பொது EV சார்ஜிங் வசதிக்கான நிதிக்காக மின்சார வாகன விற்பனைக்கு கட்டணம் விதிக்க அரசு ஆலோசனை

முதலீடு, வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் ஜொஹாரி கானி கூறுகையில், இத்தகைய முதலீடுகளை மேற்கொள்வதில் புத்ராஜயா வாகன உற்பத்தியாளர்கள் அல்லது விநியோகஸ்தர்களை மட்டுமே நம்பி இருக்க முடியாது என்றார்.

முதலீடு, வர்த்தகம் மற்றும் தொழில் அமைச்சர் ஜோஹாரி கானி கூறியதாவது, நாடு முழுவதும் விரிவான பொதுமக்கள் பயன்பாட்டிற்கான மின்சார வாகன (EV) சார்ஜிங் உள்கட்டமைப்பு அமைப்பது, நாட்டில் மின்சார வாகனங்களின் பரவலான பயன்பாட்டை ஊக்குவிக்க மிகவும் அவசியமானது.

மலேசியாவில் விற்கப்படும் ஒவ்வொரு மின்சார வாகனத்திற்கும் (EV) பொதுமக்கள் பயன்பாட்டிற்கான EV சார்ஜிங் நிலையங்களை விரிவுபடுத்தும் நிதிக்காக ஒரு லெவி (Levy) விதிப்பதை அரசு பரிசீலித்து வருவதாக முதலீடு, வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் ஜொஹாரி கானி தெரிவித்தார்.

இன்று நாடாளுமன்றத்தில் பேசிய ஜொஹாரி, நாடு முழுவதும் பொதுப் பயன்பாட்டிற்கான EV சார்ஜிங் உள்கட்டமைப்பை உருவாக்குவதற்கான நிதி வசதி அரசுக்கு சவாலாக இருப்பதாகவும், இது EV பயன்பாட்டை அதிகரிக்க மிகவும் அவசியமானது என்றும் கூறினார்.

“விற்கப்படும் ஒவ்வொரு EV-க்கும் ஒரு லெவி விதித்து, அதன் மூலம் கிடைக்கும் தொகையை பொதுச் சார்ஜிங் நிலையங்களை அமைப்பதற்கான தனிப்பட்ட நிதியாக மாற்றலாம். ஏனெனில், இந்த முதலீட்டை முழுமையாக வாகன உற்பத்தியாளர்கள் அல்லது விநியோகஸ்தர்களையே நம்பி செய்ய முடியாது,” என்று அவர் கூறினார்.

EV சந்தையை வளர்க்கவும், முதலீடுகளை ஈர்க்கவும், முழுமையாக வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட (CBU) மின்சார வாகனங்களுக்கு நான்கு ஆண்டுகளாக இறக்குமதி வரி, உற்பத்தி வரி (Excise Duty) மற்றும் விற்பனை வரி (Sales Tax) விலக்கு வழங்கப்பட்டதாக ஜொஹாரி தெரிவித்தார்.

ஆனால், இந்த வரிச்சலுகைகளால் அந்த நான்கு ஆண்டுகளில் அரசு சுமார் ரிம 3.3 பில்லியன் வரி வருவாயை இழந்ததுடன், பொதுச் சார்ஜிங் நிலையங்களில் EV துறையினரின் முதலீடும் எதிர்பார்த்த அளவுக்கு அமையவில்லை என்றார்.

“நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு பொதுச் சார்ஜிங் நிலையங்களின் எண்ணிக்கையை மதிப்பீடு செய்தபோது, EV துறையினரிடமிருந்து எதிர்பார்த்த முதலீடு கிடைக்கவில்லை,” என்று அவர் கூறினார்.

இதன் காரணமாக, இறக்குமதி செய்யப்பட்ட CBU EV-களுக்கான வரிச்சலுகையை அரசு நீட்டிக்கவில்லை. அதேவேளை, உள்நாட்டில் தொகுத்து தயாரிக்கப்படும் (CKD) EV-களுக்கான வரிச்சலுகை 2027 டிசம்பர் 31 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இது உள்நாட்டு EV தொழில்துறையின் வளர்ச்சியை ஆதரிக்கும் நோக்கத்துடன் மேற்கொள்ளப்பட்ட முடிவு என அவர் விளக்கினார்.

