பெட்டாலிங் ஜெயா நாடாளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து இன்று அதிகாலை விலகிய லீ சியான் சுங், மாநில மற்றும் உள்ளாட்சி அமைப்புகள் நடத்திய கூட்டங்களில் பெரும்பாலும் கலந்து கொள்ளவில்லை என்று பிகேஆர் தலைவர் ஒருவர் குற்றம் சாட்டியுள்ளார்.
திங்கள்கிழமை அன்று கட்சியிலிருந்து ராஜினாமா செய்ய திட்டமிட்டுள்ள லீ, பெட்டாலிங் ஜெயா உள்ளூர் திட்டம் குறித்து விவாதிப்பதற்கான கூட்டங்களிலும் முறையாகப் பங்கேற்கத் தவறினார் என்று பிகேஆர் துணைப் பொதுச் செயலாளர் பிரையன் இங் கூறியுள்ளார்.
நிலப் பயன்பாடு, போக்குவரத்து, பொது வசதிகள் மற்றும் நகரத்தின் எதிர்காலத் திட்டமிடல் உள்ளிட்ட நகர்ப்புற மேம்பாட்டைத் தீர்மானிப்பதில் இந்த உள்ளூர் திட்டம் ஒரு முக்கியமான ஆவணமாகும் என்று இங் தெரிவித்தார்.
அவர் நாடாளுமன்ற உறுப்பினர் என்ற முறையில் இக்கூட்டங்களுக்கு அழைக்கப்பட்டார், ஆனால் பெரும்பாலான கூட்டங்களில் அவர் கலந்து கொள்ளவில்லை.
மக்களுடைய பிரச்சினைகளுக்கு அவர் உண்மையாகவே தீர்வு காண விரும்பியிருந்தால், முதலில் அவர் கூட்டங்களில் பங்கேற்றிருக்க வேண்டும், என்று அவர் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
எதிர்க்கட்சிகளுடன் தொடர்பு வைத்துக் கொண்டு கட்சியில் நீடித்திருக்காமல், லீ “கண்ணியமான முறையில் இன்னும் முன்னதாகவே” கட்சியிலிருந்து ராஜினாமா செய்திருக்க வேண்டும் என்றும் இங் கூறினார்.
பிகேஆர் கட்சியிலிருந்து மூன்று ஆண்டுகள் தற்காலிக நீக்கம் செய்யப்பட்டதைத் தொடர்ந்து, பெட்டாலிங் ஜெயா நாடாளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து லீ சியான் சுங் விலகுவதாக இன்று அதிகாலை அறிவித்திருந்தார்.
நகர்ப்புற மறுசீரமைப்புச் சட்டம், வெளிநாட்டுத் தொழிலாளர் ஆட்சேர்ப்பு, எஸ்டிபிஎம் மாணவர்களுக்கான பல்கலைக்கழக சேர்க்கை மற்றும் சிலாங்கூர் மாநிலத்தின் இஸ்லாமியரல்லாத வழிபாட்டுத் தலங்களுக்கான வழிகாட்டுதல்கள் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களில் தான் வெளிப்படையாகக் குரல் கொடுத்ததே தனது தற்காலிக நீக்கத்திற்கு சாத்தியமான காரணமாக இருக்கலாம்.
லீ ஒரு செயலற்ற கட்சி உறுப்பினர் என்று பிகேஆர் தலைவரும் பிரதமருமான அன்வார் இப்ராகிம் இன்று மதியம் வெளியிட்ட அறிக்கையைத் தொடர்ந்து இங்கின் இந்த கருத்துக்கள் வெளிவந்துள்ளன.
கட்சிக் கூட்டங்களில் லீ கடந்த ஓராண்டாகக் கலந்து கொள்ளவில்லை என்றும், ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற கட்சி மாநாட்டிலும் அவர் பங்கேற்கவில்லை என்றும் அன்வார் கூறினார்.
2022 பொதுத் தேர்தலில் பெட்டாலிங் ஜெயா நாடாளுமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட லீ, கடந்த மே மாதம் பெர்சாமா கட்சியின் தொடக்க விழாவில் கலந்து கொண்டதில் இருந்தே பிகேஆர் தலைமையுடன் முரண்பட்டிருந்தார்.
இருப்பினும், அந்த கட்சி ஏற்பாடு செய்த நிகழ்வுகளில் தான் கலந்து கொண்டதை நியாயப்படுத்திய லீ, தனது தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் நடைபெற்ற நடவடிக்கைகளில் மட்டுமே தான் பங்கேற்றதாகத் தெரிவித்தார்.
அவருக்கு பிகேஆர் கட்சியின் ஒழுங்குமுறை வாரியத்தால் விளக்கமளிக்கும் நோட்டீஸ் அனுப்பப்பட்டது; அதன் பின்னர் அவர் கட்சியின் மத்திய தலைமைத்துவக் குழுவிலிருந்து ராஜினாமா செய்தார்.
-fmt
























