உணவு நச்சுப் புகாரைத் தொடர்ந்து தயாரிப்புகள் பாதுகாப்புச் சோதனையில் தேறியதாக கார்டினியா அறிவிப்பு

தங்கள் நிறுவனத்தின் ரொட்டி மற்றும் கேக்குகளைச் சாப்பிட்ட குழந்தைகள் நோய்வாய்ப்பட்டதாகக் கூறப்பட்ட புகாரைத் தொடர்ந்து, தங்களின் தயாரிப்புகள் சுயாதீன பாதுகாப்புச் சோதனைகளில் தேர்ச்சி பெற்றுள்ளதாகவும், தொழிற்சாலையின் பாதுகாப்பு நடைமுறைகள் குறித்து சுகாதார அமைச்சக அதிகாரிகள் திருப்தி தெரிவித்துள்ளதாகவும் கார்டினியா பேக்கரீஸ் சென்டிரியன் பெர்ஹாட் தெரிவித்துள்ளது.

அங்கீகரிக்கப்பட்ட சுயாதீன ஆய்வகத்தால் நடத்தப்பட்ட சோதனைகளில், சர்ச்சைக்குரிய அந்தத் தயாரிப்புகள் உணவுப் பாதுகாப்புத் தரநிலைகளைப் பூர்த்தி செய்துள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளதாக கார்டினியா கூறியுள்ளது.

புகார்கள் குறித்த விசாரணையின் ஒரு பகுதியாக, சுகாதார அமைச்சக அதிகாரிகள் இன்று தங்களின் தொழிற்சாலையில் நேரில் ஆய்வு மேற்கொண்டதாகவும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

எங்களது நிலையான செயல்பாட்டு நடைமுறைகள் மற்றும் உணவுப் பாதுகாப்பு நடைமுறைகள் குறித்து சுகாதார அமைச்சகம் திருப்தி தெரிவித்துள்ளது, என்று அந்நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

கார்டினியா ஒரிஜினல் கிளாசிக் ஒயிட் பிரட் மற்றும் ட்விக்கீஸ் சாக்-ஏ-லாட் ஆகியவற்றைச் சாப்பிட்ட பிறகு தனது மகன்கள் நோய்வாய்ப்பட்டதாகப் பெண் ஒருவர் சமூக வலைதளத்தில் பதிவிட்டதைத் தொடர்ந்து இந்தச் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.

இந்தப் புகாரைத் தொடர்ந்து, சுகாதார அமைச்சகம் ஞாயிற்றுக்கிழமை விசாரணையைத் தொடங்கியது; இதன் ஒரு பகுதியாக, புகார்தாரரிடமிருந்து மீதமிருந்த தயாரிப்புகள் மற்றும் உறைகளை அதிகாரிகள் சோதனைக்காகச் சேகரித்தனர்.

சில தொகுப்பு எண்கள் மற்றும் காலாவதி தேதிகள் இல்லாததால், அந்தத் தயாரிப்புகளைக் கண்டறிவது கடினமாக இருப்பதாக அமைச்சகம் முன்னதாகத் தெரிவித்திருந்தது. மேலும், கார்டினியாவின் ஆரம்பகட்ட உள் சோதனைகளால், கூறப்படும் உடல்நலக் குறைவுக்கான காரணத்தைக் கண்டறிய முடியவில்லை என்றும் அமைச்சகம் எச்சரித்திருந்தது.

சம்பந்தப்பட்ட வாடிக்கையாளரைத் தாங்கள் சந்தித்து, பகுப்பாய்விற்காக அந்த ரொட்டியைப் பெற்றுக்கொண்டதாக கார்டினியா முன்னதாகத் தெரிவித்திருந்தது. தனது தயாரிப்பு முறைகளில் எவ்வித மாற்றமும் செய்யப்படவில்லை என்றும், உணவுப் பாதுகாப்பு தொடர்பான நிலையான செயல்பாட்டு நடைமுறைகள்  தொடர்ந்து கண்டிப்பாகப் பின்பற்றப்படும் என்றும் அந்நிறுவனம் கூறியிருந்தது.

சுயாதீன ஆய்வகத்தால் பரிசோதிக்கப்பட்ட தயாரிப்புகள், புகாரில் குறிப்பிடப்பட்டுள்ள அதே தொகுப்புகளைச் சேர்ந்தவையா என்பதை அந்நிறுவனம் குறிப்பிடவில்லை. சுகாதார அமைச்சகம் தனது சொந்த ஆய்வகப் பரிசோதனை முடிவுகளை இன்னும் அறிவிக்கவில்லை.

 

 

-fmt