ரிம24 மில்லியன் மோதிரம் தொடர்பில் தரப்பட்ட விளக்கங்களால் நிறைவடையாத சமூக ஆர்வலர் பட்ருல் ஹிஷாம் ஷாஹாரின், அதன் பின்னணியில் உள்ள உண்மைகளை அம்பலப்படுத்தும் 16-பக்கச் சிற்றேடு ஒன்றைக் கொண்டுவரப்போவதாகக் கூறியுள்ளார்.
ச்சேகுபார்ட் என்ற பெயரில் பிரபலமாக விளங்குபவரான பட்ருல், சோலிடேரிடி அனாக் மூடா மலேசியா (எஸ்ஏஎம்எம்) என்னும் இளைஞர் அமைப்பின் தலைவராவார்.
“அது, அந்த மோதிரம் தொடர்பான ஆதாரங்களுடன் மலேசியாவின் முதல் பெண்மணி என்று பாவனை செய்யும் அவரது ஆடம்பர வாழ்க்கைமுறையையும் அதற்காகும் செலவுகள் பற்றிய தகவல்களையும்கூட கொண்டிருக்கும்”, என்று பட்ருல் கூறினார்.
அச்சிற்றேடு நெகிரி செம்பிலான், ரந்தாவ் பிகேஆர் அலுவலகத்தில் வெளியிடப்படும். அந்த வெளியீட்டு நிகழ்வில் பக்காத்தான் தலைவர்கள் பலரும், பிகேஆர் உதவித் தலைவர்கள் சுவா ஜூய் மெங், பவுசியா சாலே, டிஏபி சோசலிச இளைஞர் பகுதித் தலைவர் அந்தோனி லோக் உள்ளிட்ட பலரும் கலந்துகொள்வார்கள்.
ரிம24,458,400 மதிப்புள்ள அந்த வைர மோதிரம் கோலாலம்பூர் பன்னாட்டு விமான நிலையத்தின்வழி நாட்டுக்குள் கொண்டு வரப்பட்டதாக பட்ருல் ஜூலை மாதம் தெரிவித்திருந்தார்.
அம்மோதிரத்தைப் பிரதமரின் துணைவியார் ரோஸ்மா மன்சூர் வாங்கியிருப்பதாகக் கூறி அதன் தொடர்பில் பினாங்கில் மலேசிய ஊழல்-எதிர்ப்பு ஆணையத்தில் ஜூலை 13-இல் அவர் ஒரு புகாரையும் செய்திருந்தார்.
மோதிரத்தின் இருப்பைச் சுங்கத் துறை உறுதிப்படுத்தியது
சுங்கத்துறை தகவல் அமைப்பிலிருந்து பெறப்பட்ட அச்சுப்படி ஒன்றைக் காண்பித்த பட்ருல், அம்மோதிரம் நியு யோர்க்கில் உள்ள வைர வியாபாரிகளான ஜேக்கப் அண்ட் கம்பெனி மூலமாக வாங்கப்பட்டு ஜெரேமி பே சின் டீ என்பவரால் மலேசியாவுக்குள் கொண்டுவரப்பட்டதாக தெரிவித்தார்.
அந்த ஆவணத்தில் பெறுநர் என்ற இடத்தில் ரோஸ்மாவின் பெயர் இருப்பதாகவும் அதுவே, அந்தக் கொள்முதலில் அவருக்குச் சம்பந்தமுண்டு என்பதற்கான ஆதாரம் என்றும் பட்ருல் கூறினார்.
அவ்வாறு கூறப்படுவதை ரோஸ்மா வன்மையாக மறுத்தார். ஆனால், நஜிப்பின் அரசியல் எதிரிகளுக்கு இது அவல் கிடைத்ததுபோல் ஆயிற்று. இவ்விவகாரத்தை விட மாட்டேன் என்கிறார்கள்.
சுங்கத்துறை அப்படி ஒரு மோதிரம் நாட்டில் இருப்பதை இம்மாதத் தொடக்கத்தில் உறுதிப்படுத்தியது. ஆனால், அதை நாட்டுக்குள் கொண்டுவந்தவர் யார் என்ற தகவலை அது வெளியிடவில்லை.