தமிழகத்தின் விஜய்யை போல ரஃபிஸியின் புரட்சி அமையுமா?

இராகவன் கருப்பையா – தமிழ் நாட்டின் இரு பெரும் பாரம்பரிய அரசியல் கட்சிகளை புரட்டிப் போட்டு ஆட்சியைக் கைப்பற்றிய நடிகர் விஜய்யைப் போல ‘பெர்சமா’ கட்சியை வழி நடத்தும் ரஃபிஸி ரம்லியும் சாதனை புரியக் கூடும் எனும் நம்பிக்கை தற்பொழுது வலுத்து வருகிறது.

அம்னோவின் சமீபகால அரசியல் நகர்வுகள் 16ஆவது பொதுத் தேர்தலுக்கான நிர்பந்தத்திற்கு இட்டுச் செல்லும் தருவாயில் உள்ளது என்பதை மறுக்கலாகாது.

குறைந்த பட்சம் அடுத்த பொதுத் தேர்தல் வரையில் பக்காத்தானுடன் சேர்ந்து ஒரே அணியாக பாரிசான் செயல்படும் என அம்னோ தலைவர் அஹ்மட் ஸாஹிட் கடந்த காலங்களில் குறிப்பிட்டிருந்தார்.

எனினும் கட்சியிலிருந்து நீக்கப்பட்ட உறுப்பினர்களை மீண்டும் இணைத்துக் கொண்டு தற்பொழுது திடீரென அவர் பல்டியடிப்பார் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை.

பி.கே.ஆர். கட்சியிலும் நாளுக்கு நாள் விரிசல்கள் அதிகரித்துக் கொண்டே இருப்பதை நம்மால் காணமுடிகிறது. இதனால் மடானி அரசாங்கத்திற்கான ஆதரவு அண்மைய காலமாக கணிசமான அளவு சரிந்துள்ளதை மறுக்கவோ மறைக்கவோ முடியாது.

இப்படிப்பட்ட சூழலில் அடுத்த பொதுத் தேர்தல் இவ்வாண்டிலேயே நடைபெறக் கூடும் என பிரதமர் அன்வார் அண்மையில் கோடிக் காட்டியதையும் நாம் கருத்தில் கொள்ள வேண்டும்.

அடுத்தத் தேர்தலில் பக்காத்தானுக்கோ, பாரிசானுக்கோ, எதிர்கட்சிகளின் கூட்டணியான பெரிக்காத்தானுக்கோ வாக்களிக்க விரும்பாமல் ‘மதில் மேல் பூனை’யாக இருப்பவர்களுக்கு ரஃபிஸியின் ‘பெர்சமா’ ஒரு தீர்வாக அமையும் என்பதில் கடுகளவும் ஐயமில்லை.

எனினும் அந்த 3 கூட்டணிகளையும் ‘பெர்சமா’ எந்த அளவுக்கு அசைக்க முடியும் என்று தெரியாது. மூன்றாவது அணி ஒன்று இல்லையே என இதுநாள் வரையில் காத்திருந்தவர்கள் ‘பெர்சமா’வுக்கு ஆதரவளிப்பார்கள் எனும் போதிலும் அதற்கு அப்பாற்பட்டு ஆதரவைத் திரட்டுவது ரஃபிஸியின் திறமையை பொறுத்தது.

தமிழகத்தில் விஜய்க்கு அரசியல் அனுபவம் இல்லை எனும் போதிலும் சினிமா வழியான செல்வாக்கு அவருக்கு பெருமளவில் இருந்தது. அதனால்தான் 80  மில்லியன் பேரை மக்கள் தொகையாகக் கொண்ட தமிழ் நாட்டில் அவரால் சாதனை புரிய முடிந்தது.

இரண்டே ஆண்டுகளுக்கு முன் ‘தமிழக வெற்றிக் கழகம்’ எனும் ஒரு கட்சியை தோற்றுவித்து, பெரும்பாலும் இளைஞர்களை ஒன்று திரட்டி, தமிழ் நாடு முழுவதும் சூறாவளி சுற்றுப் பயணம் மேற்கொண்டு அவர் பிரச்சாரம் செய்தார்.

எனினும் ரஃபிஸிக்கு அது போன்ற செல்வாக்கு இல்லை எனும் போதிலும் அரசியலில் எதிரணிகளின் குளறுபடிகளையும் ஊழல்களையும் மிகத் துல்லியமாக ஆராய்ந்து அப்பட்டமாகப் புட்டு புட்டு வைக்கும் அதீதத் திறமையைக் கொண்டிருக்கிறார்.

கடந்த காலங்களில் முன்னாள் பிரதமர் நஜிப் புரிந்த ஊழல்களையும் அம்னோவின் அட்டகாசங்களையும் எப்படியெல்லாம் அவர் அம்பலப்படுத்தினார் என்று நமக்கெல்லாம் தெரியும்.

வீணான ஆர்ப்பரிப்பும் ஆர்ப்பாட்டமுமின்றி மிகவும் தெளிவாக பேசக் கூடிய ஆற்றலைக் கொண்ட அவருடைய பிரச்சாரக் கூட்டங்களுக்கு அலை அலையானக் கூட்டம் திரள்வதை நாம் பார்த்திருக்கிறோம்.

விஜய்யின் அரசியல் பாதையையும் ரஃபிஸியின் தற்போதைய பயணத்தையும் நேரடியாக ஒப்பிட முடியாது எனும் யதார்த்தத்தையும் நாம் கவனத்தில் கொள்வது அவசியமாகும்.

ஏனெனில் தமிழ் நாடும் மலேசியாவும் கலை, கலாச்சாரம், மொழி, இனம், அரசியல் பின்னணி போன்ற பல்வேறு அம்சங்களில் மாறுபட்டிருக்கின்றன.

எது எப்படியோ பக்காத்தான் அரசாங்கம் மீது அதிருப்தியைக் கொண்டுள்ள நம் சமூகத்தைச் சார்ந்த ஒரு சாரார், ‘பெர்சமா’வின் உதயத்தையும் ரஃபிஸியையும் இன்னொரு விஜய்யாக பார்க்ககூடும்.