600,000 அந்நியர்களுக்கு குடியுரிமை பெற்றுக் கொடுத்ததாக கூறப்படும் கும்பல் ஒன்று குறித்து புலனாய்வு செய்யுமாறு ஜிங்கா 13 என்ற அரசு சாரா அமைப்பு ஒன்று தேசியப் போலீஸ் படைத் தலைவர் இஸ்மாயில் ஒமாருக்கு மனுக் கொடுத்துள்ளது.
அந்த அமைப்பைச் சார்ந்த உறுப்பினர்கள் அதன் ஒருங்கிணைப்பாளர் பேரிஸ் மூசா தலைமையில் புக்கிட் அமானில் உள்ள கூட்டரசுப் போலீஸ் தலைமையகத்தில் நேற்று மாலை அந்த மனுவைச் சமர்பித்தனர்.
அந்த மனுவை புக்கிட் அமான் நுழைவாயிலில் போலீஸ் அதிகாரியான டிஎஸ்பி வேணுகோபால் பெற்றுக் கொண்டார்.
நாட்டுக்கு இழைக்கப்பட்டுள்ள “தேசத் துரோகம்” எனத் தான் கருதும் “அந்த காரியத்துக்கு” எதிராக கடும் நடவடிக்கை எடுக்குமாறு ஜிங்கா அமைப்பு தேசியப் போலீஸ் படைத் தலைவரைக் கேட்டுக் கொண்டது.
தகவல்களை அம்பலப்படுத்தும் வில்கிலீக்ஸ், செய்தி இணையத் தளமான மலேசியாகினி, இந்தோனிசிய தொலைக்காட்சி நிலையம் ஒன்றின் இணையத் தளம் ஆகியவற்றிலிருந்து அந்தக் காரியத்துக்கான ஆதாரங்களை திரட்டியிருப்பதாக அந்த அமைப்பு குறிப்பிட்டது.
30 ஆண்டுகளில் சபா மக்கள் தொகை 362 விழுக்காடு அதிகரித்தது
வாக்குகளுக்கு ஈடாக 1990ம் ஆண்டுகளில் கிட்டத்தட்ட 600,000 அந்நியர்களுக்குக் குடியுரிமை வழங்கப்பட்டதாக வில்கிலீக்ஸ் வெளியிட்ட அமெரிக்க அரசதந்திரத் தகவல் ஒன்று கூறியுள்ளது.
“அப்போதைய பிரதமர் மகாதீர் முகமட், சபாவை அம்னோ அரசியல் ரீதியில் கைப்பற்றுவதை உறுதி செய்யும் பொருட்டு 1994ம் ஆண்டு மாநிலச் சட்ட மன்றத் தேர்தலுக்கு முன்னதாக அந்தக் காரியத்தை செய்யத் தொடங்கினார்”, என பார்ட்டி பெர்சத்து சபா (பிபிபி) கட்சியின் பேச்சாளர் சொன்னதாக வில்கிலீக்ஸ் தகவல் குறிப்பிட்டது.
30 ஆண்டுகளுக்குள் சபாவின் சட்டப்பூர்வ மக்கள் தொகை 362 விழுக்காடு அதிகரித்து 2.6 மில்லியனாக உயர்ந்தது என்பதை சுஹாக்காம் என்ற மலேசிய மனித உரிமை ஆணையம் கண்டு பிடித்துள்ளதையும் அந்த இணையத் தளம் சுட்டிக் காட்டியது.
அதே வேளையில் அண்டை மாநிலமான சரவாக்கில் மக்கள் தொகை 135 விழுக்காடு மட்டுமே அதிகரித்தது.
அடையாளக் கார்டு திட்டம் ( Project IC ) என அழைக்கப்பட்ட சபா குடியுரிமை அத்தியாயத்தை தொடர்ந்து தேசியப் பதிவுத் துறையின் ஊழியர்கள் உட்பட பல அரசாங்க அதிகாரிகள் உள்நாட்டுப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டனர்.
“வாக்காளர் பட்டியல் புள்ளி விவரக் களஞ்சியத்தில் காணப்படும் போலி அடையாளங்கள்” எனத் தான் கூறிக் கொள்ளும் விஷயங்கள் தொடர்பில் உள்துறை அமைச்சு, தேர்தல் ஆணையம், என்ஆர்டி ஆகியவை மீது ஆழமான ஆய்வை மேற்கொள்ளுமாறும் ஜிங்கா 13, தேசியப் போலீஸ் படைத் தலைவரை அந்த மனுவில் வலியுறுத்தியுள்ளது.