தனியார் துறையினர் வீட்டிலிருந்தே பணிபுரியும் முறையை அமல்படுத்த வேண்டும்: பிரதமர் அன்வார் பரிந்துரை

மத்திய கிழக்கு மோதலின் தாக்கத்தைக் கருத்தில் கொண்டு, தனியார் துறையினர் தற்காலிகமாக ‘வீட்டிலிருந்தே பணிபுரியும்’ (WFH) முறையைச் செயல்படுத்துமாறு பிரதமர் அன்வார் இப்ராஹிம் அறிவுறுத்தியுள்ளார்.

இன்று மாலை தொலைக்காட்சியில் ஆற்றிய உரையில், பொதுச் சேவையில் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரிவினருக்கு இந்த முறை படிப்படியாக அமல்படுத்தப்படும்.

“பொதுத்துறை மட்டுமின்றி, சில நிறுவனங்கள் மற்றும் வங்கிகள் ஏற்கனவே நடைமுறைப்படுத்தியுள்ள இத்தகைய நடவடிக்கைகளைத் தனியார் துறையினரும் பின்பற்றுமாறு நாங்கள் கேட்டுக்கொள்கிறோம்,” என்று அவர் தெரிவித்தார்.

தனது உரையில், மத்திய கிழக்கு மோதலால் உலகளாவிய கப்பல் போக்குவரத்து பாதைகளில் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்தும், அதன் விளைவாக எண்ணெய் மற்றும் எரிவாயு விநியோகத்தில் ஏற்பட்டுள்ள தடங்கல்கள் குறித்தும் அன்வார் விளக்கினார்.

இதற்கென சில இடைக்கால நடவடிக்கைகளை அவர் அறிவித்தார். அதில் ஒன்றாக, BUDI95 திட்டத்தின் கீழ் மானிய விலையிலான RON95 பெட்ரோலுக்கான மாதாந்திர ஒதுக்கீடு 300 லிட்டரிலிருந்து 200 லிட்டராகக் குறைக்கப்படும் என்று தெரிவித்தார். இந்த மாற்றம் அடுத்த மாதம் முதல் அமலுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

நிதியமைச்சருமான அன்வார், எண்ணெய் விலை, விநியோகச் சூழல் மற்றும் உலகப் பொருளாதாரம் சீரடையும் வரை இந்த நடவடிக்கை தற்காலிகமானது என்பதை வலியுறுத்தினார்.

இந்த மாத தொடக்கத்தில், அரசாங்க செய்தித் தொடர்பாளர் பாமி பட்சில் கூறுகையில், பொதுத்துறைக்கான வீட்டிலிருந்தே பணிபுரியும் (WFH) முறை குறித்த முன்மொழிவை அரசாங்கம் பரிசீலித்து வருவதாகவும், இது குறித்த முடிவு நோன்பு பெருநாளுக்குப் பிறகு அறிவிக்கப்படும்.

மேலும், கோவிட்-19 பெருந்தொற்று காலத்திலிருந்தே பல தனியார் நிறுவனங்கள் இத்தகைய முறையைப் பின்பற்றி வருவதைக் குறிப்பிட்ட தகவல் தொடர்பு அமைச்சர், தனியார் துறையினர் தாராளமாக இம்முறையைத் தொடரலாம் என்றும் கூறினார்.

 

-fmt