பண்டார் உத்தாமா பள்ளியில் கத்திக்குத்துக்கு ஆளான மாணவரின் குடும்பத்தினர் சிவில் வழக்குத் தொடர உள்ளனர்

கடந்த ஆண்டு தனது பள்ளியில் குத்திக் கொல்லப்பட்ட 16 வயதான யாப் ஷிங் சுயென் (Yap Shing Xuen)-இன் குடும்பத்தினர், கொலையாளிக்கு எதிரான கொலைக் குற்றச்சாட்டை ஷா ஆலம் உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்து அவரை விடுவித்ததைத் தொடர்ந்து, உரிமையியல் வழக்கு (civil action) தொடர உத்தேசித்துள்ளனர்.

இச்செய்தி, செப்டம்பர் 22 அன்று நீதிமன்றம் அளித்த தீர்ப்பை எதிர்த்து தலைமை வழக்கறிஞர் அலுவலகம் (AGC) மேல்முறையீடு செய்துள்ளதாக அறிவித்ததைத் தொடர்ந்து வெளியாகியுள்ளது.

யாப்பின் தாயார் வோங் லீ பிங், தற்போது வழக்குத் தொடர்பான விவரங்களை வெளியிட மறுத்துள்ளார். இதில், யாருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது, அந்த நடவடிக்கை எப்போது தொடங்கப்படும் என்பதும் அடங்கும். மேலும் தகவல்கள் உரிய நேரத்தில் வெளியிடப்படும் என்று அவர் தெரிவித்தார்.

கடந்த ஆண்டு அக்டோபர் 14 அன்று, பெட்டாலிங் ஜெயாவிலுள்ள பண்டார் உத்தாமாவில் யாப் அவரது சக பள்ளி மாணவனால் கொடூரமாகக் கொல்லப்பட்டார். இச்சம்பவத்திற்கு வழிவகுத்த சூழல்களை நினைத்துத் தாம் இன்னும் வேதனையடைவதாக வோங் (மேலே உள்ள படத்தில்) குறிப்பிட்டார்.

இந்தச் சோகம் நடப்பதற்கு முன்பே ஏதேனும் எச்சரிக்கை அறிகுறிகள் இருந்திருந்தால், அந்த அறிகுறிகள் கவனிக்கப்பட்டனவா?

அவை கவனிக்கப்பட்டிருந்தால், யாராவது உண்மையிலேயே போதுமான நடவடிக்கை எடுத்தார்களா?” என்று இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் ‘மலாய் மெயில்’ நாளிதழ் மேற்கோளிட்டுள்ளவாறு அவர் கேள்வி எழுப்பினார்.

பள்ளிகளில் இத்தகைய சோகங்கள் ஒருபோதும் நடக்காது என்று உத்திரவாதம் அளிக்குமாறு தாம் கேட்கவில்லை என்று கூறிய வோங், அதேவேளையில் ஆபத்தான எச்சரிக்கை அறிகுறிகளைக் காட்டும் மற்ற குழந்தைகளுக்குத் தேவையான உதவிகள் வழங்கப்படுவதற்கு முன்பு, ஒரு குழந்தை தன் உயிரை இழக்க வேண்டிய நிலை வரக்கூடாது என்று அவர் மேலும் கூறினார்.

குற்றம் சாட்டப்பட்ட மாணவன் பள்ளியில் படித்த காலத்தில் இந்த எச்சரிக்கை அறிகுறிகள் தவறவிடப்பட்டனவா என்றும் வோங் கேள்வி எழுப்பினார்.

“இரண்டு வாரங்களாக அந்த மாணவன் பள்ளிக்குக் கத்தியைக் கொண்டு வந்திருக்கிறான்—அதை ஏன் யாரும் கவனிக்கவில்லை? மற்ற மாணவர்களுக்கு இது கண்டிப்பாகத் தெரிந்திருக்கக் கூடும் என்றே நான் நினைக்கிறேன்.

ஆபத்தான ஏதேனும் விஷயங்களை அவர்கள் பார்த்தாலோ, அல்லது யாராவது பள்ளிக்குக் கத்தி போன்ற பொருட்களைக் கொண்டு வந்தாலோ ஆசிரியரிடம் தெரிவிக்க வேண்டும் என்று பள்ளி ஆசிரியர்கள் ஏன் குழந்தைகளுக்குச் சொல்லிக்கொடுக்கவில்லை?” என்று அவர் கேள்வி எழுப்பினார்.

அந்தச் செய்தியாளர் சந்திப்பில் கெப்போங் நாடாளுமன்ற உறுப்பினர் லிம் லிப் எங்கும் கலந்துகொண்டார்; அவரது அலுவலகம் அக்குடும்பத்திற்கு சட்ட உதவியை வழங்க முன்வந்தது.

