தேசிய தினவிழாவிற்கு முன்னாள் பிரதமர்களுக்கு தானாகவே அழைப்பு விடுக்கப்படாது என அமைச்சகம் தெரிவித்துள்ளது

இன்றைய புத்ராஜெயா கொண்டாட்டத்தில் டாக்டர் மகாதீர் முகமது கலந்துகொள்வது குறித்து எழுந்துள்ள கேள்விகளைத் தொடர்ந்து இந்த தெளிவுபடுத்தல் வெளிவந்துள்ளது.

துன் டாக்டர் மகாதிர் முகமதுவின் மகன் முக்பீஸ், இன்று காலை புத்ராஜயாவில் நடைபெற்ற தேசிய தின விழாவில் தனது தந்தை கலந்துகொண்ட புகைப்படத்தை பதிவிட்டுள்ளார். அழைப்பிதழ் வராதபோதிலும் தனது தந்தை அவ்விழாவில் கலந்துகொண்டதாக அவர் தெரிவித்துள்ளார்.

தகவல் தொடர்பு அமைச்சகத்தின் தலைமைச் செயலாளர் அப்துல் ஹலீம் ஹம்சா, முன்னாள் பிரதமர்களுக்கு தேசிய தின விழாவிற்கான அழைப்பு தானாகவே  வழங்கப்படாது என்று தெரிவித்துள்ளார்.

இந்த ஆண்டின் கொண்டாட்டங்களை நிர்வகிக்கும் செயலகத்தின் தலைவருமான ஹலீம், தேசிய தின விழாவிற்கான அழைப்பிதழ்கள் தொடர்பாகத் தெளிவான நடைமுறைகள் உள்ளதை பிரதமர் துறையின் கீழ் இயங்கும் நெறிமுறை மற்றும் சர்வதேச மாநாட்டுப் பிரிவு உறுதிப்படுத்தியுள்ளதாகக் கூறினார்.

“2018-ஆம் ஆண்டு முதல் பின்பற்றப்படும் நடைமுறையின்படி, தேசிய தின விழாவிற்கான அழைப்புகள் முன்னாள் பிரதமர்களுக்கு தானாகவே அனுப்பப்படுவதில்லை,” என்று அவர் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

“இருப்பினும், எந்தவொரு முன்னாள் தலைவரின் வருகையும் தடுக்கப்படவில்லை. சம்பந்தப்பட்ட தரப்பினர் விண்ணப்பிப்பதன் மூலம், அதிகாரப்பூர்வ அழைப்புகளை நிர்வகிப்பதற்கான நடைமுறைகளுக்கு உட்பட்டு அவர்களின் வருகைக்கான ஏற்பாடுகள் செய்யப்படும்,” என்றும் அவர் கூறினார்.

முன்னாள் பிரதமர் மகாதீரின் மகன் முக்ரிஸ், புத்ராஜெயாவில் நடைபெற்ற கொண்டாட்டங்களில் தனது தந்தை கலந்துகொண்ட புகைப்படத்தைப் முகநூலில் (Facebook) பதிவிட்டிருந்தார். அழைப்பு அனுப்பப்படாதபோதிலும் தனது தந்தை அதில் கலந்துகொண்டார் என்பதைக் காட்டும் வகையில் அவர் பதிவிட்டிருந்த தலைப்பைத் தொடர்ந்து இந்த அறிக்கை வெளியாகியுள்ளது.

மேலும், மகாதீர் ஆகஸ்ட் 28 முதல் 31 வரை வெளிநாட்டில் இருப்பார் என்று பிரதமரின் அலுவலகத்தால் செயலகத்திற்குத் தெரிவிக்கப்பட்டிருந்ததாகவும் ஹலீம் கூறினார்.

நாடாளுமன்ற உறுப்பினர்கள் (ஊதியம்) சட்டம் 1980-ன் கீழ் உள்ள முன்னாள் பிரதமர்களுக்கான (ஊதியம்) விதிகளின்படி, பிரதமரால் பெறப்பட்டு ஒப்புதலளிக்கப்பட்ட “வெளிநாட்டில் ஓய்வெடுப்பதற்கான வசதிகள்” (Facilities for Rest Abroad) விண்ணப்பத்தின் அடிப்படையில் இந்தத் தகவல் அறியப்பட்டதாக அவர் கூறினார்.