இசா சமாடின் தண்டனையை மறுஆய்வு செய்யக் கோரிய மனுவை கூட்டரசு நீதிமன்றம் தள்ளுபடி செய்தது
பெல்டா (Felda) முன்னாள் தலைவர் இசா அப்துல் சமாடின் ஊழல் தண்டனை, ஆறு ஆண்டு சிறைத்தண்டனை மற்றும் ரிம 15.45 மில்லியன் அபராதம் ஆகியவற்றை மீண்டும் உறுதிப்படுத்திய முந்தைய அமர்வின் தீர்ப்பை மறுஆய்வு செய்யக் கோரி அவர் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை கூட்டரசு நீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்தது.
சபா மற்றும் சரவாக் தலைமை நீதிபதி அஜிசா நவாவி, கூட்டரசு நீதிமன்ற நீதிபதிகள் கொலின் லாரன்ஸ் செக்வேரா மற்றும் ரவிந்திரன் என். பரமகுரு ஆகியோர் அடங்கிய மூன்று பேர் கொண்ட நீதிபதிகள் அமர்வு, முந்தைய விசாரணையில் எந்தவொரு நீதிமீறலும் நடக்கவில்லை என்று தீர்ப்பளித்தது.
ஒருமனதாக எடுக்கப்பட்ட இத்தீர்ப்பை வாசித்த அஜிசா, முந்தைய கூட்டரசு நீதிமன்ற விசாரணையின் போது, இசாவின் வழக்கறிஞர் மூலம் அவரது தரப்பு நியாயங்கள் மற்றும் தண்டனைக் குறைப்புக்கான வாதங்களை முன்வைக்க முழு வாய்ப்பு வழங்கப்பட்டதாகக் கூறினார்.
“இருப்பினும், மனுதாரர் அந்த வாதங்களை முன்வைக்க வேண்டாம் என்று முடிவு செய்தார். எனவே, முந்தைய கூட்டரசு நீதிமன்ற அமர்வு, நீதிமன்றங்கள் சட்டம் 1964-இன் பிரிவுகள் 86 மற்றும் 92-இன் படி அதன் மேல்முறையீட்டு அதிகார வரம்பை நியாயமான முறையில் செயல்படுத்தியுள்ளது,” என்று அவர் கூறினார்.
மேல்முறையீட்டு நீதிமன்றத்தின் தீர்ப்பை ரத்து செய்து, உயர் நீதிமன்றத்தின் தண்டனையை மீண்டும் நிலைநிறுத்துவதற்கு முன், உயர் நீதிமன்றம் மற்றும் மேல்முறையீட்டு நீதிமன்றம் ஆகிய இரண்டிலும் பரிசீலிக்கப்பட்ட ஆதாரங்களை மறுமதிப்பீடு செய்யும் அதிகாரம் முந்தைய கூட்டரசு நீதிமன்ற அமர்வுக்கு இருந்தது என்றும் அவர் விளக்கினார்.
மனுதாரரின் மேல்முறையீடு செய்வதற்கும், அவரது தரப்பு வாதத்தை கேட்பதற்குமான உரிமைகள் முழுமையாக மதிக்கப்பட்டன என்றும், ஆனால் அவர்தான் தனக்கு வழங்கப்பட்ட வாய்ப்பை முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ளவில்லை என்றும் அஜிசா குறிப்பிட்டார்.
குற்றம் மற்றும் தண்டனை ஆகிய இரண்டுமே மேல்முறையீட்டில் இருந்ததால், தங்களது வழக்குகளை எவ்வாறு முன்வைக்க வேண்டும் என்பதை சம்பந்தப்பட்ட தரப்பினரே தீர்மானிக்க வேண்டும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
“இந்த விஷயத்தில், மனுதாரரின் வழக்கறிஞர் கூட்டரசு நீதிமன்றத்தின் முன் தனது தரப்பு நியாயங்களை வாதிடுவதை விடுத்து, மேல்முறையீட்டு நீதிமன்றத்தின் தீர்ப்பை பாதுகாப்பதில் மட்டுமே கவனம் செலுத்தினார்”.
“அந்த அணுகுமுறையைத் தேர்ந்தெடுத்த பிறகு, தனது தரப்பு வாதத்தைக் கேட்கும் உரிமை மறுக்கப்பட்டதாக மனுதாரர் இப்போது உரிமை கோர முடியாது,” என்று அவர் கூறினார்.
எவ்வித கட்டுப்பாடுகளும் இல்லை
வழக்கு விசாரணையின் போது, தீர்ப்பை ஒத்திவைப்பதற்கு முன், இசா தனது வாதங்களை முன்வைப்பதை கூட்டரசு நீதிமன்றம் எந்தவொரு கட்டத்திலும் தடுக்கவோ அல்லது கட்டுப்படுத்தவோ இல்லை என்று நீதிமன்ற நடவடிக்கைகள் பதிவு காட்டுவதாக அஜிசா மேலும் கூறினார்.
