கோலா குபு பாருவின் சுங்கை பெர்டாக்கில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கில் ஐந்து உடல்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன, மூன்று பேரைக் காணவில்லை.
திங்கட்கிழமை ஏற்பட்ட திடீர் வெள்ளப் பெருக்கில் சிக்கி, ஏழு வெளிநாட்டினர் உட்பட எட்டு பேர் பலத்த நீரோட்டத்தில் அடித்துச் செல்லப்பட்டனர்.
சுகாய் சிலாங்கூர் அணையில் நீர் திறப்பு நிறுத்தப்பட்டிருப்பதை நீட்டிக்க, தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை அணை நிர்வாகத்துடன் இணைந்து பணியாற்றி வருகிறது. கோலா குபு பாருவில் உள்ள சுகாய் பெர்டாக்கில் (Sungai Pertak) மாயமான மூன்று நபர்களைத் தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
தேடல் பகுதியை மேலும் விரிவடையச் செய்யாமல் தடுக்கவும், பாதிக்கப்பட்டவர்களைக் கண்டறிவதில் ஏற்படும் சிக்கல்களைத் தவிர்க்கவும் திடீர் நீர்ரோட்ட மாற்றங்களைத் தடுப்பது அவசியம் என்று தீயணைப்புத் துறையின் செயல்பாட்டுப் பிரிவு இயக்குநர் அப்துல் ரசாக் மூடா தெரிவித்தார்.
“தேடல் பகுதியை ஒரு குறிப்பிட்ட எல்லைக்குள் வைத்திருக்க, பாதிக்கப்பட்ட அனைவரையும் கண்டுபிடிக்கும் வரை நீர் திறப்பை நிறுத்தி வைப்பதை உறுதி செய்ய அணை நிர்வாகத்துடன் தொடர்பு கொண்டுள்ளோம்,” என்று அவர் கூறியதாக பெர்னாமா செய்தி நிறுவனம் மேற்கோளிட்டுள்ளது.
சம்பவம் நடந்த இடத்தில் இருந்து அணை வரையும் சுமார் 3.5 கி.மீ தொலைவுக்குத் தேடல் பகுதி பரவியுள்ளது என்றும், அது நான்கு மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டு, அதில் மூன்று மண்டலங்கள் தலா 1 கி.மீ சுற்றளவைக் கொண்டுள்ளன என்றும் ரசாக் கூறினார்.
மேலும், மீட்புப் படையினரால் எளிதில் செல்ல முடியாத பகுதிகளுக்குச் சென்று உதவ ஐந்து ட்ரோன்கள் (Drones) பயன்படுத்தப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
மாயமான மூன்று நபர்களும் பெர்தாக் பாலத்தின் மேல்நோக்கிய பகுதியிலேயே (Upstream) இருக்கக்கூடும் என நம்பப்படுகிறது.
இன்றையத் தேடுதல் பணியில் பல்வேறு முகமைகளைச் சேர்ந்த மொத்தம் 124 பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர். வானிலை நிலவரத்தைப் பொறுத்து மாலை 6 மணி வரை இந்தப் பணி தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது. தேவைப்பட்டால் காவல்துறை ஒத்துழைப்புடன் அடுத்தகட்ட நடவடிக்கைகள் ஒருங்கிணைக்கப்படும்.
நேற்று பிற்பகல் 2 மணிக்குத் தொடங்கப்பட்ட ட்ரோன் நடவடிக்கைகள் இன்றும் தொடர்ந்தன என்றும், காலை 8 மணி முதல் மாலை 7 மணி வரை வான்வழி கண்காணிப்பு நடைபெற்று வருவதாகவும் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையின் விமானப் பிரிவின் உதவி கண்காணிப்பாளர் அலிஃப் அப்துல் கனி தெரிவித்தார்.
திங்கட் கிழமை மாலை 5.30 மணியளவில் நடந்த இந்தச் சம்பவத்தில், மலேசியர் ஒருவர் மற்றும் 7 வெளிநாட்டினர் உட்பட எட்டு பேர் வலுவான நீரோட்டத்தில் அடித்துச் செல்லப்பட்டனர்.
அவர்களில் மலேசியரான வி. விஜயன் (36), நேபாளத்தைச் சேர்ந்த கபாலி (49), மற்றும் இந்தியாவைச் சேர்ந்த பி. குஞ்சன்மலை (35) உட்பட ஐந்து பேர் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டனர். மற்ற இருவரில் ஒரு இந்தியர் மற்றும் ஒரு இலங்கை நாட்டவர் அடையாளங்கள் இன்னும் உறுதி செய்யப்பட்டு வருகின்றன.
தற்போது இரு இந்தியர்கள் மற்றும் ஒரு யேமன் நாட்டவரைக் கண்டறியும் தேடுதல் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
























