கிளந்தான், பகாங், சபா மற்றும் திரெங்கானு ஆகிய மாநிலங்களின் பல பகுதிகளுக்குப் புதன்கிழமை வரை ‘எச்சரிக்கை’ நிலை தொடர் மழை அறிவிப்பை வானிலை ஆய்வு மையம் (மெட்மலேசியா) வெளியிட்டுள்ளது.
இது குறித்து மெட்மலேசியா வெளியிட்டுள்ள அறிக்கையில், கிளந்தானில் தானா மேரா, பாசிர் மாஸ், தும்பாட், கோத்தா பாரு, மாச்சாங், பாச்சோக், பாசிர் பூத்தே, கோல கிராய் மற்றும் ஜெலி ஆகிய மாவட்டங்களுக்கு இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.
பகாங் மாநிலத்தில் குவாந்தான், பெக்கான் மற்றும் ரொம்பின் ஆகிய பகுதிகள் பாதிக்கப்படக்கூடும். மேலும், திரெங்கானு மாநிலம் முழுவதற்கும் இந்த எச்சரிக்கை பொருந்தும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சபா மாநிலத்தில், கூடாட் மற்றும் சண்டாக்கான் ஆகிய பகுதிகளுக்கு உட்பட்ட பைத்தான், தெலுப்பிட், லாபுக் மற்றும் சுகுட், சண்டாக்கான் மற்றும் கினபாத்தாங்கான் ஆகிய இடங்களில் நாளை முதல் புதன்கிழமை வரை தொடர் மழை பெய்யும் என கணிக்கப்பட்டுள்ளது.
பொதுமக்கள் மெட்மலேசியாவின் அதிகாரப்பூர்வ இணையதளம், சமூக ஊடகத் தளங்கள் மற்றும் ‘மைசுவாச்சா’ கைபேசி செயலி ஆகியவற்றின் மூலம் அண்மைய வானிலைத் தகவல்களைப் பெற்றுக்கொள்ளலாம்.
மேலும் விவரங்களுக்கு, பொதுமக்கள் 1-300-22-1638 என்ற மெட்மலேசியா அவசர அழைப்பு எண்ணைத் தொடர்பு கொள்ளலாம்.
-fmt
























