நாடு தழுவிய அளவில் ஆன்லைன் மோசடிகளால் ஏற்பட்ட இழப்புகள், 2024-ஆம் ஆண்டில் இருந்த 1.57 பில்லியன் ரிங்கிட்டிலிருந்து 2025-ஆம் ஆண்டில் 2.97 பில்லியன் ரிங்கிட் கடுமையாக உயர்ந்துள்ளது; மேலும், இந்த ஆண்டின் முதல் ஐந்து மாதங்களில் மட்டும் இந்த இழப்பு 830 மில்லியன் ரிங்கிட்டை எட்டியுள்ளது.
இல்லாத போலி முதலீட்டு மோசடிகளே தொடர்ந்து அதிகப்படியான இழப்புகளைப் பதிவு செய்துள்ளதாக உள்துறை அமைச்சு தெரிவித்துள்ளது; இதன்படி, 2024-இல் 848.62 மில்லியன் ரிங்கிட்டாகவும், 2025-இல் 1.46 பில்லியன் ரிங்கிட்டிலிருந்த இந்த இழப்பு, இந்த ஆண்டில் இதுவரையிலான காலக்கட்டத்தில் 361.63 மில்லியன் ரிங்கிட்டை எட்டியுள்ளது.
நாடாளுமன்றத்தின் எழுத்துப்பூர்வ பதிலில் இந்தத் தகவலை வெளியிட்டுள்ள அமைச்சு, போலி முதலீடுகளுக்கு அடுத்தபடியாகத் தொலைத்தொடர்பு மோசடிகள் அதிக இழப்பை ஏற்படுத்தியுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளது. இதன்படி, 2024-இல் 497.12 மில்லிய, 2025-இல் 802.47 மில்லியன் ரிங்கிட்டிலிருந்த இழப்பு, 2026 மே மாத நிலவரப்படி 235.63 மில்லியன் ரிங்கிட்டாக உள்ளது.
காதல் மோசடிகளால் ஏற்பட்ட இழப்புகள் 2024-இல் 45.87 மில்லியன் ரிங்கிட்டிலிருந்து, 2025-இல் 47.44 மில்லியன் ரிங்கிட்டாக, இந்த ஆண்டில் இதுவரையிலான காலக்கட்டத்தில் 17.76 மில்லியன் ரிங்கிட்டாக உள்ளன.
சிலாங்கூர் மற்றும் கோலாலம்பூர் ஆகிய மாநிலங்கள் தொடர்ந்து அதிகப்படியான இழப்புகளைப் பதிவு செய்து வருகின்றன.
சிலாங்கூரின் இழப்பு 2024-ஆம் ஆண்டில் இருந்த 446.16 மில்லியன் ரிங்கிட்டிலிருந்து 2025-இல் 986.79 மில்லியன் ரிங்கிட்டாக உயர்ந்தது; அதே வேளையில், கோலாலம்பூரின் இழப்பு இதே காலக்கட்டத்தில் 293.30 மில்லியன் ரிங்கிட்டிலிருந்து 782.86 மில்லியன் ரிங்கிட்டாக அதிகரித்துள்ளது.
ஜொகூர், பினாங்கு, பேராக், சபா மற்றும் சரவாக் ஆகிய மாநிலங்களில் 2024 முதல் 2025 வரை ஆன்லைன் மோசடி இழப்புகள் கணிசமாக அதிகரித்து, பல மாநிலங்களில் 110 மில்லியன் ரிங்கிட்டை தாண்டின. கடந்த மூன்று ஆண்டுகளின் மோசடிப் போக்குகள், நிதி மீட்பு விகிதம் மற்றும் பணத்தைக் கண்டறிந்து முடக்கும் நடவடிக்கைகள் குறித்து பெலுரான் எம்பி ரொனால்ட் கியாண்டியின் கேள்விக்கு உள்துறை அமைச்சு அளித்த பதிலில் இந்தத் தரவுகள் இடம்பெற்றுள்ளன.
24 மணி நேரமும் இயங்கி, வங்கி கணக்குகளை முடக்குவதற்கும் பரிவர்த்தனைக் கட்டுப்பாடுகளை விதிப்பதற்கும் விரைவான நடவடிக்கை எடுக்கும் தேசிய மோசடி மறுமொழி மையத்தை (NSRC) வலுப்படுத்துவதன் மூலம், ஆன்லைன் குற்றங்களை எதிர்த்துப் போராடுவதற்கான தனது அர்ப்பணிப்பை உள்துறை அமைச்சு மீண்டும் உறுதிப்படுத்தியது.
2022-இல் இது தொடங்கப்பட்டதிலிருந்து, மோசடி தொடர்பான நிதியில் 32.49 மில்லியன் ரிங்கிட்டை NSRC வெற்றிகரமாக முடக்கியுள்ளது; இதில் 10.9 மில்லியன் ரிங்கிட் பாதிக்கப்பட்டவர்களிடம் திருப்பி ஒப்படைக்கப்பட்டுள்ளது.
2022 முதல் 2025 வரையிலான புள்ளிவிவரங்களின்படி, மொத்தம் RM25.2 மில்லியன் முடக்கப்பட்டு, அதில் 29 விழுக்காடு (7.3 மில்லியன் ரிங்கிட்) பாதிக்கப்பட்டவர்களிடம் திரும்ப வழங்கப்பட்டது. ஜனவரி முதல் மே 2026 வரையிலான காலக்கட்டத்தில், 7.25 மில்லியன் ரிங்கிட் முடக்கப்பட்டு, அதில் 3.57 மில்லியன் ரிங்கிட் அல்லது 49 விழுக்காடு திரும்ப ஒப்படைக்கப்பட்டுள்ளது.
திரும்பப் பெறப்பட்ட நிதி விழுக்காட்டின் இந்த அதிகரிப்பு, தேசிய மோசடி மறுமொழி மையமாக NSRC மேலும் திறம்படச் செயல்படுவதையும், பொதுமக்களின் அதிக நம்பிக்கையைப் பெற்று வருவதையும் காட்டுகிறது, என்று அமைச்சு கூறியது.
-fmt
