செப்டம்பர் 14 அன்று, யாப்பைக் கொலை செய்த குற்றச்சாட்டில் கைதான 15 வயது சிறுவன், குற்றச்செயலில் ஈடுபட்டபோது மனநிலை சரியில்லாதவன் என்று கூறி உயர் நீதிமன்றம் அவனை விடுவித்தது.

நீதிபதி அட்லின் அப்துல் மஜித், அச்சிறுவனை சிலாங்கூர் சுல்தானின் ஒப்புதலின் பேரில் பேராக்கில் உள்ள உலு கிந்தா பஹாகியா மருத்துவமனையில் அடைத்து வைக்க உத்தரவிட்டார்.

சமூகத்துடன் மீண்டும் இணையத் தகுதியானவன் என மருத்துவ அதிகாரிகள் தீர்மானிக்கும் வரை அவன் அங்கேயே இருப்பான் என எதிர்பார்க்கப்படுகிறது.

நேற்று, நீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்துள்ளதாக தலைமை வழக்கறிஞர் அலுவலகம் (AGC) அறிவித்தது.

‘AGC-யின் நடவடிக்கையால் நெகிழ்ச்சி’

AGC-யின் மேல்முறையீட்டு அறிவிப்பு குறித்து கருத்து தெரிவித்த வோங்: “யாரோ ஒருவர் எனக்கு ஆதரவாக நிற்பது போல் உணர்ந்ததால் நான் மிகவும் நெகிழ்ந்துபோனேன்,” என்றார்.

தங்கள் கட்டுப்பாட்டிற்கு அப்பாற்பட்ட விஷயங்களில் தலையிட முயலாமல் மேல்முறையீட்டு நடைமுறைக்காகக் காத்திருப்பதாகக் கூறிய அவர், அரசாங்க ஆவணங்கள் மற்றும் மருத்துவ அறிக்கை உட்படச் சில சான்றாவணங்களை தங்களால் பெற முடியவில்லை என்று கூறினார்.

எனவே, மேல்முறையீட்டு நடைமுறைகள் நடந்து கொண்டிருக்கும் வேளையில், வழக்கின் சில அம்சங்கள் குறித்துக் கருத்து தெரிவிக்க மறுத்த அவர், மேல்முறையீட்டு நீதிமன்றம் முழுமையான ஆதாரங்களின் அடிப்படையில் தனது முடிவை எடுக்க வேண்டும் என்றார்.

குற்றம் சாட்டப்பட்டவனை மீண்டும் சந்திக்க விரும்புகிறீர்களா என்று கேட்டதற்கு, வோங்: “நான் அவனை மீண்டும் சந்திப்பேன் என்று நினைக்கவில்லை; அதற்கு எந்தத் தேவையும் இல்லை,” என்று கூறினார்.

தனது மகள் இறந்ததிலிருந்து, 49வது நாள் மற்றும் 100வது நாள் சடங்குகள் உட்பட, யாப்பிற்காகப் பௌத்த பிரார்த்தனைகளையும் சடங்குகளையும் செய்து வருவதாக வோங் கூறினார்.

20,000 பௌத்த மறைநூல் பிரதிகளை அச்சிட்டு கோயில்களுக்கு விநியோகிக்க ஏற்பாடு செய்ததைத் தவிர, இந்தச் சோகத்திற்குப் பிறகு வேலைக்குத் திரும்புவதற்கே தாம் போராடியதாகவும், தன் குழுவினருக்குத் தன் உதவி தேவைப்பட்டதால் மட்டுமே தொடர்ந்து பணியாற்றி வருவதாகவும் வோங் கூறினார்.

மேலும், தங்களின் மற்றொரு மகளின் வாழ்க்கை பாதிக்கப்படக் கூடாது என்பதால், இந்த வழக்கை பற்றி அவரிடம் எவ்வளவு பேசுவது என்பதில் குடும்பத்தினர் கவனமாக இருக்க வேண்டியுள்ளது.

எங்களின் தற்போதைய சூழ்நிலையில், இது எங்களுக்கு இரண்டாவது மன உளைச்சலாக (trauma) உணர்கிறோம், அதனால் மகளை இந்த விஷயங்களில் ஈடுபடுத்துவதைத் தவிர்க்க முயல்கிறேன்.

முக்கியமான விஷயங்களை மட்டுமே அவரிடம் விவாதிக்கிறேன். மற்ற விஷயங்களை அவரிடம் அதிகம் சொல்வதில்லை என்று அவர் மேலும் கூறினார்.