சீனாவில் இருந்து மலேசியா திரும்பியதும் தனது ராஜினாமா கடிதத்தை சமர்ப்பிக்க உள்ளதாக DAP பொதுச்செயலாளர் லோக் சியூ பூக் கூறியுள்ளார்.
டிஏபி பொதுச்செயலாளர் லோக் சியூ பூக் தனது முடிவை மறுபரிசீலனை செய்யுமாறு பிரதமர் அன்வார் இப்ராஹிம் முன்னதாக வலியுறுத்தியிருந்தார்.
முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக்கிற்கு வழங்கப்பட்ட நிபந்தனையுடன் கூடிய மன்னிப்பைத் தொடர்ந்து, போக்குவரத்து அமைச்சர் பதவியிலிருந்து விலகும் தனது முடிவில் தான் உறுதியாக இருப்பதாக டி.ஏ.பி (DAP) பொதுச்செயலாளர் லோக் சியூ ஃபூக் (Loke Siew Fook) தெரிவித்துள்ளார்.
பிரதமர் அன்வார் இப்ராஹிமுடன் சீனாவுக்கு அதிகாரப்பூர்வ அரசுமுறைப் பயணம் சென்றுள்ள லோக், மலேசியா திரும்பியதும் தனது ராஜினாமா கடிதத்தை சமர்ப்பிக்க உள்ளதாக பெர்னாமா செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
முடிவு எடுக்கப்பட்டுவிட்டது. நான் மலேசியா திரும்பியதும் எனது ராஜினாமா கடிதத்தை பிரதமரிடம் சமர்ப்பிப்பேன் என்று ஹாங்க்சோ (Hangzhou) நகருக்கு வந்தடைந்த பிறகு செய்தியாளர்களிடம் அவர் சுருக்கமாகத் தெரிவித்தார்.
சீன அரசின் அழைப்பின் பேரில் ஷாங்காய் மற்றும் ஹாங்க்சோ ஆகிய நகரங்களுக்கு இந்த மூன்று நாள் அரசுமுறைப் பயணம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
முன்னதாக, அன்வார் பேசுகையில், லோக் தனது ராஜினாமா முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று தான் வலியுறுத்தியதாகவும், அரசாங்கத்தை சீர்குலைப்பதற்காகவே DAP அரசை விட்டு வெளியேற வேண்டும் என்று விரும்புபவர்களின் அழுத்தத்திற்கு கட்சி பணியக்கூடாது என்றும் கூறியிருந்தார்.
லோக்கின் அதிகாரப்பூர்வ விளக்கத்தைக் கேட்கவும், தனது ராஜினாமாவை மறுபரிசீலனை செய்யுமாறு அவரிடம் கேட்கவும் அவருடன் மேலும் விவாதிக்கப்போவதாக அன்வார் மீண்டும் வலியுறுத்தினார்.
DAP-யிலிருந்து தான் மட்டுமே பதவி விலக வேண்டும் என்ற கட்சியின் முடிவு ஒரு “பொறுப்பான முடிவு” என்பதில் லோக் உறுதியாக இருந்தார்.
அன்வாரால் தனது ராஜினாமா ஏற்றுக்கொள்ளப்பட்டால், அது போக்குவரத்து அமைச்சகத்தின் செயல்பாடுகளைப் பாதிக்காது என்று அவர் கூறினார்.
நஜிப்பிற்கு வழங்கப்பட்ட நிபந்தனையுடன் கூடிய மன்னிப்பு விவகாரத்தில் லோக் மட்டுமே அமைச்சராக ராஜினாமா செய்வார் என DAP-யின் மத்திய செயற்குழு (CEC) முடிவெடுத்துள்ளது. கட்சி அரசாங்கத்திலேயே நீடிக்கும் என்றும், அதன் பிற அமைச்சர்கள் அமைச்சரவையில் தொடர்வார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
DAP மத்திய செயற்குழு கூட்டத்தின் போது, வீட்டுவசதி மற்றும் உள்ளாட்சித் துறை அமைச்சர் ஙா கோர் மிங் (Nga Kor Ming) ராஜினாமா செய்ய முன்வந்ததாகவும், ஆனால் அவரை அமைச்சரவையில் தொடருமாறு லோக் சமாதானப்படுத்தியதாகவும் பெயர் குறிப்பிடாத DAP தலைவர் ஒருவரை மேற்கோள் காட்டி ஓரியண்டல் டெய்லி (Oriental Daily) செய்தி வெளியிட்டுள்ளது.
























