ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளான போதிலும் சரவாக்கில் பறக்கும் மருத்துவர் சேவை தொடரும் என சுல்கிப்லி அறிவிப்பு

சரவாக், உலு பாராமில் ஐந்து பேர் பலியான ஹெலிகாப்டர் விபத்து நேரிட்ட போதிலும், ‘பறக்கும் மருத்துவர் சேவை’ தொடர்ந்து செயல்படும் என்று சுகாதார அமைச்சர் சுல்கிப்லி அகமத் இன்று தெரிவித்தார்.

1970களில் தொடங்கப்பட்ட இந்தச் சேவையானது, நாட்டின் உள்பகுதி கிராமங்களில் வாழும் சமூகத்தினருக்கு மருத்துவச் சுகாதார வசதிகளை வழங்குவதற்கு மிகவும் அவசியமானது.

நாங்கள் இந்தச் சேவையை இரட்டிப்பு வீரியத்துடன் தொடர்வோம். இச்சேவையை மேலும் வலுப்படுத்துவோம், என்று அவர் இங்கு நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார்.

நேற்று மிரி விமான நிலையத்திலிருந்து லாங் லேலாங் நோக்கிப் பறந்த BO-105 ரக ஹெலிகாப்டர், லாங் லேலாங் எஸ்டோல்போர்ட் அருகே விபத்துக்குள்ளானது. அதில் பயணித்த சுகாதார அமைச்சின் நான்கு பணியாளர்கள் மற்றும் ஒரு பைலட் உட்பட ஐந்து பேரும் உயிரிழந்தனர்.

இதனைத் தொடர்ந்து, விபத்துக்கான காரணம் உறுதி செய்யப்படும் வரை, அதே மாதிரியைச் சேர்ந்த அனைத்து ஹெலிகாப்டர்களையும் தற்காலிகமாக உடனடியாக தரையிறக்க பயன்பாட்டை நிறுத்த வேண்டும் என்று செனட்டர் ஆர்.ஏ. லிங்கேஸ்வரன் கோரிக்கை விடுத்துள்ளார்.

இந்தச் சேவைக்காக சுகாதார அமைச்சிடம் சொந்தமாக ஹெலிகாப்டர்கள் இல்லாததால், பறக்கும் மருத்துவர் சேவை செயல்பாடுகள் எப்போதுமே தனியார் நிறுவனங்களுக்கே ஒப்பந்த அடிப்படையில் வழங்கப்பட்டு வருவதாகவும் சுல்கிப்லி தெரிவித்தார்.

விபத்துக்குள்ளான ஹெலிகாப்டரின் பராமரிப்பு வரலாறு குறித்த விவரங்களை அமைச்சு சேகரித்து வருவதாகவும், அது விரைவில் தன்னிடம் வழங்கப்படும் என்றும் கூறிய அவர், இந்தச் சேவைக்காகப் பயன்படுத்தப்படும் ஹெலிகாப்டர்கள் வழக்கமான பராமரிப்புக்கு உட்படுத்தப்படுகின்றன என்றும் குறிப்பிட்டார்.

தற்போது இந்தச் சேவைக்குப் பயன்படுத்தப்படும் ஹெலிகாப்டர்களின் பாதுகாப்புத் தன்மை குறித்து, சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் கருத்துகளுக்காக அமைச்சு காத்திருக்கும் என்று சுகாதார இயக்குநர் டாக்டர் மகாதிர் அப்துல் வஹாப் தெரிவித்தார்.

அதன் பின்னரே, இந்தச் சேவைக்கு இந்த ஹெலிகாப்டர்களைத் தொடர்ந்து பயன்படுத்த முடியுமா என்பதை நாங்கள் தீர்மானிப்போம், என்று அவர் கூறினார்.

இன்று காலை தொடங்கிய விபத்து நடந்த இடத்திலான தேடுதல் மற்றும் மீட்புப் பணிகள், சரவாக் காவல்துறை மற்றும் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையின் கீழ் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும், பலியானவர்களின் உடல்களைப் பெற்றுக்கொள்வதற்காக மிரி மருத்துவமனை தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாகவும் சுல்கிப்லி தெரிவித்தார்.

பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்குத் தங்களது விளையாட்டு மற்றும் நலன்புரி சங்கத்தின் மூலம் நிதி உதவி உள்ளிட்ட தேவையான உதவிகள் வழங்கப்படுவதையும், மனநல மற்றும் உளவியல் சமூக ஆதரவு அளிக்கப்படுவதையும் அமைச்சு உறுதி செய்யும்.

இந்த விபத்தினால் பாதிக்கப்பட்டுள்ள பறக்கும் மருத்துவர் சேவை பிரிவைச் சேர்ந்த சுகாதார அமைச்சின் பணியாளர்களுக்கும் அதிர்ச்சிக்குப் பிந்தைய மனநல ஆதரவு வழங்கப்பட்டு வருவதாக அவர் தெரிவித்தார்.

 

 

-fmt