பெட்டாலிங் ஜெயா நாடாளுமன்ற உறுப்பினர் லீ சான் சுங் (Lee Chean Chung), சிலாங்கூர் மாநிலம் முன்மொழிந்துள்ள முஸ்லிம் அல்லாத வழிபாட்டுத் தலங்களுக்கான புதிய வழிகாட்டுதல்களில் உள்ள குடியிருப்பு (residency) தேவைகளை பூர்த்தி செய்வது நடைமுறையில் சாத்தியமற்றது என மீண்டும் கவலை வெளியிட்டுள்ளார்.
இந்த விதியின் படி, ஒவ்வொரு 5,000 குடியிருப்பாளர்களுக்கும் (அல்லது சுமார் 1,250 குடும்பங்களுக்கு) ஒரு முஸ்லிம் அல்லாத வழிபாட்டுத் தலம் மட்டுமே அனுமதிக்கப்படும்.
இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில், லீ கூறியதாவது: இந்த நிபந்தனையை பூர்த்தி செய்ய குறைந்தபட்சம் 40.5 ஹெக்டேர் பரப்பளவு கொண்ட மேம்பாட்டு பகுதி தேவைப்படும். இது சுமார் 56 கால்பந்து மைதானங்களின் பரப்பளவுக்கு சமமானது.
மேலும், அந்தப் பகுதி ஒரே ஒரு மேம்பாட்டு அனுமதி (development order) கீழ் இருக்க வேண்டும் என அவர் குறிப்பிட்டார். இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட மேம்பாட்டு அனுமதிகளின் கீழ் உருவாக்கப்பட்ட குடியிருப்புத் திட்டங்கள் இந்த விதியின் கீழ் தகுதி பெறாமல் போகலாம் என்ற அச்சத்தையும் அவர் வெளிப்படுத்தினார்.
அதோடு, லீ சான் சுங், தற்போது கிளாங் பள்ளத்தாக்கு பகுதியில் இத்தகைய பெரிய அளவிலான ஒருங்கிணைந்த மேம்பாட்டு திட்டங்கள் அரிதாகிவிட்டன; பெரும்பாலான வீட்டு திட்டங்கள் சிறு பகுதிகளாக (pockets) கட்டப்படுகின்றன என்றார்.
எனவே, வணிகக் கட்டிடங்களை முஸ்லிம் அல்லாத வழிபாட்டுத் தலங்களாக மாற்றுவதற்கு உள்ளூர் அதிகாரிகளுக்கு வழங்கப்பட்டிருந்த விருப்பத் தீர்மான (discretionary) அதிகாரத்தை நீக்கியிருப்பது எதிர்காலத்தில் சிக்கல்களை ஏற்படுத்தும் என்று அவர் எச்சரித்தார்.
அவர் அந்த விதியை மீண்டும் சேர்க்கவும், 1,250 குடும்பங்கள் என்ற வரம்பை 500 குடும்பங்களாகக் குறைக்கவும் பரிந்துரைத்தார்.
லிமாஸ் (Limas) தீர்மானிக்கட்டும்
இதற்கிடையில், ஏற்கனவே உள்ள முஸ்லிம் அல்லாத வழிபாட்டுத் தலங்களில், அருகிலுள்ள பள்ளிவாசல்கள் (mosques) அல்லது சுராவுகளை (surau) விட உயரமாக உள்ள கட்டமைப்புகளை அகற்ற உள்ளூர் அதிகாரிகள் உத்தரவிடலாம் என்ற முன்மொழிவையும் லீ விமர்சித்தார்.
இந்த விதியை திருத்த வேண்டும் என்றும், அதற்கான முடிவை Special Committee on Buddhist, Christian, Hindu, Sikh, and Tao Religious Affairs (Limas) என்ற சிறப்பு குழுவே எடுக்க வேண்டும் என்றும் அவர் கூறினார்.
லிமாஸ் இணைத் தலைவர் என்ங் ஸே ஹான் முன்பு கூறியதாவது, அரசு மற்றும் மத அமைப்புகளுக்கிடையிலான ஆலோசனைகள் நடைபெறும் வரை இந்த வழிகாட்டுதல்கள் அமல்படுத்தப்படமாட்டாது.
எக்ஸ்கோ என்ஜி ஸ்ஸே ஹான்
மே 30 அன்று நடைபெற்ற ஆலோசனைக்குப் பிறகு, இந்த வழிகாட்டுதல்கள் புதிய குடியிருப்பு மேம்பாட்டு பகுதிகளில் வழிபாட்டுத் தலங்களை மக்களுக்கு அருகில் அமைப்பதை எளிதாக்கும் நோக்கத்துடன் உருவாக்கப்பட்டவை என்று அந்த சிறப்புக் குழு தெரிவித்தது.
ஆனால், புதிய பகுதிகளில் உள்ள சமூகங்களின் தேவைகளை பூர்த்தி செய்ய, வணிகக் கட்டிடங்களுக்குள் வழிபாட்டுத் தலங்களை அமைக்க அனுமதி வழங்க வேண்டும் என்று முஸ்லிம் அல்லாத மதக் குழுக்கள் கோரிக்கை வைத்துள்ளன என்றும் அது தெரிவித்தது.
முன்னதாக, சிலாங்கூர் மந்திரி பெசார் அலுவலகத்தின் பேச்சாளர், மத அமைப்புகள் தங்களது எழுத்துப்பூர்வமான கருத்துகளையும் பரிந்துரைகளையும் மாநில அரசிடம் சமர்ப்பிக்க இரண்டு வாரங்கள் அவகாசம் கோரியுள்ளதாக தெரிவித்திருந்தார்.
சிலாங்கூர் முதலமைச்சர் அமிருதின் ஷாரி
மேலும், அமிருதின் ஷாரி, புதிய வழிகாட்டுதல்கள் அனைத்து சிலாங்கூர் மக்களும் அமைதியாக தங்களது மதச் செயல்பாடுகளை மேற்கொள்ள பாதுகாப்பான சூழலை வழங்கும் என உறுதியளித்துள்ளார்.
அந்தப் பேச்சாளர் கூறியதாவது:
“எதிர்கால மேம்பாட்டு திட்டங்களை ஒழுங்குபடுத்தும் நோக்கத்துடன் உருவாக்கப்பட்ட அசல் வழிகாட்டுதல்கள், சிலாங்கூரின் பல்வேறு மத நம்பிக்கைகளின் உணர்வுகளை போதுமான அளவில் கருத்தில் கொள்ளாததால் வருத்தத்திற்குரிய தவறாக அமைந்தன.”
























