பெர்சத்து கட்சியுடனான உறவை துண்டித்துக் கொள்வதாக பாஸ் கட்சி நேற்று அறிவித்த போதிலும், தாங்கள் பெரிக்காத்தான் நேசனல் கூட்டணியில் தொடர்ந்து உறுதியோடு நீடிப்பதாக கெராக்கான் கட்சி தெரிவித்துள்ளது.
கூட்டணிக்குள் பாஸ் மற்றும் பெர்சத்து ஆகிய இரு கட்சிகளின் பங்களிப்பையும் பங்குகளையும் தங்களது கட்சி மதிப்பதாகக் கூறிய கெராக்கான் தலைவர் டோமினிக் லாவ், நேற்றைய விவகாரம் குறித்து கருத்து தெரிவிப்பதற்கு முன்னதாக இரு கட்சிகளிடமிருந்தும் தெளிவுபடுத்தலை எதிர்பார்ப்பதாகக் குறிப்பிட்டார்.
பெரிக்காத்தான் கூட்டணிக்குள் இருக்கும் அனைத்துக் கட்சிகளும் நமக்கு முன்னாலுள்ள பெரிய பணியில் தொடர்ந்து கவனம் செலுத்த வேண்டிய தருணம் இது, என்று அவர் கூறினார். வரவிருக்கும் ஜொகூர் மற்றும் நெகிரி செம்பிலான் மாநிலத் தேர்தல்களைக் குறிப்பிட்டு அவர் இதனைத் தெரிவித்தார்.
அரசியல் ஸ்திரத்தன்மை, கொள்கை ரீதியான தலைமைத்துவம் மற்றும் எல்லாவற்றிற்கும் மேலாக மக்களின் நலன்களுக்கு முன்னுரிமை அளித்து, அனைத்து இன மற்றும் மதங்களைச் சேர்ந்த மலேசியர்களால் ஏற்றுக்கொள்ளப்படக்கூடிய ஒரு கூட்டணியாக பெரிக்காத்தான் நேசனலை வலுப்படுத்துவதில் கெராக்கான் தொடர்ந்து ஒரு ஆக்கப்பூர்வமான பங்கைக் வகிக்கும்,” என்று பெரிக்காத்தான் கூட்டணியின் துணைத் தலைவர் கூறினார்.
2020-ஆம் ஆண்டில் பெர்சத்து மற்றும் பாஸ் ஆகிய கட்சிகளால் கூட்டாக உருவாக்கப்பட்ட பெரிக்காத்தான் கூட்டணியில், கெராக்கான் மற்றும் மலேசிய இந்திய மக்கள் கட்சியும் அங்கத்துவம் வகிக்கின்றன.
பெர்சத்து கட்சியுடனான அரசியல் ஒத்துழைப்பைத் தங்களது கட்சி முடிவுக்குக் கொண்டு வருவதாக பாஸ் தலைவர் அப்துல் ஹாதி அவாங் நேற்று இரவு அறிவித்ததைத் தொடர்ந்து, பெரிக்காத்தான் கூட்டணியின் எதிர்காலம் குறித்த கவலைகள் எழுந்துள்ளன.
உம்மாவை (முஸ்லிம் சமூகம்) ஒன்றிணைக்கும் நோக்கத்துடன், வரவிருக்கும் மாநிலத் தேர்தல்களையும் அடுத்த பொதுத் தேர்தலையும் எதிர்கொள்ள பாஸ் கட்சி ஒரு புதிய அரசியல் கூட்டணியை உருவாக்கும் என்று ஹாதி கூறினார்.
இப்போதைக்கு பாஸ் கட்சி பிஎன் கூட்டணியின் அங்கமாகவே நீடிக்கும் என்று பாஸ் மத்திய செயற்குழு உறுப்பினர் ஷாஹிதான் காசிம் தெரிவித்துள்ள வேளையில், தங்களது கட்சியும் பெர்சத்துவும் இனி பெரிக்காத்தான் கூட்டணியில் ஒரே தளத்தைப் பகிர்ந்து கொள்ள முடியாது என்று பாஸ் தகவல் பிரிவுத் தலைவர் அஹ்மத் பத்லி ஷாரி சுட்டிக்காட்டியுள்ளார்.
பெர்சத்து கட்சியுடனான உறவை பாஸ் மறுமதிப்பீடு செய்து வருவதாகவும், முகிதீன் யாசினின் கட்சி இல்லாமல் பாஸ் 16-ஆவது பொதுத் தேர்தலைச் சந்திக்கக்கூடும் என்று ஹாடி கூறி கிட்டத்தட்ட மூன்று வாரங்களுக்குப் பிறகு இந்த நடவடிக்கை வந்துள்ளது.
-fmt
























