மலேசியாவில் உள்ள வங்கி வாடிக்கையாளர்கள் அனைவரும் வரும் ஜூலை 1 ஆம் தேதி முதல், எந்தவொரு ஏடிஎம் (ATM) அல்லது ஸ்மார்ட் மறுசுழற்சி இயந்திரத்திலும் (SRM) தங்களுக்குள் இருக்கும் பிற வங்கிப் பரிவர்த்தனைக்கான 1 ரிங்கிட் கட்டணமின்றி பணம் எடுத்துக் கொள்ள முடியும்.
மலேசியாவில் உள்ள அனைத்து வங்கிகளையும் உள்ளடக்கிய இந்தத் திட்டத்தின் மூலம், டெபிட் கார்டு (Debit card) வைத்திருப்பவர்கள் நாடு முழுவதும் உள்ள 14,000-க்கும் மேற்பட்ட இயந்திரங்களில் எவ்விதக் கட்டணமுமின்றி வரம்பற்ற முறையில் பணம் எடுக்க அனுமதிக்கப்படுவார்கள்.
மலேசிய வங்கிகள் சங்கம், மலேசிய இஸ்லாமிய வங்கி மற்றும் நிதி நிறுவனங்கள் சங்கம் மற்றும் மலேசிய மேம்பாட்டு நிதி நிறுவனங்கள் சங்கம் ஆகியவை இன்று வெளியிட்டுள்ள கூட்டறிக்கையில், மலேசியாவில் உரிமம் பெற்ற வங்கிகளால் இயக்கப்படும் ஏடிஎம் மற்றும் எஸ்ஆர்எம் சேவைகளுக்கு மட்டுமே இந்த கட்டண விலக்கு பொருந்தும் என்று தெரிவித்துள்ளன.
மலேசியர்கள் பலரின் அன்றாட வாழ்க்கையை நிர்வகிப்பதில், ரொக்கப் பணம் இன்னும் ஒரு முக்கியமான மற்றும் அத்தியாவசியமான கட்டண முறையாக இருந்து வருவதை வங்கித் துறை அங்கீகரிக்கிறது.
“இதற்கு இணங்க, பிற வங்கி ஏடிஎம் பணப் பரிவர்த்தனைக்கான கட்டணத்தை நீக்கியிருப்பது, நம்பகமான, வசதியான மற்றும் மலிவான சேவையை உறுதி செய்வதில் வங்கித் துறை கொண்டுள்ள அர்ப்பணிப்பைப் பிரதிபலிக்கிறது. அதே வேளையில், இது பொதுமக்களின் அன்றாட நிதிச் சுமையைக் குறைக்க உதவும்,” என்று அவர்கள் தெரிவித்துள்ளனர்.
நுகர்வோரின் நிதிச் சுமையைக் குறைக்கும் அதே வேளையில், அவர்கள் எளிதாகவும் நம்பகத்தன்மையுடனும் பணத்தைப் பெறுவதை உறுதி செய்வதற்காகவும், வாடிக்கையாளர்களை மையமாகக் கொண்ட பரந்த வங்கிச் சேவைகளை ஊக்குவிக்கும் முயற்சியின் ஒரு பகுதியாக இந்தத் திட்டம் அமைந்துள்ளது என்று அச்சங்கங்கள் தெரிவித்துள்ளன.
நாடு முழுவதும் டிஜிட்டல் மற்றும் ரொக்கமில்லா கட்டண முறைகளின் பயன்பாடு அதிகரித்து வருவதைச் சுட்டிக்காட்டிய அவர்கள், மலேசியா ஒரு டிஜிட்டல் பொருளாதாரத்தை நோக்கி நகர்வதால், பாதுகாப்பான மற்றும் தடையற்ற மின்னணு கட்டண வசதிகளை வங்கிகள் தொடர்ந்து மேம்படுத்தும் என்றும் குறிப்பிட்டனர்.
-fmt
























