பருவமழை வெள்ள பாதிப்புகளை எதிர்கொள்ள 85 மருத்துவக் குழுக்கள் தயார் நிலையில் உள்ளன.

2026/2027ஆம் ஆண்டுக்கான வடகிழக்குப் பருவமழையை முன்னிட்டு, வெள்ள அபாயம் ஏற்படக்கூடிய சுகாதாரப் பராமரிப்பு நிலையங்களையும் சுகாதார அமைச்சு அடையாளம் கண்டுள்ளது.

இன்று காலை 6 மணி நிலவரப்படி, சிலாங்கூர் மற்றும் பேராக்கில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் 987 பேர் பாதிக்கப்பட்டு 7 நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

2026/2027-ஆம் ஆண்டிற்கான வடகிழக்கு பருவமழை காலத்தில் வெள்ள பாதிப்புகள் ஏற்பட்டால், அதைச் எதிர்கொள்வதற்காக 387 நபர்களைக் கொண்ட 85 அவசரகால மருத்துவக் குழுக்களை சுகாதார அமைச்சு தயார்படுத்தியுள்ளது.

இதுகுறித்து அந்த அமைச்சு வெளியிட்ட அறிக்கையில், இக்குழுக்களில் 36 விரைவு மதிப்பீட்டுக் குழுக்கள் (Rapid Assessment Teams), 34 விரைவுப் பதிலளிப்புக் குழுக்கள் (Rapid Response Teams) மற்றும் 15 மனநலம் மற்றும் உளவியல் ஆதரவுக் குழுக்கள் (Mental Health and Psychosocial Support Teams) அடங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

“தேவைக்கேற்ப இக்குழுக்கள் உடனடியாகப் பயன்படுத்தப்பட்டு, சுகாதார அபாயங்களை மதிப்பீடு செய்தல், மருத்துவச் சேவைகள் மற்றும் அவசரச் சிகிச்சைகளை வழங்குதல், தொற்றுநோய்களைக் கண்காணித்து அதைக் கட்டுப்படுத்துதல், அத்துடன் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மனநலம் மற்றும் உளவியல் ரீதியான ஆதரவை வழங்குதல் ஆகிய பணிகளை மேற்கொள்ளும்,” என்று கூறப்பட்டுள்ளது.

களப் பணிகளுக்கு ஆதரவாக 128 வாகனங்களை சுகாதார அமைச்சு தயார் நிலையில் வைத்துள்ளது. மேலும், ஒப்பந்தப் விநியோகஸ்தர்களின் களஞ்சியங்களில் உள்ள வெள்ள நிவாரணம் தொடர்பான மருந்துகளின் இருப்பு சீராக உள்ளதுடன், அது 1 முதல் 3 மாதங்கள் வரை போதுமானதாக இருக்கும் என்றும் மதிப்பிடப்பட்டுள்ளது.

தேசிய நெருக்கடி கால பதிலளிப்பு மையம் (National Crisis Response Centre) அக்டோபர் 27 முதல் விழிப்புடன் செயல்பட்டு வருகிறது. இது வெள்ள நிலைமைகள், சுகாதார அமைப்புகளின் தயார்நிலை ஆகியவற்றைத் தொடர்ந்து கண்காணித்து வருவதோடு, மாநில சுகாதார இலாகாக்கள் மற்றும் சம்பந்தப்பட்ட முகவர் நிறுவனங்களுடன் ஒருங்கிணைந்து மீட்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

வெள்ளத்தால் பாதிக்கப்படக்கூடிய நிலையில் உள்ள சுகாதார மையங்களையும், செயல்பாட்டுத் தடங்கல்கள் ஏற்பட்டால் பயன்படுத்தக்கூடிய மாற்று மையங்களையும் அமைச்சு அடையாளம் கண்டுள்ளது.

கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் டயாலிசிஸ் (Haemodialysis) சிகிச்சை தேவைப்படுவோர் உட்பட அதிக அபாயகரமான நிலையில் உள்ள நோயாளிகளை முன்கூட்டியே பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றுவதற்கான திட்டங்களும் வகுக்கப்பட்டுள்ளன.

இன்று காலை 6 மணி நிலவரப்படி, சிலாங்கூர் மற்றும் பேராக்கில் வெள்ளப்பெருக்கு பதிவாகியுள்ளது. இதனால் 987 பேர் இடம்பெயர்ந்து 7 நிவாரண மையங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.