ராக்கியின் மரணம்: ‘கொல்லும் நோக்கம் எதுவும் இல்லை’ என்கிறார் நாய் பிடிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்ட நபர்.

கிள்ளான், சிலாங்கூரில் நடைபெற்ற நாய் பிடிக்கும் நடவடிக்கையின் போது ‘ராக்கி’ என்ற நாய் உயிரிழந்த விவகாரத்துடன் தொடர்புடைய நபர் ஒருவர், அந்நாயைக் கொல்லும் எண்ணம் தமக்கு இல்லை என்று கூறித் தனது செயலை நியாயப்படுத்தியுள்ளார்.

தனக்கும் தனது குடும்பத்தினருக்கும் எதிராக விடுக்கப்பட்ட மரண அச்சுறுத்தல்கள் மற்றும் எதிர்ப்புகளால் மன அழுத்தத்தில் வாழ்ந்து வருவதாகக் கூறிய 24 வயதான ஷா ஹிஸாம், ராக்கியிடம் கொடூரமாக நடந்து கொண்டதாகக் கூறப்படும் காணொளிகள் இணையத்தில் பரவியதைத் தொடர்ந்து இந்த விவகாரத்தில் சிக்கினார்

இருப்பினும், ஷா, தமக்கு ஒப்படைக்கப்பட்ட கடமைகளை நிறைவேற்றுவதற்காகவே சம்பவ இடத்தில் இருந்ததாக வலியுறுத்தினார். ராக்கியின் மரணம் தமது நோக்கத்திற்கு அப்பாற்பட்டது என்றும், அது தம்மையும் வருத்தமடையச் செய்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.

இன்று ஷா ஆலமில் நடைபெற்ற #JusticeForShah செய்தியாளர் சந்திப்பில், “நான் விலங்குகள் வதைக்கப்படுவதை ஆதரிப்பவன் அல்ல, அதே போல் எந்தவொரு விலங்கையும் காயப்படுத்தும் அல்லது கொல்லும் எண்ணம் எனக்கு இல்லை. எந்தவொரு விலங்கையும் காயப்படுத்தவோ கொல்லவோ வேண்டும் என்ற நோக்கத்துடன் நான் அன்று இரவு அங்கு செல்லவில்லை,” என்று ஹரியான் மெட்ரோ நாளிதழுக்கு அளித்த பேட்டியில் அவர் கூறியுள்ளார்.

இந்த நிகழ்வில் சுயேச்சை மதப்போதகர் பிர்தாஸ் வோங் (Firdaus Wong) மற்றும் வழக்கறிஞர்கள் ரஃபீக் ரஷீத் அலி, மஹ்மூத் ஜுமார், ஆகிஃப் ருஸ்லி ஆகியோரும் கலந்துகொண்டனர்.

அன்று இரவு நடைபெற்ற நடவடிக்கையில் மற்ற 12 தெருநாய்கள் எவ்வித காயமுமின்றி வெற்றிகரமாகப் பிடிக்கப்பட்டதைச் சுட்டிக்காட்டிய வழக்கறிஞர் ரஃபீக், தனது கட்சிக்காரருக்கு எதிராக வந்த அச்சுறுத்தல் மற்றும் அவதூறு கருத்துக்கள் அனைத்தையும் ஷாவின் சட்டக் குழு ஆவணப்படுத்தி வருவதாகத் தெரிவித்தார்.

“ஷாவுக்கு எதிராகத் தூண்டுதல்களை உருவாக்கி, அவரது பெயரைக் கெடுக்கும் நபர்கள் அல்லது இணையதளங்களுக்கு எதிராக அவதூறு வழக்குகள் உட்பட சிவில் சட்ட நடவடிக்கைகளைத் தொடங்குவதற்கு நாங்கள் தயங்க மாட்டோம்,” என்று அவர் கூறினார்.

மேலும், ஜூலை 29 அன்று நடந்த இந்நடவடிக்கையில் தாமான் தெலுக் கெடுங் இண்டா, ஜாலான் சாமா காகா குடியிருப்புவாசிகள் அமைப்பின் (KRT) அழைப்பின் பேரில், குடியிருப்பாளர்களின் பிரதிநிதியாகவே ஷா கலந்துகொண்டார் என்றும் ரஃபீக் வெளிப்படுத்தினார்.