கூட்டரசு நீதிமன்றம் தீர்ப்பு வழங்குவதற்கு முன், தண்டனைக் குறைப்பு குறித்து வாதிட இசாவுக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டதாகக் கூறப்படும் வாதத்திற்கு பதிலளித்த அவர், நீதிமன்றம் மேல்முறையீட்டு அதிகார வரம்பைப் பயன்படுத்தியதால் அங்கு எந்தவொரு நடைமுறைத் தவறும் நடக்கவில்லை என்றார்.
உயர் நீதிமன்ற நிலையிலேயே தண்டனைக் குறைப்புக்கான வாதங்கள் ஏற்கனவே பரிசீலிக்கப்பட்டுவிட்டன என்றும், குறிப்பாக அரசுத் தரப்பு தண்டனையை அதிகரிக்கக் கோராததால், மேலும் வாதங்கள் தேவையில்லை என்றும் அவர் கூறினார்.
மேலும், அந்த நேரத்தில் இசா எந்தவொரு ஆட்சேபனையையும் தெரிவிக்கவில்லை அல்லது கூடுதல் தண்டனைக் குறைப்பு வாதங்களுக்கான கோரிக்கையையும் வைக்கவில்லை, எனவே தனக்கு வாதாட வாய்ப்பு மறுக்கப்பட்டதாக அவர் பின்னர் குற்றம் சாட்ட முடியாது என்றும் அவர் குறிப்பிட்டார்.
வழக்கின் பின்னணி
76 வயதான இசா, இந்த ஆண்டு பிப்ரவரி 10-ஆம் தேதி கூட்டரசு நீதிமன்றம் அரசுத் தரப்பின் மேல்முறையீட்டை ஏற்று, அவரது தண்டனை, சிறைத்தண்டனை மற்றும் அபராதத்தை மீண்டும் உறுதிப்படுத்தியதை அடுத்து, தற்போது ஆறு ஆண்டுகள் சிறைத்தண்டனை அனுபவித்து வருகிறார்.
பிப்ரவரி 3, 2021 அன்று, உயர் நீதிமன்றம் அவரைக் குற்றவாளி என அறிவித்து, ஆறு ஆண்டுகள் சிறைத்தண்டனையும் ரிம 15.45 மில்லியன் அபராதமும் விதித்தது. அபராதத்தைச் செலுத்தத் தவறினால் மேலும் இரண்டு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்படும் என்றும் தீர்ப்பளித்தது.
இருப்பினும், மார்ச் 6, 2024 அன்று, மேல்முறையீட்டு நீதிமன்றம் அந்தத் தண்டனையை ரத்து செய்து, சரவாக், கூச்சிங்கில் உள்ள மெர்டேகா பேலஸ் ஹோட்டல் & சூட்ஸ் (Merdeka Palace Hotel & Suites) விடுதியை Felda Investment Corporation Sdn Bhd வாங்கியது தொடர்பான ரிம 3 மில்லியன் ஊழல் குற்றச்சாட்டுகள் அனைத்திலிருந்தும் அவரை விடுவித்தது.
முன்னாள் நெகிரி செம்பிலான் மந்திரி பெசாரான இவர், Felda Investment Corporation Sdn Bhd மூலம் ரிம 160 மில்லியன் மதிப்புள்ள ஹோட்டலை வாங்குவதற்கு ஒப்புதல் அளிப்பதற்காக, அப்போதைய Gegasan Abadi Properties Sdn Bhd இயக்குனர் இக்வான் ஜைடலிடமிருந்து, தனது முன்னாள் சிறப்பு அதிகாரி ஜாஹித் அரிப் மூலம் ரிம 3.09 மில்லியன் லஞ்சமாகப் பெற்றதாகக் குற்றம் சாட்டப்பட்டார்.
இஷாம் தே போ தேக் (Hisyam Teh Poh Teik)
முன்னதாக, இசாவின் வழக்கறிஞர் இஷாம் தே போ தேக் வாதிடுகையில், முந்தைய கூட்டரசு நீதிமன்ற அமர்வு தனது கட்சிகாரருக்குப் பதில் அளிக்க வாய்ப்பளிக்காமல், வழக்கின் தகுதிகள் குறித்து விவாதித்ததால் அவர் கடுமையான நீதிமீறலுக்கு ஆளாகியுள்ளார் என்று கூறினார்.
இருப்பினும், அரசுத் தரப்பு துணை வழக்கறிஞர் அஃப்சைனிசாம் அப்துல் அஜீஸ், இசாவின் சட்டக் குழுவுக்கு வழக்கின் தகுதிகள் மற்றும் தண்டனைக் குறைப்பு குறித்து வாதிட வாய்ப்பு வழங்கப்பட்டது, ஆனால் அவர்கள் அதைச் செய்ய வேண்டாம் என்று தேர்ந்தெடுத்தனர் என சமர்ப்பித்தார்.
இன்றைய தீர்ப்பைத் தொடர்ந்து, இசாவிற்கு இருக்கும் கடைசி சட்டப்பூர்வ வழி, யாங் டி-பெர்துவான் அகோங்கிடம் (மாமன்னர்) அரச மன்னிப்பு கோருவது மட்டுமே ஆகும்.
























