பிரிட்டன் தலைநகர் லண்டனில் தொடரும் கலவரம் மூன்றாவது நாளான நேற்று அந்நாட்டின் இதர நகரங்களுக்கும் பரவியது. இதையடுத்து, இத்தாலியில் விடுமுறையை அனுபவித்து வந்த பிரிட்டன் தலைமையமைச்சர் டேவிட் கேமரூன் உடனடியாக நாடு திரும்பியதுடன் நாடாளுமன்றத்தை அவசரமாக கூட்டி ஆலோசனை நடத்தினார்.
கடந்த மூன்று நாட்களுக்கு முன், லண்டனில் உள்ள டோட்டன்ஹேம் பகுதியை சேர்ந்த மார்க் டக்கன், காவல்துறையினரால் சுட்டுக் கொல்லப்பட்டார். அவரது சாவுக்கு நீதி கேட்டு, பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அந்த ஆர்பாட்டத்தின்போது, காவல்துறையினருக்கும், பொதுமக்களுக்கும் இடையே ஏற்பட்ட மோதல், கலவரமாக வெடித்தது. இதையடுத்து, டோட்டன்ஹேம் நகரின் பல இடங்களில் உள்ள வணிக வளாகங்கள், ஏ.டி.எம். இயந்திரங்கள் போன்றவை தீ வைத்து எரிக்கப்பட்டன.
டோட்டன்ஹேம் பகுதி முழுவதும் ஏராளமான காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், டோட்டன்ஹேமில் ஏற்பட்ட கலவரம் படிப்படியாக, லண்டனின் பிறபகுதிகளுக்கும் பரவியது.
பார்க்கும் இடங்களில் எல்லாம், வணிக வளாகங்கள், தங்கும்விடுதிகள், ஏ.டி.எம். இயந்திரங்கள் அனைத்தையும் கலவரக்காரர்கள் தீ வைத்து எரித்ததுடன், அடித்து நொறுக்கினர். சாலைகளில் சென்ற வாகனங்கள் குறிப்பாக, காவல்துறை வாகனங்கள் மீதும் தாக்குதல் நடத்தினர்.
பல இடங்களில், முகமூடி அணிந்த நபர்கள் கும்பல் கும்பலாக கடைகளில் புகுந்து பொருட்களை கொள்ளையடித்துச் சென்றுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.