முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக்கின் நிபந்தனை மன்னிப்பு மற்றும் வீட்டுக் காவல் விவகாரத்தில் நிலவும் கருத்து வேறுபாடுகளால், பாக்காத்தான் ஹராப்பான் கூட்டணியுடனான தங்களது கூட்டணி உறவுக்கு எந்தப் பாதிப்பும் இல்லை என்று பாரிசான் நேஷனல் தலைவர் அகமட் ஜாஹிட் ஹமிடி தெரிவித்துள்ளார்.
துருக்கிக்கு மேற்கொண்ட நான்கு நாள் அதிகாரப்பூர்வப் பயணத்தின் இறுதி நாளான இன்று இஸ்தான்புல்லில் செய்தியாளர்களிடம் பேசிய துணைப் பிரதமர் ஜாஹிட், ஒற்றுமை அரசாங்கத்தில் உள்ள கட்சிகளுக்கிடையேயான அரசியல் கருத்து வேறுபாடுகள் நிர்வாகத்தின் சுமூகமான செயல்பாட்டைப் பாதிக்கவில்லை என்று கூறினார்.
மத்திய மற்றும் மாநில அளவில் அரசியல் கூட்டணிகள் வேறுபடுவதைக் கருத்தில் கொண்டு, இந்த வேறுபாடுகள் முதிர்ச்சியுடன் கையாளப்படுவதாக ஜாஹிட் கூறியதாக வட்டாரங்கள் செய்தி வெளியிட்டுள்ளது.
மத்திய அரசாங்கத்தில் பாரிசான் மற்றும் பாக்காத்தான் ஆகியவை இணைந்து பணியாற்றினாலும், மாநில அளவில் மாறுபட்ட அரசியல் அணுகுமுறைகள் பின்பற்றப்படுவதற்கு உதாரணங்களாக ஜொகூர் மற்றும் நெகிரி செம்பிலான் மாநிலத் தேர்தல்களையும், தற்போது நடைபெற்று வரும் மலாக்கா தேர்தல் பிரச்சாரத்தையும் அவர் சுட்டிக்காட்டினார்.
எங்கள் உறவில் எந்தப் பிரச்சினையும் இல்லை, என்று முன்னாள் அம்னோ தலைவரான நஜிப்பிற்கு வழங்கப்பட்ட நிபந்தனை மன்னிப்பு மற்றும் வீட்டுக் காவல், ஒற்றுமை அரசாங்கத்தில் உள்ள பாரிசான் மற்றும் பாக்காத்தான் இடையேயான உறவைப் பாதிக்குமா என்று கேட்கப்பட்டபோது ஜாஹிட் பதிலளித்தார்.
நான்கு ஆண்டுகளுக்கும் மேலாக எங்களுக்குள் கருத்து வேறுபாடுகளோ, ஏன் சச்சரவுகளோ கூட ஏற்பட்டதில்லை.
நாங்கள் எங்கள் துறைகளை நிர்வகித்து வருகிறோம்; வாரந்தோறும் அமைச்சரவைக் கூட்டங்களை நடத்துகிறோம். அரசாங்கத்தின் பணிகள் தொழில்முறை நேர்த்தியுடன் மேற்கொள்ளப்படுகின்றன. எனது பார்வையில், மலேசியாவில் அரசியல் முதிர்ச்சி தற்போது உச்சக்கட்ட அளவை எட்டியுள்ளது, என்று அவர் கூறினார்.
எங்களுக்குள் மாறுபட்ட அரசியல் அணுகுமுறைகள் இருந்தாலும், இறைவன் நாடினால், அவை நாட்டின் அரசியல் ஸ்திரத்தன்மையைப் பாதிக்காது.
இந்த இரண்டு விவகாரங்களும் அரச மன்னிப்பு மற்றும் நீதிமன்ற உத்தரவைச் செயல்படுத்துவதில் தாக்கங்களை ஏற்படுத்தக்கூடிய சிக்கலான சட்டக் கேள்விகளை உள்ளடக்கியிருப்பதாக சட்டத்துறைத் தலைவர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
50 மில்லியன் ரிங்கிட் அபராதம் செலுத்தப்பட்டு நீதிமன்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்ட பிறகே ஏன் இந்தக் கவலைகளை சட்டத்துறைத் தலைவர் அலுவலகம் எழுப்பியது என்பது குறித்து சட்டத்துறைத் தலைவர் விளக்கமளிக்க வேண்டும் என்று சட்டம் மற்றும் நிறுவன சீர்திருத்த அமைச்சரும் அம்னோ தகவல் பிரிவுத் தலைவருமான அசாலினா ஓத்மான் சையத் வலியுறுத்தியுள்ளார்.
நஜிப்பின் நிபந்தனை மன்னிப்பைத் தொடர்ந்து கடந்த செப்டம்பர் மாதம் போக்குவரத்து அமைச்சர் பதவியிலிருந்து தனது ராஜினாமா கடிதத்தை வழங்கிய டிஏபி பொதுச்செயலாளர் லோக் சியூ ஃபூக், கோலாலம்பூர் தாமான் டூத்தாவில் உள்ள தனது இல்லத்திற்கு நஜிப் சென்றவுடன் தான் பதவியிலிருந்து விலகுவேன் என்பதை மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளார்.
எஸ்.ஆர்.சி இன்டர்நேஷனல் வழக்கில் தனது எஞ்சிய சிறைத் தண்டனையை வீட்டுக் காவலில் அனுபவிப்பதற்கு, 50 மில்லியன் ரிங்கிட் அபராதம் செலுத்த வேண்டும் என்ற நிபந்தனையின் பேரில் நஜிப்பிற்கு நிபந்தனை மன்னிப்பு வழங்கப்பட்டது.
அந்த அபராதத் தொகை வெள்ளிக்கிழமை செலுத்தப்பட்ட போதிலும், நிபந்தனை மன்னிப்பு மற்றும் அது தொடர்பான விடுவிப்பு உத்தரவை மறுஆய்வு செய்யும் வரை நஜிப்பின் வீட்டுக் காவலை ஒத்திவைக்குமாறு சட்டத்துறைத் தலைவர் அலுவலகம் பரிந்துரைத்துள்ளது.
-fmt
























