மதுபோதையில் மோட்டார் சைக்கிள் ஓட்டிய நபர் மோதியதில் இரண்டு மாரத்தான் ஓட்டப்பந்தய வீரர்கள் பாதிக்கப்பட்டனர்

ஸ்டாண்டர்ட் சார்ட்டர்ட் மராத்தான்( Standard Chartered Marathon) போட்டி நடைபெறும் பாதையை குறிக்கும் வகையில் போக்குவரத்து கூம்புகளுடன் அங்கு பணியில் நின்றிருந்த காவலர்களைக் கடந்து சென்ற மோட்டார் சைக்கிள், போட்டியில் பங்கேற்ற இருவருடன் மோதியது.

சாலையில் கிடந்த ஒருவரைச் சுற்றி பல ஓட்டக்காரர்கள் கூடி நிற்பதையும், ஒரு போக்குவரத்து காவலர் விரைந்து வருவதையும் காட்டும் காணொளியை, ஒரு இணையவாசி ‘த்ரெட்ஸ்’ தளத்தில் பகிர்ந்திருந்தார்.

கோலாலம்பூர் ஸ்டாண்டர்ட் சார்ட்டர்ட் மரத்தான் போட்டியில் பங்கேற்ற இருவர், இன்று காலை ஜாலான் முன்ஷி அப்துல்லா பகுதியில் மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் ஒருவரால் மோதப்பட்டனர்.

கோலாலம்பூர் போக்குவரத்து காவல்துறைத் தலைவர் சம்சூரி இசா கூறுகையில், ஆரம்பகட்ட விசாரணையில், 21 வயதான மோட்டார் சைக்கிள் ஓட்டுநரும் அவரது 19 வயதான பின்னிருக்கை பயணியும், கூம்புகள் வைத்து அடையாளப்படுத்தப்பட்டிருந்த மரத்தான் பாதையை கடந்து சென்றது தெரியவந்துள்ளது.

கடமையில் இருந்த காவலர்கள் அந்த ஓட்டுநரை நிறுத்துமாறு உத்தரவிட்டனர். ஆனால், அவர் தப்பிச் செல்ல முயன்று, போக்குவரத்துக்கு எதிர்திசையில் மோட்டார் சைக்கிளை ஓட்டியதாகவும், அப்போது இரு மரத்தான் பங்கேற்பாளர்கள் மீது மோதியதாகவும் கூறப்படுகிறது.

50 வயதான பெண் பங்கேற்பாளர் கழுத்தில் காயமடைந்துள்ளார். அவர் பிரின்ஸ் கோர்ட் மருத்துவ மையத்தில் சிகிச்சை பெற்று வருகிறார். மற்றொரு 41 வயதான ஆண் பங்கேற்பாளரின் வலது முழங்கால் மற்றும் கையில் காயங்கள் ஏற்பட்டுள்ளன.

மோட்டார் சைக்கிள் ஓட்டுநரிடம் மேற்கொள்ளப்பட்ட ஆரம்பகட்ட மதுபானப் பரிசோதனையில், 100 மில்லிலிட்டர் இரத்தத்திற்கு 164 மில்லிகிராம் என்ற அளவில் மதுபானம் இருப்பது உறுதி செய்யப்பட்டது என்று சம்சூரி தனது அறிக்கையில் தெரிவித்தார்.

மோட்டார் சைக்கிள் ஓட்டுநரும் பின்னிருக்கை பயணியும் மேலதிக பரிசோதனைகளுக்காக, இரத்தம் மற்றும் சிறுநீர் மாதிரிகள் உள்ளிட்ட பரிசோதனைகளுக்காக கோலாலம்பூர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் இன்று முதல் திங்கட்கிழமை வரை மூன்று நாட்களுக்கு காவலில் வைக்கப்பட்டுள்ளார். பின்னிருக்கை பயணி நாளை வரை இரண்டு நாட்களுக்கு காவலில் வைக்கப்பட்டுள்ளார்.

மதுபோதையில் வாகனம் ஓட்டியதாகவும், அரசு ஊழியர் ஒருவர் தனது கடமையைச் செய்யும்போது அவரைத் தன்னிச்சையாகத் தடுத்ததாகவும் இந்த வழக்கு விசாரிக்கப்பட்டு வருவதாக சம்சூரி தெரிவித்தார்.