குழப்பமான சூழ்நிலை

இந்நடவடிக்கையில் ஈடுபட்ட அனைவருக்கும், நாய்களை எவ்வாறு பிடிப்பது என்பது குறித்து கிள்ளான் மாநகராட்சி (MBDK) பணியாளர்கள் முன்னதாக விளக்கமளித்து, நாய்களைப் பிடிக்கப் பயன்படும் வளையக் கருவியையும் (loop tool) வழங்கியதாக வழக்கறிஞர் கூறினார்.

ஷாவின் வாக்குமூலத்தின்படி, ராக்கியின் உரிமையாளர் என்று கூறிக்கொண்ட பெண் ஒருவர், நாயைக் கொண்டு செல்வதைத் தடுப்பதற்காக அதன் உடலைக் கட்டிப்பிடித்துக்கொண்டு அதன் மீது அமர்ந்தபோது சூழ்நிலை மிகவும் குழப்பமாக மாறியதாகக் கூறப்படுகிறது.

“அந்த நேரத்தில், ராக்கியின் கழுத்தில் வளையக் கருவி மாட்டியிருந்த நிலையிலேயே இழுபறி நிலை ஏற்பட்டது. அந்தச் சூழ்நிலை மிகவும் பதற்றமாகவும் குழப்பமாகவும் மாறியது,” என்று ரஃபீக் கூறினார்.

முன்னதாக, ராக்கியின் கழுத்தில் வளையக் கருவி இறுக்கப்படுவதற்கு முன்பு, அது மலம் கழிக்கும் அளவுக்குக் தடிகளாலும், இரும்புச் கம்பிகளாலும், பிவிசி (PVC) குழாய்களாலும் அடிக்கப்பட்டதாகத் தனது அண்டை வீட்டார்கள் கூறியதாக ராக்கியின் உரிமையாளரான ரோகினி தேவி தெரிவித்து இருந்தார்.

நாய் வளர்ப்பதற்கான உரிமம் (licence) அவர்களிடம் இல்லை என்பதால், ராக்கியைப் பிடித்து வைத்திருந்தவர்கள் அவரை விடுவிக்க மறுத்ததாக ரோகினி குற்றம் சாட்டினார். தனக்கு உரிமம் இல்லை என்பதை ஒப்புக்கொண்ட அவர், நாயை உள்ளூர் மாநகராட்சியிடம் தானே ஒப்படைக்கத் தயாராக இருந்ததாகவும் கூறினார்.

“அவனை விட்டுவிடுமாறு நான் பலமுறை கெஞ்சினேன், ஆனால் அவர்கள் கயிற்றை தொடர்ந்து இழுத்துக் கொண்டே இருந்தனர்,” என்று கூறிய அவர், சில நபர்கள் தன்னையும் தனது குடும்பத்தினரையும் ராக்கியை விடுவிக்க விடாமல் தடுத்ததாகவும், அதில் ஒருவர் தன்னைத் தடியால் அடித்ததாகவும் குற்றம் சாட்டினார்.

கிள்ளான் மாநகராட்சியின் (MBDK) வலைத்தளத்தின்படி, நாய்கள் மற்றும் நாய் வளர்ப்பு இல்லங்களுக்கான உரிம உபவிதிகள் 2007-ன் கீழ் நாய் உரிமையாளர்கள் கட்டாயம் உரிமம் பெற வேண்டும்.

விலங்கைக் கொன்று தீங்கிழைத்த குற்றத்திற்காக, குற்றவியல் சட்டத்தின் (Penal Code) பிரிவு 428-ன் கீழ் வழக்கு விசாரணை செய்யப்பட்டு, காவல் துறையினர் இது தொடர்பான விசாரணை அறிக்கையைத் துணை அரசாங்க வழக்கறிஞர் அலுவலகத்தில் சமர்ப்பித்துள்ளனர்.

விலங்கு நலச் சட்டம் 2015-ன் கீழ், விலங்கு வதை குறித்து சிலாங்கூர் கால்நடை பராமரிப்புத் துறையும் (DVS) இச்சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தி வருகிறது.