BYD-யின் தஞ்சோங் மாலிம் தொழிற்சாலை குறித்து இன்னும் அதிகாரப்பூர்வ முடிவு இல்லை

மற்றொரு பெர்னாமா செய்தியின்படி, சீன EV உற்பத்தியாளரான BYD, பேராக் மாநிலத்தின் தஞ்சோங் மாலிமில் தொழிற்சாலை அமைக்கும் திட்டத்தை அரசின் நிபந்தனைகளின் அடிப்படையில் தொடருமா என்பது குறித்து இதுவரை அதிகாரப்பூர்வ உறுதிப்படுத்தல் எதுவும் அமைச்சகத்திற்கு கிடைக்கவில்லை என்று ஜொஹாரி தெரிவித்தார்.

அரசு விதித்துள்ள நிபந்தனைகளின்படி, தஞ்சோங் மாலிமில் தயாரிக்கப்படும் வாகனங்களில் குறைந்தது 80% ஏற்றுமதி செய்யப்பட வேண்டும். மீதமுள்ள 20% வாகனங்கள் ஒவ்வொன்றும் ரிம 200,000-க்கு மேற்பட்ட விலையில் உள்ளூர் சந்தையில் விற்கப்பட வேண்டும்.

“இந்த முதலீட்டை தொடரலாமா, ஒத்திவைக்கலாமா அல்லது மாற்றலாமா என்பது முழுமையாக அந்த நிறுவனத்தின் வணிகத் தீர்மானமாகும்,” என்று அவர் கூறினார்.

உள்ளூர் தொழில் வளர்ச்சிக்கு முன்னுரிமை

EV முதலீடுகள் உள்ளூர் விற்பனையாளர் (Vendor) பங்களிப்பை அதிகரிக்கவும், உள்ளூரில் தயாரிக்கப்படும் உதிரிபாகங்களின் பயன்பாட்டை ஊக்குவிக்கவும், தொழில்நுட்ப பரிமாற்றத்தை ஏற்படுத்தவும் அரசு நடவடிக்கை எடுத்து வருவதாக ஜொஹாரி தெரிவித்தார்.

அரசின் ஊக்கத்தொகைகளைப் பெற விரும்பும் நிறுவனங்கள், உள்ளூர் சப்ளையர்களை தங்களின் விநியோகச் சங்கிலியில் இணைத்துக்கொண்டு, உள்ளூர் உதிரிபாக உற்பத்தியாளர்கள் மற்றும் விற்பனையாளர்களின் வளர்ச்சிக்கு பங்களிக்க வேண்டும் என்றார்.

“அனைத்து உதிரிபாகங்களையும் வெளிநாடுகளில் இருந்து கொண்டு வந்து, இங்கு வெறும் வாகனங்களை ஒன்றிணைத்து விற்பனை செய்து, அதற்கும் அரசின் ஊக்கத்தொகையை எதிர்பார்த்தால் அதை அனுமதிக்க முடியாது. அது கடந்த 30 முதல் 40 ஆண்டுகளில் நாம் உருவாக்கியுள்ள நாட்டின் வாகனத் தொழில் சூழலை பாதிக்கும்,” என்று அவர் கூறினார்.

மேலும், Proton மற்றும் Perodua நிறுவனங்கள் இணைந்து சுமார் 733 Tier 1, Tier 2 மற்றும் Tier 3 விற்பனையாளர்களைக் கொண்ட வலையமைப்பை உருவாக்கியுள்ளன. இவர்கள் நாட்டின் வாகன உதிரிபாக உற்பத்தியில் 72% முதல் 82% வரை பங்களித்து வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

மலேசியா, உள்ளூர் தொழில்துறை வளர்ச்சி, தொழில்நுட்ப பரிமாற்றம் மற்றும் உயர்தர திறன்கள் கொண்ட வேலைவாய்ப்புகளை உருவாக்கும் EV முதலீடுகளை தொடர்ந்து வரவேற்கும் என்றும் ஜொஹாரி கானி கூறினார்.