எண்ணெய் விலை உயர்வால் 2027 மேம்பாட்டுத் திட்டங்கள் பாதிக்கப்படாது – அக்மல் உறுதி

எண்ணெய் விலை உயர்வால் 2027 மேம்பாட்டுத் திட்டங்கள் பாதிக்கப்படாது” – அக்மல் உறுதி

உயரும் உலகளாவிய எண்ணெய் விலையால் 2027 வரவுசெலவுத் திட்டத்தின் கீழ் நாட்டின் மேம்பாட்டுத் திட்டங்கள் பாதிக்கப்படாது என்று பொருளாதார அமைச்சர் அக்மல் நசீர் இன்று தெரிவித்துள்ளார்.

அடுத்த ஆண்டுக்கான தேசிய மேம்பாட்டுச் செலவினங்கள் திட்டமிட்டபடி தொடரும் என்று அவர் கூறினார். எனினும், உலகளாவிய எண்ணெய் விலை உயர்வால் மானியங்கள் மற்றும் நாட்டின் நிதி நிலையில் ஏற்படும் தாக்கத்தை அரசாங்கம் கையாள வேண்டியிருக்கும்.

மேம்பாட்டுக்கான நிதி ஒதுக்கீடு அடுத்த ஆண்டும் தடையின்றித் தொடரும் என்பதற்கான உறுதிமொழியை அமைச்சகம் பெற்றுள்ளது.

எண்ணெய் விலையை நிர்வகிப்பது அவசரமான அல்லது குறுகிய கால விஷயமாக இருந்தாலும், நீண்ட கால அர்ப்பணிப்புகள் மற்றும் திட்டங்கள் கண்டிப்பாகத் தொடரப்பட வேண்டும் என்பதை நாங்கள் அங்கீகரிக்கிறோம்,” என்று புத்ராஜெயாவில் நடைபெற்ற அமைச்சின் மாதாந்திர கூட்டத்திற்குப் பிறகு அவர் கூறினார்.

மேற்கு ஆசியாவின் புவிசார் அரசியல் நகர்வுகளைத் தொடர்ந்து, எரிசக்தி சந்தையில் ஏற்பட்டுள்ள ஏற்ற இறக்கங்கள் காரணமாக உலகளாவிய எண்ணெய் விலைகள் இன்னும் கணிசமான தன்மைக்கு உட்பட்டே இருக்கின்றன.

ஈஸ்ட்-வெஸ்ட் பைப்லைன் முடங்கியதைத் தொடர்ந்து, சவுதி அரேபியா தனது எண்ணெய் ஏற்றுமதியை ஹார்முஸ் நீரிணை வழியாக மாற்றியதை செயற்கைக்கோள் தரவுகள் காட்டிய பின்னர், பிரெண்ட் கச்சா எண்ணெய் விலை 3.4% சரிந்து ஒரு பேரல் 100.34 அமெரிக்க டாலராகக் குறைந்துள்ளது என்று பேங்க் முஅமலாத் மலேசியா வங்கியின் தலைமைப் பொருளாதார நிபுணர் அஃப்சானிசாம் ரஷித் தெரிவித்துள்ளார்.

ஆகஸ்ட் மாதத்தில் நாளொன்றுக்கு சுமார் 700,000 பேரல்களாக இருந்த கச்சா எண்ணெய் ஏற்றுமதி, ஈஸ்ட்-வெஸ்ட் பைப்லைன் பாதிப்புக்குள்ளானதைத் தொடர்ந்து, சவுதி அரேபியா ஹார்முஸ் நீரிணை வழியாக தனது ஏற்றுமதியை நாளொன்றுக்கு சுமார் 2.9 மில்லியன் பேரல்களாக அதிகரித்துள்ளது.

உலகளாவிய எரிசக்தி நெருக்கடி காரணமாக, 2026 ஆம் ஆண்டில் எரிபொருள் மானியங்களுக்காக அரசாங்கம் கிட்டத்தட்ட 4,000 கோடி மலேசிய ரிங்கிட்டை  செலவிட நேரிடும் என்று கடந்த ஜூலை மாதம் பிரதமர் அன்வார் இப்ராகிம் கூறியிருந்தார். இது 2026 வரவுசெலவுத் திட்டத்தில் ஆரம்பத்தில் ஒதுக்கப்பட்ட 1,500 கோடி மலேசிய ரிங்கிட்டை விட இரு மடங்குக்கும் அதிகமாகும்.

முற்போக்கு ஊதியக் கொள்கை இந்த ஆண்டின் இறுதிக்குள் மதிப்பீடு செய்யப்படும்

தொழிலாளர்களின் ஊதியத்தை உயர்த்துவதில் முற்போக்கு ஊதியக் கொள்கையின் செயல்திறனை ஆராய்வதற்காக, இந்த ஆண்டின் இறுதிக்குள் அல்லது அடுத்த ஆண்டின் தொடக்கத்தில் அரசாங்கம் ஒரு விரிவான மதிப்பீட்டை மேற்கொள்ளும் என்று அமைச்சர் அக்மல் மேலும் தெரிவித்தார்.

இந்தக் கொள்கை தற்போது அமலாக்கக் கட்டத்தில் உள்ளதாகவும், இது 2027 இறுதி வரை செயல்படத் திட்டமிடப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார். இதனால், அரசாங்கத்தின் அடுத்தகட்ட நடவடிக்கைளைத் தீர்மானிப்பதற்கு இந்த மதிப்பீடு மிகவும் முக்கியமானது என்றும் அவர் குறிப்பிட்டார்.

ஊதிய உயர்வுகளுக்கான ஊக்கத்தொகைகளில் மட்டுமே இக்கொள்கை கவனம் செலுத்தக் கூடாது, மாறாக உற்பத்தித்திறன் மேம்பாடு, பயிற்சி மற்றும் தொழிலாளர்களின் திறன் மேம்பாடு ஆகியவற்றுடன் இது இணையாகச் செல்ல வேண்டும், என்றும் அக்மல் கூறினார்.

புள்ளிவிவரத் துறை நேற்று வெளியிட்ட ‘மலேசிய சம்பளம் மற்றும் ஊதியக் கணக்கெடுப்பு அறிக்கை 2025’ மேற்கோள் காட்டிய அவர், பணவீக்கம் இருந்தபோதிலும் உண்மையான ஊதியம் தொடர்ந்து வளர்ந்து வருவதாகக் குறிப்பிட்டார். இந்த அறிக்கை, உண்மையான ஊதியம் 3.3% அதிகரித்து 2,104 மலேசிய ரிங்கிட்டாக பதிவாகியுள்ளதைக் காட்டுகிறது.

ஊதிய நிலைகள் அத்துடன் சேர்த்து வாழ்க்கைச் செலவினங்களுடனும் ஒப்பிடப்பட்டு மதிப்பிடப்பட வேண்டும். இது அவர்கள் வாழும் பகுதி மற்றும் வீட்டுவசதி, உணவு, போக்குவரத்து மற்றும் கல்வி உள்ளிட்ட குடும்பத் தேவைகளுக்கு ஏற்ப மாறுபடுகிறது.

நாம் ஊதிய உயர்வை நோக்கி நகர்ந்தாலும், வாழ்க்கைச் செலவினங்கள் திறம்பட நிர்வகிக்கப்படாவிட்டால், அந்த ஊதிய உயர்வால் எந்தவொரு குறிப்பிடத்தக்கப் பெரிய தாக்கமும் ஏற்பட்டுவிடாது, என்றும் அவர் குறிப்பிட்டார்.

 

-fmt