டோனி புவா: எம்ஆர்டி நிலத்தைக் கையகப்படுத்துவது மீதான குழப்பத்தைத் தெளிவுபடுத்துக

 சுரங்க வேலைகளுக்காக எந்த நிலமும் கட்டாயமாக கையகப்படுத்தப்பட மாட்டாது என்ற் அறிக்கை மீதான தங்களது “அதிகாரத்துவ நிலையை’ தெளிவுபடுத்துமாறு எம்ஆர்டி திட்ட உரிமையாளர்களை எதிர்த்தரப்பு நாடாளுமன்ற உறுப்பினரான டோனி புவா கேட்டுக் கொண்டுள்ளார்.

அந்தத் திட்டத்தினால் பாதிக்கப்பட்ட நில உரிமையாளர்கள், அரசாங்கம் வழங்க முன்வந்த ஏற்பாட்டை ஏற்றுக் கொண்டு தற்காலிகமாக வேறு இடத்துக்கு மாற வேண்டும் இல்லை என்றால் நிலம் கையகப்படுத்தப்படக் கூடிய சூழ்நிலையை எதிர்நோக்க வேண்டும் என எம்ஆர்டி நிறுவன தலைமை நிர்வாக அதிகாரி அஸ்ஹார் அப்துல் ஹமிட் அறிக்கை விடுத்துள்ளதைத் தொடர்ந்து புவா அவ்வாறு கேட்டுக் கொண்டுள்ளார்.

அந்த அறிக்கை மேற்பரப்பு நிலம் சம்பந்தப்பட்ட உரிமையாளர்களுக்கு மீண்டும் ‘திருப்பிக் கொடுக்கப்படும்’ என்பதற்கு உத்தரவாதம் இல்லை என பிரதமர் துறை துணை அமைச்சர் அகமட் மாஸ்லான் கூறியதற்கு மாறாக அமைந்துள்ளது என புவா சொன்னார்.

“ஆகவே சந்தேகங்களைப் போக்குவதற்கு எம் ஆர் டி நிறுவனம் எம் ஆர் டி திட்டத்துக்கான சுரங்க வேலைகளுக்கு மேற்பரப்பில் உள்ள எந்த நிலமும் கட்டாயமான கையகப்படுத்தப்பட மாட்டாது  என்ற அதிகாரத்துவ நிலையை வெளியிட வேண்டும்.”

“எம்ஆர்டி நிலையங்களைக் கட்டுவதற்கும் காற்று வெளியாவதற்கான வழிகளைக் கட்டுவதற்கும் நுழைவாயில்களைக் கட்டுவதற்கும் மட்டுமே நிலம் கையகப்படுத்தப்பட வேண்டும்.”

“அரசாங்கம், ஆதாயம் அடைவதற்காக எந்த நிலமும் கையகப்படுத்தப்படக் கூடாது”, என பெட்டாலிங் ஜெயா உத்தாரா எம்பி-யுமான டோனி புவா சொன்னார்.

கடந்த 10 வாரங்களாக நீடிக்கும் சர்ச்சைக்கு முடிவு கட்டிய அறிக்கைக்காக அவர் அஸ்ஹாருக்கு நன்றி தெரிவித்துக் கொண்டார்.