இராகவன் கருப்பையா – நாட்டின் 16ஆவது பொதுத் தேர்தலுக்கு முன்னோடியாக மாநில சட்டமன்றத் தேர்தல்கள் முடுக்கிவிடப்பட்டுள்ள வேளையில், ‘உரிமை’ கட்சியின் அரசியல் நிலைப்பாடு என்னவென்று தெரியவில்லை.
ஜொகூர் மாநில சட்டமன்றத் தேர்தல் கடந்த வாரம் நடந்து முடிந்துள்ள நிலையில் அடுத்தடுத்து நெகிரி செம்பிலான் மற்றும் மலாக்கா மாநிலத் தேர்தல்கள் நடைபெறவுள்ளன.
பெர்சமா மற்றும் வவாசான் போன்ற புதிய கட்சிகள் மட்டுமின்றி எம்.ஐ.பி.பி. போன்ற குட்டிக் கட்சிகளும் கூட தேர்தல் களத்தில் இறங்கி மக்கள் மத்தியில் உள்ள செல்வாக்கை சோதித்துப் பார்க்கும் படலத்தில் ஈடுபட்டுள்ளன.
இத்தகையச் சூழலில் பினேங் மாநிலத்தின் முன்னாள் துணை முதல்வர் ராமசாமி தலைமையில் தோற்றுவிக்கப்பட்ட ‘உரிமை’ கட்சியின் நிலை என்ன?
ஒரு அரசியல் கட்சியாக ‘உரிமை’ பதிவு செய்யப்படுவதற்கு மேற்கொள்ளப்பட்ட விண்ணப்பத்தை அரசாங்கம் இன்னும் அங்கீகரிக்காமல் இருப்பது அக்கட்சிக்கு ஒரு பின்னடைவுதான்.
பெரிக்காத்தான் கூட்டணியில் இணைவதற்கு மேற்கொள்ளப்பட்ட முயற்சியும் பலனளிக்கவில்லை. இந்தியர்களை பிரதிநிதிக்கும் வகையில் எம்.ஐ.பி.பி. அக்கூட்டணியில் ஏற்கெனவே அங்கம் வகிப்பதால் ‘உரிமை’யை அவர்கள் ஏற்கத் தயாராய் இல்லை.எனினும் உறுப்பினர்கள் எண்ணிக்கையின் அடிப்படையில் அக்கட்சியின் பலம் என்னவென்று தெரியவில்லை. அதிகமான உறுப்பினர்களைக் கொண்டிருந்தால் பல கூட்டணிகளிடமிருந்து போட்டி போட்டுக் கொண்டு அழைப்புகள் வரும் அல்லவா!
கட்சிக்கு அரசாங்க பதிவு இன்னும் கிடைக்கவில்லை எனும் போதிலும் தற்காலிகமாக, இணை உறுப்பினர்களாக அந்த கூட்டணிகள் இவர்களை சேர்த்துக் கொள்ள வாய்பிருக்கிறது.
மாநில நீதியில் பொறுப்பாளர்களை நியமனம் செய்து மக்களுக்கு அடிப்படை சேவைகளை அக்கட்சி வழங்கி வருவது பாராட்டுக்குரிய ஒன்றுதான். ஆனால் அந்த பொறுப்பாளர்களுக்குப் பின்னால் எத்தனை உறுப்பினர்கள் இருக்கிறார்கள் என்று தெரியவில்லை.
கடந்த 2023ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில் தோற்றம் கண்ட அக்கட்சி, தொடக்கத்தில் மிகவும் சுறுசுறுப்பாக இயங்கியது என்றுதான் சொல்ல வேண்டும்.
ஆனால் நாளடைவில் சன்னம் சன்னமாக அதன் செயல்பாடுளில் சுணக்கம் காணப்பட்டதை மக்கள் உணராமல் இல்லை. இந்நிலையை அக்கட்சி நிவர்த்தி செய்ய வேண்டும்.
அதன் தலைவர் ராமசாமி, ஜ.செ.க. மற்றும் பி.கே.ஆர். போன்ற கட்சிகள் மீது அநாவசியமாக வசைபாடுவதை குறைத்துக் கொண்டு, தனது கட்சியின் பலத்தை அதிகரிப்பதில் முழு கவனத்தையும் செலுத்த வேண்டும்.
முழு தேர அரசியல் விமர்சகர் போல மற்ற கட்சிகளைப் பற்றியும் அவற்றின் தலைவர்களைப் பற்றியும் பலவாராக விமர்சனம் செய்வதில் அர்த்தமில்லை. அதனால் ‘உரிமை’க்கு எவ்வித பயனும் இல்லை.
உறுப்பினர்களின் எண்ணிக்கை பிரமிக்கும் வகையில் இருந்தால் அரசாங்கப் பதிவு தொடர்பாக தற்பொழுது நிலுவையில் இருக்கும் அக்கட்சியின் நீதிமன்ற வழக்கும் கூட சற்று ஏதுவாக அமைய வாய்ப்பிருக்கிறது.
இதற்கிடையே பெரிக்காத்தானிலிருந்து விலகி, புதிய கூட்டணி ஒன்றைத் தொடங்கவிருப்பதாக சில தினங்களுக்கு முன் கோடிக்காட்டிய முன்னாள் பிரதமர் முஹிடின், ‘உரிமை’யும் அதில் இணைத்துக் கொள்ளப்படும் என்று குறிப்பிட்டார்.
அத்தகைய சூழலில் ‘உரிமை’க்கு ஒரு அரசியல் தளம் கிடைக்கும் எனும் போதிலும் எந்த அளவுக்கு அது பயனாகவும் ஆக்ககரமாகவும் அமையும் என்று தெரியாது.
ஏனெனில் பாஸ் கட்சியுடன் ஏற்பட்ட மோதலைத் தொடர்ந்து முஹிடினின் அரசியல் நிலைத்தன்மை தற்போது படு வீழ்ச்சி கண்டு மோசமானக் கட்டத்தில் இருப்பதைப் போல் தெரிகிறது.
























