கூச்சிங் வளாகத்தில் நிகழ்ந்த பகடிவதை புகார்கள் குறித்து ஆசிரியர் பயிற்சி நிறுவனம் விசாரணை

சரவாக் மாநிலத்திலுள்ள கூச்சிங் வளாகத்தில் நிகழ்ந்ததாகக் கூறப்படும் பகடிவதைப்படுத்துதல் புகார்கள் குறித்து ஆசிரியர் கல்வி நிறுவனம் விசாரணை நடத்தி வருகிறது. மேலும், ஒழுங்குமுறை நடவடிக்கைகளில் எந்த சமரசமும் செய்து கொள்ளப்போவதில்லை என்றும் அந்த நிறுவனம் வலியுறுத்தியுள்ளது.

கல்வி அமைச்சின் கீழ் இயங்கும் இந்த நிறுவனம், குற்றச்சாட்டு நிரூபிக்கப்படும் பட்சத்தில் சம்பந்தப்பட்ட பயிற்சி ஆசிரியரை கல்வி நிறுவனத்திலிருந்து நீக்குவது உள்ளிட்ட கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனத் தெரிவித்துள்ளது.

“கொடுமைப்படுத்துதல் போன்ற தவறான நடத்தைகளை ஆசிரியர் கல்வி நிறுவனம் ஒருபோதும் அனுமதிக்காது. வருங்கால கல்வியாளர்களாக உருவாகும் பயிற்சி ஆசிரியர்கள், ஒழுக்கத்துடனும், நற்பண்புகளுடனும் முன்மாதிரியாகத் திகழ வேண்டும்,” என்று இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

ஏற்கனவே இன்று காலை வெளியாகி இருந்த செய்தியில், கூச்சிங் ஆசிரியர் கல்வி நிறுவனம் வளாகத்தில் உள்ள மூத்த மாணவர்கள், கடந்த வெள்ளிக்கிழமை அதிகாலை 2025/2030 கல்விப்பிரிவின் இளநிலை மாணவர்களை பகடிவதைப்படுத்தியதாக வட்டாரங்கள் செய்தி வெளியிட்டுள்ளது. அந்த மாணவர்களை மற்றவர்கள் முன்னிலையில் வலுக்கட்டாயமாக உட்கார வைத்தல், அநாகரீகமான செயல்களைச் செய்ய வைத்தல் மற்றும் ஆபாசமான ஒலிகளை எழுப்பச் செய்தல் போன்ற செயல்களில் ஈடுபடுத்தியதாகக் கூறப்படுகிறது.

பாதிக்கப்பட்ட பயிற்சி ஆசிரியர் ஒருவரின் தாயார் இது குறித்துக் கூறுகையில், இந்தச் சம்பவம் பெரும் ஏமாற்றமளிப்பதாகவும், இது தொடர்பாக அதிகாரிகள் முழுமையான விசாரணை நடத்த வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.

மேலும், பாதிக்கப்பட்ட மாணவர்கள் “நாய்” மற்றும் “பன்றி” போன்ற தரக்குறைவான சொற்களால் வசைபாடப்பட்டதாகவும், அந்த நிகழ்வின் போது அவர்கள் கைபேசி அல்லது கைக்கடிகாரங்களை எடுத்து வரக்கூடாது என்று அறிவுறுத்தப்பட்டதாகவும் கூறப்படுகிறது.