ஜொகூர் மாநிலத் தேர்தலில் பாரிசான் நேசனல் கூட்டணியின் முதன்மை வேட்பாளராக ஜொகூர் மந்திரி பெசார் ஓன் ஹபீஸ் காசி தொடர்ந்து நீடிப்பார் என்று அக்கூட்டணியின் தலைவர் அகமத் ஜாஹித் ஹமிடி தெரிவித்துள்ளார்.
மேலும், இத்தேர்தலில் 40-க்கும் மேற்பட்ட சட்டமன்றத் தொகுதிகளைக் கைப்பற்றுவதே பாரிசான் கூட்டணியின் இலக்கு என்றும் ஜாஹித் கூறினார் என பெர்னாமா செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
கடந்த 2022 மாநிலத் தேர்தலில், பாரிசான் 40 இடங்களையும், பக்காத்தான் ஹரப்பான் 12 இடங்களையும், பெரிக்காத்தான் நேசனல் 3 இடங்களையும், மூடா கட்சி ஒரு இடத்தையும் கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது.
கடந்த மாதம், ஜொகூர் மாநிலத்தின் அனைத்து 56 சட்டமன்றத் தொகுதிகளிலும் பாரிசான் கூட்டணி போட்டியிடும் என்று ஓன் ஹபீஸ் கூறியிருந்தார்.
மேலும், ஓன் ஹபீஸ் சாத்தியமான வேட்பாளர்களின் பட்டியலை சமர்ப்பித்துள்ளதாகக் குறிப்பிட்ட ஜாஹித், கூட்டணியின் இதர தலைவர்களுடன் கலந்தாலோசித்த பிறகு வேட்பாளர் பட்டியல் இறுதி செய்யப்படும் என்றும் கூறினார்.
“வேட்பாளர்கள் இன்னும் பரிசீலிக்கப்பட்டு வருகிறார்கள்,” என்று அவர் கூறியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜொகூர் மாநில சட்டமன்றம் நேற்று கலைக்கப்பட்டது, இதனைத் தொடர்ந்து அடுத்த 60 நாட்களுக்குள் 16-ஆவது மாநிலத் தேர்தல் நடத்தப்படுவதற்கான வழிவகை செய்யப்பட்டுள்ளது.
-fmt
























