அந்தச் சிறுமி 2025 முதல் துஷ்பிரயோகம் செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது.
அந்த 12 வயது சிறுமி மருத்துவப் பரிசோதனைக்காக சுல்தானா நோரா இஸ்மாயில் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
கடந்த ஆண்டிலிருந்து தனது 12 வயது மகளுக்குப் பாலியல் தொல்லை அளித்ததாகக் கூறப்படும் புகாரில், விசாரணைக்கு உதவும் வகையில் எண்ணெய் பனைத் தோட்டத் தொழிலாளி ஒருவர் ஏழு நாட்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
54 வயதுடைய அந்த நபர் அடுத்த செவ்வாய்க்கிழமை வரை விளக்கமறியலில் வைக்கப்படுவார் என்று பத்து பாஹாட் மாஜிஸ்திரேட் நுராசிதா ஏ ரஹ்மான் கூறியதாக பெரித்தா ஹரியான் செய்தி வெளியிட்டுள்ளது.
காவல்துறை அறிக்கையின்படி, பாதிக்கப்பட்ட சிறுமி தனது பள்ளியில் சுகாதாரப் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட போதே இந்த விவகாரம் வெளிச்சத்திற்கு வந்தது.
அந்தச் சிறுமி மனச்சோர்வுடனும், தனிமையுடனும் காணப்பட்டதை கவனித்த மருத்துவப் பணியாளர்கள், அவர் எதிர்நோக்கும் பிரச்சனைகள் குறித்துக் கேட்டனர். அப்போது 2025-ஆம் ஆண்டிலிருந்து தனது பெற்ற தந்தை தனக்குப் பாலியல் தொல்லை கொடுத்ததாக அவர் தெரிவித்தார்.
பெற்றோரின் விவாகரத்திற்குப் பிறகு தனது அத்தையுடன் வசித்து வரும் அந்தச் சிறுமி, கடைசியாக மே 3-ஆம் தேதி பத்து பாஹாட்டில் உள்ள தனது தந்தையின் வீட்டில் இச்சம்பவம் நடந்ததாகக் கூறினார். மேலும், பிப்ரவரி மாதத்திலிருந்து ஆபாச வீடியோக்களைப் பார்க்குமாறு தந்தை தன்னை அழைத்ததாகவும் அவர் தெரிவித்தார்.
அவர் மருத்துவப் பரிசோதனைக்காக சுல்தானா நோரா இஸ்மாயில் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டதோடு, நேற்று காவல்துறையில் புகார் அளித்தார்.
நேற்று இரவு சந்தேக நபரை கைது செய்த காவல்துறையினர், அவரது கைப்பேசியையும் பறிமுதல் செய்தனர்.
























