குளுவாங் விபத்து வழக்கில் கைதான பதின்ம வயது சிறுவன் மீது கொலை வழக்குப் பதிவு

ஜொகூர், குளுவாங்கில் கடந்த திங்கட்கிழமை ஐந்து பேர் பலியாகவும், எட்டு பேர் காயமடையவும் காரணமான விபத்து தொடர்பாகக் கைது செய்யப்பட்டு, ரிமாண்ட் காவலில் இருந்து விடுவிக்கப்பட்ட பதின்ம வயது சிறுவன், கொலை விசாரணையின் ஒரு பகுதியாக நாளை மீண்டும் கைது செய்யப்படுவார்.

பெயர் குறிப்பிடப்படாத அந்த 19 வயது இளைஞனுக்காக, குளுவாங் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் புதிய ரிமாண்ட் விண்ணப்பம் செய்யப்படும் என்று குளுவாங் போலீஸ் தலைவர் பஹ்ரின் நோ கூறினார்.

“சந்தேக நபர் தண்டனைச் சட்டத்தின் 302-வது பிரிவின் (கொலை வழக்கு) கீழ் மீண்டும் கைது செய்யப்படுவார். இருப்பினும், சாலைப் போக்குவரத்துச் சட்டம் 1987-ன் பிரிவு 42(1)-ன் கீழ் (அலட்சியமாகவும் ஆபத்தான முறையிலும் வாகனம் ஓட்டுதல்) விசாரணை தொடரும்” என்று அவர் கூறியதாக வட்டார்ங்கள் இன்று செய்தி வெளியிட்டுள்ளது.

குளுவாங் விபத்து தொடர்பான விசாரணை, கொலை வழக்காகவும் அலட்சியம் மற்றும் ஆபத்தான முறையில் வாகனம் ஓட்டி மரணத்தை விளைவித்த வழக்காகவும் மறுவகைப்படுத்தப்பட வேண்டும் என்று அட்டர்னி ஜெனரல் அலுவலகம் நேற்று உத்தரவிட்டதைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அந்தப் பதின்ம வயது சிறுவன் செவ்வாய்க்கிழமை முதல் இரண்டு நாட்களுக்கு ரிமாண்ட் காவலில் வைக்கப்பட்டிருந்தார், பின்னர் அவரது ரிமாண்ட் மேலும் ஒரு நாள் நீட்டிக்கப்பட்டது.

ஜாலான் ரெங்கம்-சிம்பாங் ரெங்கம் சாலையில் மதியம் 1.19 மணியளவில் இந்த விபத்து ஏற்படுவதற்கு முன்பு, மெர்சிடிஸ் பென்ஸ் E240 காரை ஓட்டிச் சென்ற அந்தச் சிறுவன், பிஎம்டபிள்யூ காரை ஓட்டி வந்த அவரது சகோதரர் கோ யி ஷெங் (22) என்பவருடன் பந்தயத்தில் ஈடுபட்டதாக நம்பப்படுவதாக செவ்வாய்க்கிழமை பஹ்ரின் தெரிவித்தார்.

கோ தனது காரின் கட்டுப்பாட்டை இழந்து, எதிரே உள்ள பாதையில் நுழைந்து, பெரோடுவா அல்சா, டொயோட்டா வயோஸ், புரோட்டான் வீரா 1.5 மற்றும் அவரது சகோதரரின் மெர்சிடிஸ் பென்ஸ் ஆகிய கார்கள் மீது மோதினார்.

வயோஸ் காரில் பயணம் செய்த ஐமன் ரஷித் (36), நூர் ஐரிஷ் ஷிபா சிடெக் (10), நூர் அஸ்லினா அப்த் லத்தீப் (33) மற்றும் செமெக் மாட் சோ (73) ஆகிய நான்கு பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டது. கோ மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்படும் வழியில் கடுமையான நெஞ்சுக்காயம் காரணமாக உயிரிழந்தார்.

இந்த விபத்தில் சிக்கிய மற்ற எட்டு பேர் சிகிச்சைக்காக குளுவாங்கில் உள்ள என்கே பெசார் ஹாஜா கல்சோம் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

 

 

-fmt