறைகள் இல்லை என்பதையே அது உணர்த்துகின்றது,” என
மலேசியாவுக்கான அனைத்துலக மன்னிப்புக் கழகத்தின் பரப்புரையாளர் ஹேஸல்  காலாங் கூறினார்.

ஈராயிரத்தாவது ஆண்டு தொடக்கம் 230க்கும் மேற்பட்ட தடுப்புக் காவல்
மரணங்கள் நிகழ்ந்துள்ளதாக மலேசிய நாடாளுமன்றத்தில்
தெரிவிக்கப்பட்டுள்ளதையும் அந்த மனித உரிமைப் போராட்ட அமைப்புக்கள்  சுட்டிக் காட்டின.