அதிகாரத்திற்கான போட்டியை நிறுத்துமாறு அரசியல் தலைவர்களுக்கு சிலாங்கூர் சுல்தான் அறிவுறுத்தல்

அரசியல் தலைவர்கள் தங்களது மோதல்களையும் அதிகாரப் போட்டிகளையும் நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தியுள்ள சிலாங்கூர் சுல்தான், சுல்தான் ஷரஃபுதீன் இத்ரிஸ் ஷா, இத்தகைய கருத்து வேறுபாடுகள் பிளவுகளுக்கு வழிவகுக்கும் என்று எச்சரித்துள்ளார்.

இன்று வெள்ளிக்கிழமை தொழுகைக்குப் பிறகு, முன்னாள் சிலாங்கூர் முதல்வர்களான கிர் தோயோ மற்றும் அஸ்மின் அலி ஆகியோரையும், தற்போதைய முதல்வர் அமிருதின் ஷாரியையும் சந்தித்த பின்னர் சுல்தான் ஷரஃபுதீன் இந்தச் செய்தியைத் தெரிவித்தார்.

அதற்குப் பதிலாக, மாநிலத்தின் வளர்ச்சி, மக்களின் நலன் மற்றும் தேவையுடையோரின் தேவைகள் ஆகியவற்றில் மட்டுமே கவனம் செலுத்தப்பட வேண்டும் என்று சிலாங்கூர் அரச மாளிகையின் சமூக ஊடகப் பதிவின்படி சுல்தான் ஷரஃபுதீன் தெரிவித்துள்ளார்.

அரசியல் கருத்து வேறுபாடுகளும் சித்தாந்தங்களும் சிலாங்கூர் மாநிலம் மற்றும் அதன் மக்களின் நலன்களுக்கான ஒத்துழைப்பைத் தடுக்கக் கூடாது என்று சுல்தான் ஷரஃபுதீன் கூறினார். தலைவர்கள் தங்களது சொந்த நலன்களையோ அல்லது தங்களது கட்சிகளின் நலன்களையோ விட மக்களின் நலன்களுக்கு முன்னுரிமை அளித்து, நேர்மையுடன் தங்கள் பொறுப்புகளை நிறைவேற்ற வேண்டும்.

சிலாங்கூரின் வளர்ச்சியானது நல்லிணக்கம் மற்றும் நிர்வாக ஸ்திரத்தன்மையோடு கைகோர்த்துச் செல்ல வேண்டும் என்பதை அவர் அரசியல் தலைவர்களுக்கு நினைவூட்டினார். கருத்து வேறுபாடுகளைக் கையாளும் போது அரசியல் தலைவர்கள் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட வேண்டும் என்றும் அவர் கூறினார்.

 

 

 

-fmt