இந்த நாட்டுக்கு விவசாயத் தொழிலாளர் என்னும் வேலை அனுமதியில் வந்த அந்நியத் தொழிலாளர்களுக்கு “முதல் வகுப்பு மரியாதை” கொடுக்கப்பட்டு “தொழில் முனைவர் பயிற்சியில்” பங்கு கொண்டது குறித்து ஜோகூர் பாஸ் கேள்வி எழுப்பியுள்ளது.
அந்த அந்நியத் தொழிலாளர்களுக்குக் கொடுக்கப்பட்ட வேலை அனுமதி அவர்கள் இந்த நாட்டில் வர்த்தகம் செய்வதற்கு அனுமதிக்காத வேளையில் அவர்களுக்கு அந்த பயிற்சி எதற்கு என ஜோகூர் பாஸ் இளைஞர் பிரிவுத் தலைவர் சுஹாய்சான் காயாட் வினவினார்.
“எல்லாவற்றுக்கும் மேலாக விவசாயத் தொழிலாளர் அனுமதியை வைத்துள்ள ஒருவர் இந்த நாட்டில் வர்த்தகம் செய்ய முடியுமா? நம் நாட்டில் அந்நியத் தொழிலாளர்கள் வர்த்தகம் செய்வதற்கு அரசாங்கம் எப்போது முதல் அனுமதி வழங்கத் தொடங்கியுள்ளது?”, என அவர் கேள்வி எழுப்பினார்.
“அந்நியத் தொழிலாளர்கள் எனக் கூறப்படும் அந்த 240 பேரையும் கொண்டு வந்த பஸ் ஒட்டுநர்களிடம் அவர்களை புத்ராஜெயாவில் உள்ள பிரதமர் துறையில் இறக்கி விடுமாறு முதலில் கூறப்பட்டது.”
ஆனால் கடைசி நேரத்தில் அந்த இடம் மாற்றப்பட்டு சிலாங்கூரில் உள்ள பாங்கியில் இருக்கும் ஒய்வுத் தலத்துக்குச் செல்லுமாறு அந்த ஒட்டுநர்களுக்குப் பணிக்கப்பட்டது.
“தொழில் முனைவர் பயிற்சிக்கான இடத்தை ஏற்பாட்டாளர்கள் கடைசி நேரத்தில் ஒர் அரசாங்க இடத்திலிருந்து காஜாங்கில் உள்ள ஒய்வுத் தலம் ஒன்றுக்கு மாற்றப்பட்டதாக கூறப்படுவதை நம்ப முடியவில்லை”, என அவர் சொன்னார்.
வாக்குகளுக்காக குடியுரிமை என்னும் குற்றச்சாட்டு
அந்த பஸ் ஒட்டுநர்களுக்குக் கொடுக்கப்பட்டிருந்த ஒப்பந்த நேரம் அக்டோபர் மாதம் 12ம் தேதி பிற்பகல் 1 மணிக்கு முடிவுக்கு வர வேண்டும் என்றும் சுஹாய்சான் சொன்னார்.
“அவர்கள் காலை ஆறு மணி அளவில் புத்ராஜெயாவை சென்றடைந்தனர். அடுத்து காலை எட்டு மணி தொடக்கம் பிற்பகல் ஒரு மணி வரையில் அதாவது ஐந்து மணி நேரத்துக்கு மட்டுமே அந்தப் பயிற்சி நடந்திருக்க வேண்டும் என்பதே அதன் அர்த்தமாகும்.”
“அது உண்மையென்றால் அந்த 240 பேரும் ஐந்து மணி நேரப் பயிற்சிக்காக ஜோகூர் பாருவிலிருந்து புத்ராஜெயாவுக்கு மொத்தம் 800 கிலோமீட்டரைக் கடந்து கொண்டு வரப்பட்டார்களா? அவர்களுக்கு ஏன் அந்தப் பயிற்சியை ஜோகூர் பாருவிலேயே நடத்தியிருக்கக் கூடாது?”
“இந்த நாட்டில் குறிப்பிட்ட சில அதிகாரிகள் அந்த அந்நியர்களுக்கு சிறப்புச் சலுகை அளிப்பது ஏன்?” என்றும் சுஹாய்சான் வினவினார்.
குடியுரிமை வழங்கப்படுவதற்கான மோசடி என்று கூறப்பட்ட திட்டத்தின் ஒரு பகுதியாக கடந்த புதன்கிழமை இந்தோனிசியர்களையும் வங்காள தேசிகளையும் கொண்டு வந்த பஸ்களை பாஸ் ஆதரவாளர்கள் பின் தொடர்ந்தனர்.
அந்த அந்நியர்கள் அனைவரும் “தொழில் முனைவர் பயிற்சிக்காக” பாங்கி ஒய்வுத் தலத்துக்குக் கொண்டு செல்லப்பட்டனர் என சிப்பாங் ஒசிபிடி அளித்த விளக்கத்தை நேற்று பெரித்தா ஹரியான் வெளியிட்டிருந்தது.
ஆனால் அங்கு போலீசார் காணப்பட்டதும் பயிற்சிக்குக் கடுமையான பாதுகாப்பு போடப்பட்டிருந்ததும் தங்களது சந்தேகத்தை ஏற்படுத்தியதாக பாஸ் உறுப்பினர்கள் கூறிக் கொண்டனர்.