நோன்பு பெருநாள் பண்டிகைக் காலத்தை முன்னிட்டு, போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் வகையில் மார்ச் 19, 20 மற்றும் மார்ச் 28, 29 ஆகிய தேதிகளில் சரக்கு மற்றும் லாஜிஸ்டிக்ஸ் வாகனங்களுக்குத் தடை விதிக்கப்படும் என போக்குவரத்து அமைச்சகம் அறிவித்துள்ளது.
போக்குவரத்து சீராக இருப்பதை உறுதி செய்யவும், விபத்து அபாயங்களைக் குறைக்கவும், சாலைப் பயனாளிகளுக்குப் பாதுகாப்பான மற்றும் வசதியான பயணத்தை வழங்கவும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சகம் தெரிவித்துள்ளது.
“போக்குவரத்து ஓட்டத்தை சமநிலைப்படுத்துவதற்கும், அதே நேரத்தில் அத்தியாவசியச் செயல்பாடுகளைக் கருத்தில் கொண்டும் இந்தத் தடை அமல்படுத்தப்படுகிறது,” என்று அமைச்சகம் மேலும் குறிப்பிட்டுள்ளது.
பொதுமக்கள் தங்கள் பயணங்களை கவனமாகத் திட்டமிடுமாறும், சாலைப் பாதுகாப்பு விதிகளைப் பின்பற்றுமாறும் அறிவுறுத்தப்படுகிறார்கள்,” என்று போக்குவரத்து அமைச்சகம் தனது முகநூல் பதிவில் தெரிவித்துள்ளது.
மற்றொரு முகநூல் பதிவில், குறிப்பிட்ட தேதிகளில் சில வகை கனரக வாகனங்கள் மட்டும் நிர்ணயிக்கப்பட்ட நேரங்களில் இயங்க அனுமதிக்கப்படும் என்றும் அமைச்சகம் குறிப்பிட்டுள்ளது.
கண்டெய்னர் மற்றும் சரக்கு லாரிகள் காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை இயங்கலாம்.
கட்டுமான வாகனங்கள், அந்தந்த கட்டுமான இடத்திலிருந்து 25 கி.மீ சுற்றளவிற்குள் காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை இயங்க அனுமதிக்கப்படுகின்றன.
அவசரகாலச் செயல்பாடுகள், துறைமுகங்கள் மற்றும் விமான நிலையங்களிலிருந்து மேற்கொள்ளப்படும் போக்குவரத்து மற்றும் அத்தியாவசியப் பொருட்களின் விநியோகம் உள்ளிட்ட முக்கியமான சேவைகளுக்கு இந்தத் தடையிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
-fmt
























