சமீபத்தில் உயிரிழந்த 14 வயது மாணவி ஒருவரின் தாய், தனது மகள் துன்புறுத்தல் அல்லது கேலி செய்தல் காரணமாகவே உயிரிழந்ததாகக் கூறி, அவருக்கு நீதி கேட்கிறார்.
கஸ்தூரி என்று மட்டுமே அழைக்கப்படும் அந்தப் பெண், தனது மகளுக்கு ஏற்பட்ட இந்த நிலைமை வேறு எந்தக் குழந்தைக்கும் ஏற்படக் கூடாது என்று கூறினார். தனது மகளுடன் பேசிய உரையாடல்களின் அடிப்படையில் தான் அவர் இந்த துன்புறுத்தல் குற்றச்சாட்டைக் கூறியுள்ளார்.
ஒரு தாயாக, என் மகள் துன்புறுத்தப்பட்டாள் (நாங்கள் பேசிய உரையாடல்களின் அடிப்படையில்) என்பதை நான் அறிவேன். அவள் இந்த துன்புறுத்தலால் கடுமையான அழுத்தத்தை எதிர்கொண்டாள்.
“எனக்கு இவ்வளவு தான் தெரியும். இப்போது என் மகள் என்னை விட்டுச் சென்றுவிட்டாள்,” என்று அஸ்ட்ரோ அவானி செய்தி நிறுவனத்திடம் அவர் கூறியதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
மகள் இறப்பதற்கு சில நாட்களுக்கு முன்பு தாயுடன் பேசிய கடைசி வார்த்தைகள் கஸ்தூரியின் நினைவில் நிழலாடிக் கொண்டிருக்கின்றன.
அவற்றில் ஒன்று, மகள் தனது தாய்க்குப் பிறந்தநாள் பரிசு கொடுக்க விரும்பியது பற்றிய உரையாடலாகும்.
“அவளுடைய சகோதரி (பாதிக்கப்பட்டவரின் சகோதரி) வந்து எனக்கு ஒரு பரிசைக் கொடுத்தார். நான் அதைத் திறந்தபோது, ‘உன் சகோதரி பரிசு கொடுத்துவிட்டாள், நீ எனக்கு எதுவும் கொடுக்கப் போவதில்லையா?’ என்று ஜோக்காகக் கேட்டேன். அதற்கு அவள் சிரித்துக் கொண்டே பரிசு ‘வழியில் வந்து கொண்டிருக்கிறது’ (On the way) என்று கூறினாள்.
அதனால், வழக்கமாக மக்கள் டிக்டாக் (TikTok) வழியாகப் பொருட்களை ஆர்டர் செய்வது போல அவளும் ஏதோ ஆர்டர் செய்திருக்கிறாள் போலிருக்கிறது என்று நான் நினைத்தேன். அந்தப் பொருள் இன்னும் வழியில் வந்துகொண்டிருக்கிறது என்று நினைத்தேன்.
சில நாட்களுக்குப் பிறகு, நான் மீண்டும் கேட்டேன்; பரிசு எங்கே? ஏனென்றால், அதற்கு முன்பு அவள் ஒரு பொருளை ஆர்டர் செய்திருப்பதாகவும், அதற்குப் பணம் செலுத்துமாறும் என்னிடம் கூறியிருந்தாள். அந்தப் பொருள் எப்போது வரும் என்று நான் கேட்டபோது, அவள் செக் செய்துவிட்டு, அது இன்னும் விமான நிலையத்தில் தான் இருக்கிறது, இன்னும் வரவில்லை என்று கூறினாள்.
அதனால் அந்தப் பரிசு பிறகு வந்து சேரும் என்று நினைத்தேன். ஒருவேளை காத்திருப்பதற்கு தகுதியான ஒரு நல்ல பரிசாக இருக்கும் என்றும் எண்ணினேன். ஆனால், அவள் குறிப்பிட்ட அந்த பரிசு உண்மையில்…” என்று கஸ்தூரி கூறியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், தனது மகள் ஒரு நடிகையாக ஆக வேண்டும் என்ற ஆசையைக் கொண்டிருந்ததாகவும் கஸ்தூரி கூறினார்.
அமைச்சகம் மற்றும் காவல்துறையின் நடவடிக்கை:
கல்வி அமைச்சர் பத்லினா சிடெக்
ஆகஸ்ட் 20 அன்று, கல்வி அமைச்சர் பத்லினா சிடேக் (Fadhlina Sidek), அந்த மாணவியின் மரணம் குறித்த உள் விசாரணை உடனடியாக நிறைவு செய்யப்பட வேண்டும் என்று உத்தரவிட்டார்.
“துன்புறுத்தல் (Bullying) மற்றும் இனவாதம் தொடர்பானது உட்பட, பொதுமக்கள் கவலைப்படும் அனைத்து விவகாரங்களும் தீவிரமாக எடுத்துக்கொள்ளப்பட்டு, உண்மைகள் மற்றும் உரிய வழிமுறைகளின் அடிப்படையில் உடனடியாகத் தீர்க்கப்பட வேண்டும்,” என்று அவர் தனது முகநூல் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
சனிக்கிழமையன்று, கோலாலம்பூர் காவல்துறைத் தலைவர் பாதில் மார்சுஸ் (Fadil Marsus), துன்புறுத்தலுடன் தொடர்புடைய தண்டனைச் சட்டத்தின் பிரிவு 507B-ன் கீழ் விசாரணை நடைபெற்று வருவதாகத் தெரிவித்தார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், இதுவரை 92 சாட்சி வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகக் கூறியுள்ளார்.
ஆகஸ்ட் 18 அன்று அதிகாலை 1.59 மணிக்கு, ஜாலான் லங்காவியில் உள்ள தங்களது வீட்டில் மகள் மயக்கமடைந்த நிலையில் கிடப்பதாக கஸ்தூரியிடமிருந்து காவல்துறைக்கு அழைப்பு வந்ததாக பாதில் மேலும் தெரிவித்தார்.
கோலாலம்பூர் காவல்துறைத் தலைவர் பாதில் மார்சஸ்
அவரை ஆம்புலன்ஸ் மூலம் கோலாலம்பூர் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர், அங்கு அதிகாலை 2.25 மணிக்கு அவர் இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது.
தற்கொலை என்பது பல காரணிகளை உள்ளடக்கிய ஒரு சிக்கலான நிகழ்வாகும், ஆனால் அதைத் தடுக்க முடியும், மீண்டு வரவும் முடியும். நீங்களோ அல்லது உங்களுக்குத் தெரிந்த யாராவதோ மன போராட்டத்தை எதிர்கொண்டால், நீங்கள் தனிமையில் இல்லை – தயவுசெய்து உதவிக்குத் தொடர்பு கொள்ளவும்:
தாலியான் காசி ஹெல்ப்லைன் (Talian Kasih Hotline): 15999 (அழைப்பு) / +6019 26 15999 (வாட்ஸ்அப்)
சுகாதார அமைச்சகத்தின் தாலியான் ஹீல் (Talian Heal): 15555 (தினமும் காலை 8 மணி முதல் நள்ளிரவு 12 மணி வரை)
தி பிஃப்ரெண்டர்ஸ் ஹெல்ப்லைன் (The Befrienders Hotline): 03-76272929
அகாபே கவுன்சிலிங் சென்டர் மலேசியா (Agape Counselling Centre): 03-77855955 அல்லது 03-77810800
லைஃப் லைன் அசோசியேஷன் மலேசியா (Life Line Association): 03-42657995
























