கூடுதலான சுமைகளோடு உலக கால்பந்து நடுவர்கள்

இராகவன் கருப்பையா – அமெரிக்கா, கனடா, மெக்சிக்கோ, ஆகிய நாடுகளில் தற்பொழுது நடைபெற்றுக் கொண்டிருக்கும் உலகக் கிண்ண கால்பந்து போட்டிகளின் நடுவர்கள் தங்கள் பணிக்குத் தேவையான சுமார் 10 பொருள்களை உடம்பில் சுமந்து களத்தில் இறங்குகின்றனர் என்பது வியக்கத்தக்க ஒன்று.

குறைந்தது ஒன்றரை மணி நேரம், அல்லது சில வேளைகளில் இரண்டரை மணி நேரம் வரையில் கூட திடலில் மேலும் கீழும் குறுக்கும் நெருக்குமாக அவர்கள் ஓடி ஆட்டத்தை மிக கவனமாக கண்காணிக்க வேண்டியிருக்கிறது.

ஆட்டத்தை உன்னிப்பாக கவனிப்பதற்கு தற்பொழுது அதிநவீனத் தொழில்நுட்பம் பெருமளவில் பயன்படுத்தப்படுகிற போதிலும் விளையாட்டாளர்களோடு திடலில் இறங்கும் ஒரு நடுவருக்கு அந்த பொருள்கள் மிகவும் அவசியமானவையாக உள்ளன.

கடந்த காலங்களில் முற்றிலும் கருப்பு நிறத்திலான உடையில் களத்தில் இறங்கும் அவர்களுடைய கையில் ‘விசில்’ ஒன்று இருப்பதை மட்டும்தான் நாம் பார்த்திருக்கிறோம்.

உண்மையில் அவர்களிடம் 2 ‘விசில்கள்’ இருக்கும் விவரம் நிறைய பேருக்குத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. முதல் ‘விசில்’ திடீரென பழுதடைந்தால் அல்லது கீழே விழுந்துவிட்டால் அவசர பயன்பாட்டுக்குத் தேவையான 2ஆவது ‘விசிலை’ தங்களுடைய சட்டைப் பையில் அவர்கள் வைத்திருப்பார்கள்.

சட்டைப் பையில் அவர்கள் வைத்திருக்கும் மற்றொரு பொருள் இரு வெவ்வேறு நிறத்திலான அட்டைகள். விளையாட்டு விதிகளை மீறும் ஆட்டக்காரர்களுக்கு எதிராக எச்சரிக்கை விடுப்பதற்கு மஞ்சள் நிறத்திலான அட்டையையும், ஆட்டத்திலிருந்து ஒருவரை வெளியேற்றுவதற்கு சிவப்பு நிற அட்டையையும் அவர்கள் உயர்த்திக் காட்டுவது நாம் அறிந்த ஒன்றுதான்.

மஞ்சள் நிற அட்டையை தங்களுடைய சட்டைப் பையிலும் சிவப்பு நிற அட்டையை கால்சட்டையின் பின் பாக்கெட்டிலும் அவர்கள் வைத்திருப்பது வழக்கம்.

ஆட்டத்தின் கால அவகாசத்தை துல்லியமாகக் கடைபிடிப்பதற்கு ‘டைமர்'(Timer) எனப்படும் இரு விசேஷக் கடிகாரங்களை கைகளில் அவர்கள் அணிந்திருப்பதை நாம் பார்க்க முடியும்.

ஆட்டம் தொடங்குவதற்கு முன் எந்தக் குழு பந்தை உதைத்து தொடக்குவது என்பதை தீர்மானிப்பதற்கு சுண்டப்படும் நாணயம் ஒன்றும் அவர்களுடைய பாக்கெட்டில் இருக்கும்.

ஆட்டத்தின் சில முக்கியமான குறிப்புகளை அவ்வப்போது பதிவு செய்வதற்கு சிறிய குறிப்பேடு(Notebook) ஒன்றையும் அதற்கான பேனாவையும் அவர்கள் அவசியம் வைத்திருக்க வேண்டும்.

அண்மைய ஆண்டுகளாக திடலில் தற்காலிகக் கோடுகளை வரைவதற்கு ‘மறையும் தெளிப்பு'(Vanishing spray) எனும் வெள்ளை நிறத்திலான நுரையை நடுவர்கள் பயன்படுத்துகின்றனர். அந்தக் கோடுகள் 2 நிமிடங்களுக்கிடையில் காற்றில் கரைந்துவிடும்.

அந்த நுரையைக் கொண்ட, சிறிய குப்பி(Canister) ஒன்றை தங்களுடைய இடைவார்பட்டையில் பின்புறமாக அவர்கள் செருகியிருப்பதை நாம் காணமுடியும்.

இவற்றோடு, நவீன தொழில்நுட்பம் வழங்கியுள்ள இரு முக்கியக் கருவிகளையும் இந்த நடுவர்கள் தற்போது சுமக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.

கடந்த சில ஆண்டுகளாக ‘மைக்'(Mike) எனப்படும் ஒலிவாங்கியை சுமக்கத் தொடங்கிய அவர்கள் கடந்த ஆண்டிலிருந்து ‘ரெஃப் கேம்'(RefCam) எனப்படும் ஒளிப்பதிவு கருவி ஒன்றையும் சுமக்கின்றனர்.

ஆட்டத்தை உன்னிப்பாக கண்காணிக்கும் கட்டுப்பாட்டு அறையுடன் தேவைப்படும் போது தொடர்பு கொள்வதற்கு அந்த ஒலிவாங்கி அவர்களுக்கு அவசியமாகிறது.

அதே போல, ‘நடுவரின் பார்வையில்’ பதிவாகும் சம்பவங்களை கட்டுப்பாட்டு அறையில் உள்ளவர்கள் பார்ப்பதற்கு அந்த ஒளிப்பதிவு கருவி பயன்படுத்தப்படுகிறது.

இவ்விரு கருவிகளும் நடுவர்களின் இரு காதுகளிலும் பொருத்தப்பட்டிருப்பதை நம்மால் காண முடியும்.

ஆக, அதிக எடை இல்லை எனும் போதிலும், திடலில் தங்களுடைய பணியை செவ்வனே ஆற்றுவதற்குத் தேவையான இத்தனை பொருள்களை அந்த நடுவர்கள் சுமக்கின்றனர் என்பது உண்மையிலேயே நம்மை வியப்பில் ஆழ்த்தும்  ஒரு விஷயம்தான்.